மத்திய அமைச்சரவை

டிஜிட்டல் மாற்றத்திற்கான தீர்வுகளைப் பகிர்ந்து கொள்வதில் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தியா மற்றும் சியாரா – லியோன் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 13 SEP 2023 3:21PM by PIB Chennai

பிரதமர் தலைமையில்  இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் சியாரா – லியோன் நாட்டின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு இடையே மக்கள் மத்தியிலான டிஜிட்டல் மாற்றத்தில்  வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2023 ஜூன் 12 அன்று இந்த ஒப்பந்தம்  கையெழுத்திடப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளின் டிஜிட்டல் மாற்ற முன்முயற்சிகளை செயல்படுத்துவதில் நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்தும். அத்துடன் அனுபவங்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை  ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் வகையிலான மேம்பட்ட ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்யும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்பினரும் கையொப்பமிட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வரும்  என்பதுடன், 3 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.

டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புத் துறையில் அரசுகள் மற்றும்  இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்.  இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு  வழக்கமான ஒதுக்கீடுகள் மூலம் நிதியளிக்கப்படும்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக பல நாடுகள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களுடன் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒத்துழைத்து செயல்பட்டு வருகிறது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பையும் தகவல் பரிமாற்றத்தையும் ஊக்குவிப்பதற்காக பல்வேறு நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகிறது. இது டிஜிட்டல் இந்தியாதற்சார்பு இந்தியாமேக் இன் இந்தியா போன்ற, அரசின் பல்வேறு முன்முயற்சிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது.  நாட்டு மக்களை  டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமூகமாகவும் நாட்டை அறிவுசார் பொருளாதாரமாகவும் மாற்றுவது இதன் நோக்கமாகும்.

கடந்த சில ஆண்டுகளில்டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை (டிபிஐ) செயல்படுத்துவதில் இந்தியா தனது முன்னணி இடத்தை நிரூபித்துள்ளது.  கொவிட் தொற்றுபாதிப்புக் காலத்தின் போது கூட பொதுமக்களுக்கு சேவைகளை அரசு வெற்றிகரமாக வழங்கியுள்ளது. இதன் விளைவாகபல நாடுகள் இந்தியாவின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட ஆர்வம் காட்டுகின்றன.

***

AP/ANU/PLM/RS/GK



(Release ID: 1957036) Visitor Counter : 158