பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அம்மாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் உரை


அம்மாவின் வருகை மற்றும் அவரது ஆசீர்வாதங்களின் பிரகாசத்தை வார்த்தைகளில் விவரிப்பது கடினம், அதை நம்மால் உணர மட்டுமே முடியும்;

”அன்பு, இரக்கம், சேவை, தியாகம் ஆகியவற்றின் உருவம் அம்மா. அவர் இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்தை சுமப்பவர்”

“சுகாதாரத் துறையாக இருந்தாலும் சரி, கல்வித் துறையாக இருந்தாலும் சரி, அம்மாவின் வழிகாட்டுதலின் கீழ் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் மனித சேவைக்கும், சமூக நலனுக்கும் புதிய உயரங்களை அளித்துள்ளன”

“அம்மாவுக்கு உலகம் முழுவதும் ஆதரவாளர்கள் உள்ளனர், அவர் எப்போதும் இந்தியாவின் இமேஜையும் அதன் நம்பகத்தன்மையையும் வலுப்படுத்தியுள்ளார்”

‘’பெருந்தொற்றுக்குப் பிந்தைய உலகில் இன்று ஏற்றுக்கொள்ளப்படும் வளர்ச்சிக்கான இந்தியாவின் மனிதம் சார்ந்த அணுகுமுறையின் பிரதிபலிப்பாக அம்மா திகழ்கிறார்’’

Posted On: 03 OCT 2023 1:53PM by PIB Chennai

அம்மா, மாதா அமிர்தானந்தமயி 70-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் உரையாற்றினார்.

மாதா அமிர்தானந்தமயி  70 வது பிறந்தநாளில்  நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வாழ்த்தி பிரதமர் தனது உரையைத் தொடங்கினார், மேலும் அவர் சேவை மற்றும் ஆன்மீகத்தின் அடையாளமாக திகழ்கிறார் என்று கூறினார். உலகம் முழுவதும் அன்பையும் இரக்கத்தையும் பரப்புவதற்கான தனது பணி தொடர்ந்து முன்னேறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். அம்மாவின் ஆதரவாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் திரண்டிருந்த அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மாவுடனான தனது தொடர்பைக் குறிப்பிட்ட பிரதமர், கட்ச்சில் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பிறகு அவருடன் நீண்ட காலம் பணியாற்றியதை நினைவு கூர்ந்தார். அமிர்தபுரியில் அம்மாவின் 60-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. "இன்றும், அம்மாவின் சிரித்த முகத்தின் அரவணைப்பு மற்றும் அன்பான தன்மை முன்பு போலவே உள்ளது" என்று திரு மோடி கூறினார். கடந்த 10 ஆண்டுகளில், அம்மாவின் பணியும், உலகில் அவரது தாக்கமும் பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் அம்மா முன்னிலையில் அமிர்தா மருத்துவமனையைத் திறந்து வைத்ததை நினைவு கூர்ந்தார். "அம்மாவின் வருகை மற்றும் அவரது ஆசீர்வாதங்களின் பிரகாசத்தை வார்த்தைகளில் விவரிப்பது கடினம், அதை நாம் உணர மட்டுமே முடியும்", என்று அவர் வலியுறுத்தினார். அன்பு, இரக்கம், சேவை மற்றும் தியாகத்தின் உருவமாக அம்மா திகழ்கிறார் என்றும், அவர் இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்தை சுமப்பவர் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

"சுகாதாரம் அல்லது கல்வித் துறை எதுவாக இருந்தாலும், அம்மாவின் வழிகாட்டுதலின் கீழ் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் மனித சேவை மற்றும் சமூக நலனுக்கு புதிய உயரங்களை அளித்தன" என்று பிரதமர் சுட்டிக் காட்டினார். நாட்டில் தொடங்கப்பட்ட தூய்மைப் பணியைக் குறிப்பிட்ட அவர், அதை வெற்றிகரமாக்க முன்வந்த முதல் ஆளுமைகளில் அம்மாவும் ஒருவர் என்றார். கங்கை நதிக்கரையில் கழிவறைகள் கட்ட ரூ.100 கோடி நன்கொடை அளித்ததாகவும், இது தூய்மைக்கு புதிய ஊக்கத்தை அளித்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். அம்மாவுக்கு உலகம் முழுவதும் ஆதரவாளர்கள் உள்ளனர், அவர் எப்போதும் இந்தியாவின் பெருமையையும் அதன் நம்பகத்தன்மையையும் வலுப்படுத்தியுள்ளார். உத்வேகம் மிகவும் பெரியதாக இருக்கும்போது, முயற்சிகளும் சிறந்ததாக மாறும்", என்று அவர் மேலும் கூறினார்.

பெருந்தொற்றுக்குப் பிந்தைய உலகில் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிக்கான இந்தியாவின் மனிதர்களை  மையப்படுத்தும்  அணுகுமுறையின் பிரதிபலிப்பாக அம்மா போன்ற ஆளுமைகள் திகழ்வதாகக் குறிப்பிட்ட பிரதமர்ஊனமுற்றோருக்கு அதிகாரமளித்தல், மறுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்தல் போன்ற மனிதாபிமான தியாகத்தை அம்மா எப்போதும் செய்துள்ளார் என்று கூறினார். சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் நாரிசக்தி வந்தன் அதினியம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் உறுதியுடன் முன்னேறி வரும் இந்தியா, அம்மாவைப் போன்ற உத்வேகமூட்டும் ஆளுமையைக் கொண்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டினார். உலகில் அமைதியையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்த அம்மாவின் தொண்டர்கள் தொடர்ந்து இதுபோன்ற பணிகளைச் செய்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்து, உரையை நிறைவு செய்தார் பிரதமர்.

---

 

ANU/AD/PKV/KPG

 


(Release ID: 1963637)