உள்துறை அமைச்சகம்

குஜராத்தின் காந்திநகரில் சுமார் ரூ.1651 கோடி மதிப்பிலான அகமதாபாத் மாநகராட்சி மற்றும் அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா இன்று அடிக்கல் நாட்டி முடிந்த பணிகளைத் தொடங்கி வைத்தார்

Posted On: 30 SEP 2023 6:21PM by PIB Chennai

குஜராத் தலைநகர் காந்திநகரில் சுமார் ரூ.1651 கோடி மதிப்பிலான அகமதாபாத் மாநகராட்சி மற்றும் அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின்  பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார். சர்கேஜ், படாஜ் கிராமம், ஒக்னாஜ், ஜகத்பூர் கிராமம் மற்றும் திரகாட் ஆகிய இடங்களில் உள்ள குளங்களைப் புனரமைக்கும் பணிகளுக்கும் திரு அமித் ஷா அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 

காந்திநகர் மக்களவைத் தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படாத வார்டு இல்லை. அகமதாபாத்மாநகராட்சியும் குஜராத் மாநில அரசும் பொதுமக்களின் கோரிக்கைக்கு முன்பே வளர்ச்சிப் பணிகளை முனைப்புடன் தொடங்கியுள்ளன என்றும்  இதற்காக அகமதாபாத் மாநகராட்சி மற்றும் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலுக்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார். காந்திநகர் மக்களவைத் தொகுதியில் கடந்த 52 மாதங்களில் ரூ.17,544 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று சுமார் ரூ.1650 கோடி செலவில்  39 திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என்று திரு. ஷா கூறினார். இவற்றில், 18 திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு, 21 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

 

பிரதமர் திரு. நரேந்திர மோடி கடந்த மூன்று மாதங்களில் உலகெங்கிலும் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியுள்ளார் என்று திரு அமித் ஷா கூறினார். புதிய நாடாளுமன்றம், சந்திரயான-3, ஜி 20, மகளிர் இட ஒதுக்கீடு சட்டம்  ஆகிய நான்கு  முக்கியமான பணிகளைப்  பிரதமர் மோடி வெறும் மூன்று மாதங்களில் செய்துள்ளார்.பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவை உலகிலேயே முதலாவதாக மாற்ற உறுதிபூண்டுள்ளது என்பதையே இது காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

 

பிரதமர் திரு நரேந்திர மோடி பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார் என்று கூறிய திரு அமித் ஷா,இவற்றில், சமீபத்தில் தொடங்கப்பட்ட விஸ்வகர்மா திட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றார். நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் பல்வேறு வகையான சிறு தொழில்களை செய்து வருவதாகவும், அவர்கள் இல்லாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார். விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், பிரதமர் திரு. நரேந்திர மோடி அத்தகையவர்களை திறன்மிக்கவர்களாக மாற்றுவதற்கும், அவர்களை வல்லுநர்களாக மாற்றுவதற்கும், அவர்களுக்குக் கருவித் தொகுப்புகளை வழங்குவதற்கும், இயந்திரங்கள் வாங்க ரூ .3 லட்சம் வரை கடன் வழங்குவதற்கும் ஏற்பாடுகளை செய்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

 

வரும் நாட்களில் குஜராத்தின் சுற்றுச்சூழல் மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் மாறுவதற்காக தங்கள் வீட்டைச் சுற்றி குறைந்தது 3 மரங்களை நடுமாறு திரு அமித் ஷா அங்கிருந்தவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

******* 

AD/ANU/SMB/KRS(Release ID: 1962493) Visitor Counter : 103


Read this release in: English , Urdu , Assamese , Telugu