வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் பருவநிலை மாற்றம் குறித்த நடவடிக்கையில் இந்தியா முன்னணியில் உள்ளது: அர்பன் ஷிஃப்ட் ஆசியா மன்றத்தில் திரு ஹர்தீப் எஸ் பூரி

Posted On: 25 SEP 2023 4:04PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையின் கீழ் பருவநிலை மாற்றப்  பிரச்சனையில் இந்தியா முன்னோடி நடவடிக்கை எடுத்துள்ளது. அவரது லட்சியமான பஞ்சாமிர்த செயல் திட்டம் பருவநிலையை எதிர்கொள்வதற்கான அடித்தளமாகும், நமது பதிலின் உந்துதல் வேகமாக நகரமயமாகி வரும் போக்கினை   மையமாகக் கொண்டுள்ளது என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை  அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார். பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டின்படி, பருவநிலை மாற்றத்தில் சிறப்பாக செயல்படும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியா உள்ளது என்று அவர் கூறினார்.

 

அர்பன் ஷிஃப்ட் ஃபோரம் (ஆசியா) தொடக்க அமர்வில் திரு ஹர்தீப் எஸ் பூரி இன்று உரையாற்றினார். பரவலாக பாராட்டப்பட்ட ஜி 20 தலைமையின் கீழ், நிலையான நகரமயமாக்கல் குறித்த உரையாடலை இந்தியா தொடங்கியது என்று அவர் கூறினார். மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்கள், நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி வழிநடத்துகின்றன என்று அமைச்சர் குறிப்பிட்டார். பிரதமரின் வீட்டு வசதித் திட்டம்- நகர்ப்புறம் பற்றிப் பேசிய அவர், சுமார் 11.9 மில்லியன் வீடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன; 11.3 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளின் பணிகள்  தொடங்கப்பட்டுள்ளன; சுமார் 7.7 மில்லியன் வீடுகள் ஏற்கனவே பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றார்.

 

தூய்மை இந்தியா இயக்கம் - நகர்ப்புறம் குறித்தும் அமைச்சர் பேசினார், இதன் விளைவாகத் தூய்மையை நோக்கிய நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுமார் 7.36 மில்லியன் தனிநபர் மற்றும் சமூகக் கழிப்பறைகள் இந்தியாவின் நகரங்களைத் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாதவையாக மாற்றியுள்ளன. திடக்கழிவு பதப்படுத்துதல் 2014ல் 17 சதவீதமாக இருந்தது இன்று 75 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.

 

அம்ருத் இயக்கத்தின் வெற்றி குறித்து விவரித்த திரு பூரி, 500 நகரங்களில் (இந்திய மக்கள் தொகையில் 60%) கிட்டத்தட்ட 14 மில்லியன் குடிநீர்க் குழாய் இணைப்புகள், 13.5 மில்லியன் கழிவுநீர்க் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் .

 

முதலாவது அர்பன் ஷிஃப்ட் மன்றம் (ஆசியா) புதுதில்லியில் உள்ள ஹயாத் ரீஜென்சியில் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.

 

அர்பன் ஷிஃப்ட் ஆசியா மன்றத்தின் தொடக்க அமர்வில் இந்திய அரசு, தேசிய நகர்ப்புற மேம்பாட்டு  நிறுவனம் , ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் , ஆசிய மேம்பாட்டு வங்கி , உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி மற்றும் பிற அமைப்புகள், நிறுவனங்களின் பிரமுகர்களும் கலந்து கொண்டனர் .

 

இந்தியா, இந்தோனேசியா, சீனா, வியட்நாம், மலேசியா, நேபாளம், பிலிப்பைன்ஸ், ஜோர்டான்  இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள தேசிய அரசுகள் மற்றும் நகரங்களின் சுமார் 150 பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச அமைப்புகள், நிதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பிராந்திய நகர்ப்புற சவால்கள் மற்றும்  தீர்வுகள் குறித்த அறிவையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

 

ஒருங்கிணைந்த மற்றும் நிலையான நகர்ப்புற வளர்ச்சியின் பல்வேறு அம்சங்கள் குறித்து பிராந்திய நகரங்களுக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டை வழங்குவதே இந்த மன்றத்தின் முக்கிய நோக்கமாகும்.

 

******

ANU/SM/SMB/KRS



(Release ID: 1960717) Visitor Counter : 92


Read this release in: English , Urdu , Hindi , Telugu