பிரதமர் அலுவலகம்
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மக்களவையில் பிரதமர் உரையாற்றினார்
முதல் நடவடிக்கையாக, நாரிசக்தி வந்தன் திட்டத்தைப் பிரதமர் அறிமுகம் செய்தார்
"அமிர்த கால விடியலில், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்குச் செல்வதன் மூலம் எதிர்காலத்திற்கான உறுதியுடன் இந்தியா முன்னேறி வருகிறது"
"தீர்மானங்களை நிறைவேற்றி, புதிய உற்சாகத்துடனும் சக்தியுடனும் புதிய பயணத்தைத் தொடங்க வேண்டிய தருணம் இது"
"செங்கோல் நமது கடந்த காலத்தின் மிக முக்கியமான பகுதியுடன் நம்மை இணைக்கிறது"
"புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் பிரம்மாண்டம் நவீன இந்தியாவைப் பெருமைப்படுத்துகிறது. நமது பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வியர்வை இதில் முதலீடு செய்யப்பட்டுள்ளது"
"நாரிசக்தி வந்தன் திட்டம் நமது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும்"
"பவன் (கட்டிடம்) மாறிவிட்டது, பாவ் (உணர்வுகள்) மாற வேண்டும்"
"நாடாளுமன்றப் பாரம்பரியத்தின் லட்சுமண ரேகையை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும்"
நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. 2023, செப்டம்பர் 19 என்ற இந்த வரலாற்றுச் சிறப்பும
Posted On:
19 SEP 2023 2:30PM by PIB Chennai
அவையில் உரையாற்றிய பிரதமர், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் அமர்வு நடைபெறுவதாகக் குறிப்பிட்டு, இந்த நிகழ்வில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாளன்று சிறப்பு அமர்வில் அவையில் உரையாற்ற வாய்ப்பு வழங்கிய மக்களவைத் தலைவருக்கு நன்றி தெரிவித்த அவர், உறுப்பினர்களுக்கு அன்பான வரவேற்பளித்தார். இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்குச் செல்வதன் மூலம் எதிர்காலத்திற்கான உறுதியுடன் இந்தியா முன்னேறி வரும் நிலையில், இது அமிர்த காலத்தின் விடியல் என்று குறிப்பிட்டார். அண்மைக்கால சாதனைகளை எடுத்துரைத்த பிரதமர், அறிவியல் துறையில் சந்திரயான் 3-ன் வெற்றி மற்றும் ஜி20 அமைப்பு மற்றும் உலக அளவில் அதன் தாக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட்டார். இந்தியாவுக்குத் தனித்துவமான ஒரு வாய்ப்பு இருப்பதாகவும், இந்த வெளிச்சத்தில், நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். விநாயகர் சதுர்த்தியின் மங்களகரமான நிகழ்வைக் குறிப்பிட்ட பிரதமர், செழிப்பு, மங்களம், பகுத்தறிவு மற்றும் ஞானத்தின் கடவுள் விநாயகர் என்று கூறினார். "தீர்மானங்களை நிறைவேற்றி, புதிய உற்சாகத்துடனும் சக்தியுடனும் புதிய பயணத்தைத் தொடங்க வேண்டிய தருணம் இது" என்று பிரதமர் மேலும் கூறினார். விநாயகர் சதுர்த்தி மற்றும் புதிய தொடக்கத்தை முன்னிட்டு லோகமான்ய திலகரை நினைவு கூர்ந்த பிரதமர், சுதந்திரப் போராட்டத்தின் போது, லோகமான்ய திலகர் விநாயகர் சதுர்த்தியை நாடு முழுவதும் சுயராஜ்ஜிய சுடர் ஏற்றுவதற்கான ஊடகமாக மாற்றினார் என்று கூறினார். இன்று நாம் அதே உத்வேகத்துடன் நகர்கிறோம் என்று திரு மோடி கூறினார்.
இன்று சம்வத்சரி பர்வம், அதாவது மன்னிப்புத் திருநாள் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். யாரையாவது புண்படுத்தக்கூடிய, வேண்டுமென்றே அல்லது தற்செயலான எந்தவொரு செயலுக்கும் மன்னிப்புக் கேட்பதே இந்தப் பண்டிகை என்று பிரதமர் விவரித்தார். பண்டிகையின் உணர்வில் அனைவருக்கும் மிச்சாமி துக்கடம் (நிகழ்ந்துவிட்ட துர்செயல்கள் பலனற்று போகட்டும்) என்று கூறிய பிரதமர், கடந்த காலத்தின் அனைத்துக் கசப்புகளையும் விட்டுவிட்டு முன்னேறுமாறு கேட்டுக்கொண்டார்.
பழைய மற்றும் புதியவற்றுக்கு இடையிலான இணைப்பாகவும், சுதந்திரத்தின் முதல் ஒளியின் சாட்சியாகவும் புனித செங்கோல் இருப்பதை பிரதமர் குறிப்பிட்டார். இந்தப் புனிதமான செங்கோலை இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு தொட்டார் என்று அவர் கூறினார். எனவே, செங்கோல் நமது கடந்த காலத்தின் மிக முக்கியமான பகுதியுடன் நம்மை இணைக்கிறது என்று திரு மோடி கூறினார்.
புதிய கட்டிடத்தின் பிரம்மாண்டம் அமிர்த காலத்திற்கு அபிஷேகம் செய்வதாகக் கூறிய பிரதமர், தொற்றுநோய் காலத்திலும் கட்டுமானத்தில் தொடர்ந்து பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்களின் கடின உழைப்பை நினைவுகூர்ந்தார். இந்தத் தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு ஒட்டுமொத்த அவையின் கரவொலியைப் பிரதமர் முன்னெடுத்தார். 30 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் இந்தக் கட்டிடத்திற்குப் பங்களித்திருப்பதாக தெரிவித்த அவர், தொழிலாளர்களின் முழு விவரங்களையும் கொண்ட டிஜிட்டல் புத்தகம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
நமது செயல்களில் உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளின் தாக்கம் குறித்து பேசிய பிரதமர், இன்றைய நமது உணர்வுகள் நமது நடத்தையில் நம்மை வழிநடத்தும் என்று கூறினார். "பவன் (கட்டிடம்) மாறிவிட்டது, பாவ் (உணர்வுகள்) மாற வேண்டும்" என்று அவர் கூறினார்.
"நாட்டுக்கு சேவை செய்வதற்கான மிக உயர்ந்த இடம் நாடாளுமன்றம்" என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த அவை எந்தவொரு அரசியல் கட்சியின் நலனுக்காகவும் அல்ல, நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். உறுப்பினர்கள் என்ற முறையில், நமது வார்த்தைகள், எண்ணங்கள் மற்றும் செயல்களால் அரசியலமைப்பின் உணர்வை நாம் நிலைநிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார். ஒவ்வொரு உறுப்பினரும் அவையின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப வாழ்வார்கள் என்றும் அவரது வழிகாட்டுதலின் கீழ் செயல்படுவார்கள் என்றும் திரு மோடி அவைத்தலைவரிடம் உறுதியளித்தார். அனைத்து நடவடிக்கைகளும் பொதுமக்களின் பார்வையில் நடைபெறுவதால் அவையில் உள்ள உறுப்பினர்களின் நடத்தை, அவர்கள் ஆளும் அரசின் ஒரு பகுதியாக இருகிறார்களா அல்லது எதிர்க்கட்சியின் ஒரு பகுதியாக இருகிறார்களா என்பதைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.
பொது நலனுக்கான கூட்டு உரையாடல் மற்றும் நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், இலக்குகளின் ஒற்றுமையையும் வலியுறுத்தினார். "நாம் அனைவரும் நாடாளுமன்ற பாரம்பரியத்தின் லட்சுமண ரேகையைப் பின்பற்ற வேண்டும்", என்று பிரதமர் கூறினார்.
சமூகத்தை சிறந்ததாக மாற்றுவதில் அரசியலின் பங்கு பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், விண்வெளி முதல் விளையாட்டு வரையிலான துறைகளில் இந்தியப் பெண்களின் பங்களிப்பை சுட்டிக்காட்டினார். ஜி20 மாநாட்டின் போது மகளிர் தலைமையிலான வளர்ச்சி என்ற கருத்தை உலகம் எவ்வாறு ஏற்றுக்கொண்டது என்பதை அவர் நினைவுகூர்ந்தார். இந்தத் திசையில் அரசின் நடவடிக்கைகள் அர்த்தமுள்ளவை என்று அவர் கூறினார். ஜன்தன் திட்டத்தின் 50 கோடி பயனாளிகளில், பெரும்பாலான கணக்குகள் பெண்களுக்கு சொந்தமானவை என்று அவர் கூறினார். முத்ரா திட்டம், பிரதமரின் வீட்டுவசதி திட்டம் போன்ற திட்டங்களில் பெண்களுக்கான நன்மைகளையும் அவர் குறிப்பிட்டார்.
எந்தவொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும் வரலாறு படைக்கும் ஒரு காலம் இருக்கும் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் இன்றைய தருணம் வரலாற்றில் எழுதப்படும் என்றார். மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்கள் மற்றும் சர்ச்சைகள் குறித்து எடுத்துரைத்த பிரதமர், இது தொடர்பான முதல் மசோதா 1996 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது என்றார். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இது பல முறை அவையில் அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் பெண்களின் கனவுகளை நனவாக்க தேவையான ஆதரவை எண்ணிக்கையில் பெற முடியவில்லை என்று அவர் கூறினார். "இந்த வேலையைச் செய்ய கடவுள் என்னைத் தேர்ந்தெடுத்தார் என்று நான் நம்புகிறேன்", என்று குறிப்பிட்ட திரு மோடி, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டுவர ஒப்புதல் அளிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். "2023 செப்டம்பர் 19 ஆம் தேதியின் இந்த வரலாற்று சிறப்புமிக்க நாள் இந்திய வரலாற்றில் அழிக்க முடியாததாக இருக்கும்" என்று பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், கொள்கை வகுப்பதில் அதிக பெண்களைச் சேர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இதன் மூலம் நாட்டிற்கு அவர்களின் பங்களிப்பு மேலும் அதிகரிக்கும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நாளில் பெண்களுக்கான வாய்ப்புகளின் கதவுகளைத் திறக்குமாறு அவர் உறுப்பினர்களிடம் வலியுறுத்தினார்.
"பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்லும் எங்கள் அரசு இன்று ஒரு பெரிய அரசியலமைப்பு திருத்த மசோதாவை முன்வைக்கிறது. இந்த மசோதாவின் நோக்கம் மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதாகும். நாரிசக்தி வந்தன் திட்டம் நமது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும். நாரிசக்தி வந்தன் திட்டத்திற்காக தேசத்தின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களை நான் பாராட்டுகிறேன். இந்த மசோதாவை சட்டமாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்று தேசத்தின் அனைத்து தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். இந்த மசோதா ஒருமித்த கருத்துடன் சட்டமாக மாறினால், அதன் அதிகாரம் பன்மடங்கு பெருகும் என்று இந்த அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் நான் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மசோதாவை ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றுமாறு இரு அவைகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறி பிரதமர் உரையை நிறைவுசெய்தார்.
*************
(Release ID: 1958738)
SM/ANU/SMB/KRS
(Release ID: 1958915)
Visitor Counter : 151
Read this release in:
Khasi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam