பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியாவை உலகின் தலைசிறந்த பொருளாதார நாடாக மாற்றுவதில் கூட்டுறவுத் துறை முக்கியப் பங்கு வகிக்கும் என்று மகாராஷ்டிராவின் அஹமதுநகரில் நடந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறினார்
Posted On:
31 AUG 2023 6:36PM by PIB Chennai
வரும் ஆண்டுகளில் இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவதில் கூட்டுறவுத் துறை முக்கியப் பங்கு வகிக்கத் தயாராக உள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 2023, ஆகஸ்ட் 31, அன்று மகாராஷ்டிராவின் அஹமதுநகரில் நடந்த இலக்கிய விருது வழங்கும் விழாவில் பேசிய பாதுகாப்பு அமைச்சர், தனி கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்குவது கூட்டுறவுத் துறைக்கு அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுவதாகவும், மேலும் இது துறைக்கு புத்துயிர் அளித்து வலுப்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி, உலகின் முதல் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்று நாட்டிற்கு உத்தரவாதம் அளித்துள்ளதாக கூறினார். மேலும், நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் இந்த பயணத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும், கூட்டுறவு சங்கங்கள் மட்டுமே இந்தியாவை பொருளாதார செழிப்பை நோக்கி அழைத்துச் செல்லும் என்றும் தெரிவித்தார்.
கூட்டுறவு இன்று செழிப்பான துறையாக உள்ளது என்றும், நமது அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், பிரதமரின் தலைமையின் கீழ், கூட்டுறவு இயக்கத்தை மேம்படுத்த தனி கூட்டுறவு அமைச்சகமும் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நாட்டில் விவசாயிகளின் செழிப்புக்கு கூட்டுறவு இயக்கம் பல வழிகளை அளித்துள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.
"நாஃபெட், இப்கோ மற்றும் அமுல் போன்ற பல கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இத்தகைய சங்கங்கள் விவசாயத் துறையில் மட்டும் நின்றுவிடாமல், வங்கித் துறையிலும் பங்களித்து வருவதாகக் குறிப்பிட்டார். நாடு முழுவதும் உள்ள பல கூட்டுறவு வங்கிகள் இன்று தங்கள் உறுப்பினர்களுக்கு வேளாண் நோக்கங்களுக்காகவும், சிறுதொழில்கள் தொடங்கவும் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாகத் தெரிவித்தார்.
***
AD/ANU/IR/RS/KPG/DL
(Release ID: 1953876)
Visitor Counter : 132