மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆசிரியர்களுக்கு 2023-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுகளை செப்டம்பர் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் வழங்குகிறார்
Posted On:
02 SEP 2023 9:46AM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2023ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுகளை தேர்ந்தெடுக்கப்பட்ட 75 பேருக்கு 2023 செப்டம்பர் 5, அன்று புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் வழங்குகிறார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஆசிரியர் தினமாக இந்தியா கொண்டாடி வருகிறது. அன்று நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
தேசிய நல்லாசிரியர் விருதுகளின் நோக்கம் நாட்டில் ஆசிரியர்களின் தனித்துவமான பங்களிப்பைக் கொண்டாடுவதும், அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவையின் மூலம், கல்வியின் தரத்தை மேம்படுத்துவதும் ஆகும். அதோடு மட்டுமல்லாமல், மாணவர்களின் வாழ்க்கையை வளப்படுத்திய ஆசிரியர்களை கௌரவிப்பதும் இதன் முக்கிய நோக்கம் ஆகும். ஒவ்வொரு விருதும் தகுதிச் சான்றிதழ், ரூ. 50,000 ரொக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை உள்ளடக்கியது. விருது பெறுவோர் பிரதமருடன் உரையாடும் வாய்ப்பையும் பெறுவார்கள்.
கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, கடுமையான மற்றும் வெளிப்படையான தேர்வுமுறை மூலம் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தன்று தேசிய அளவிலான விழாவுக்கு ஏற்பாடு செய்து விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுமுதல், தேசிய நல்லாசிரியர் விருது, உயர்கல்வித் துறை மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆசிரியர்களையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர்கல்வி ஆசிரியர்கள், திறன் மேம்பாட்டு அமைச்சகத்தைச் சேர்ந்த 12 ஆசிரியர்கள் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
புதுமையான கற்பித்தல், ஆராய்ச்சி, சமூக தொடர்பு மற்றும் பணியில் புதுமை ஆகியவற்றை அங்கீகரிக்க, இணையதள முறையில் பரிந்துரைகள் கோரப்பட்டன. ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக புகழ்பெற்ற நபர்களைக் கொண்ட மூன்று தனித்தனி தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேசிய நடுவர் குழு அமைக்கப்பட்டு விருதுக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையில் தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்கள்:
முனைவர் டி. காட்வின் வேதநாயகம் ராஜ்குமார்
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அலங்காநல்லூர்,
மதுரை, தமிழ்நாடு - 625501
மாலதி
அரசு மேல்நிலைப் பள்ளி
வீரகேரளம்புதூர், கீழப்பாவூர், தென்காசி, தமிழ்நாடு – 627861
உயர்கல்வித் துறையில் தமிழ்நாட்டில் இருந்து விருது பெறுபவர்:
டாக்டர் எஸ்.பிருந்தா,
பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரி, கோயம்புத்தூர் - 641 004
தமிழ்நாடு
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்திடமிருந்து விருது பெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்:
எஸ்.சித்திரகுமார், உதவி பயிற்சி அலுவலர், அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), நத்தம் ரோடு, குள்ளம்பட்டி, திண்டுக்கல்-624003.
***
SM/ ANU/ PLM/DL
(Release ID: 1954277)
Visitor Counter : 1185
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada