குடியரசுத் தலைவர் செயலகம்
ராய்ப்பூரில் பிரம்ம குமாரிகளின் "நேர்மறையான மாற்றத்தின் ஆண்டு" என்ற கருப்பொருளில் நடைபெற்ற மாநில அளவிலான தொடக்க விழாவில் குடியரசுத்தலைவர் கலந்து கொண்டார்
प्रविष्टि तिथि:
31 AUG 2023 4:33PM by PIB Chennai
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று (ஆகஸ்ட் 31, 2023) பிரம்ம குமாரிகளின் "நேர்மறையான மாற்றத்தின் ஆண்டு" என்ற தலைப்பில் நடைபெற்ற மாநில அளவிலான தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், இன்று நாம் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் மின்னணு உபயோகங்களை தவிர்த்து சிறிது நேரம் செலவிடுவது அவசியம் என்று கூறினார். இது நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது என்றும் அனைவரும் தங்கள் உள் வலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நேர்மறையான பணிகளைத் தொடர வேண்டும் என்றும், நேர்மறையான எண்ணங்கள் மற்றும் நல்ல நட்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சரியான பாதையைப் பின்பற்ற ஊக்குவிக்கும் அத்தகைய நபர்களுடன் இணைந்து இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார். நாம் வாழ்க்கையை சரியான முறையில் வாழ்ந்தால், ஒவ்வொரு தருணத்தையும் அழகாகவும், மறக்க முடியாததாகவும் மாற்ற முடியும் என்று அவர் கூறினார்.
ஒரு புறம், நமது நாடு ஒவ்வொரு நாளும் புதிய உயரங்களை அடைந்து வருவதாக குடியரசுத்தலைவர் கூறினார். நிலவில் இறங்கினாலும் சரி, உலக அளவில் விளையாட்டுத் துறையில் புதிய அத்தியாயங்களை எழுதுவதாக இருந்தாலும் சரி, நாம் பல சாதனைகளை படைத்து வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டார். மறுபுறம், மிகவும் தீவிரமான பிரச்சினை உள்ளதாக கூறிய அவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு நீட் தேர்வுக்கு தயாராகும் 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்பதை சுட்டிக்காட்டினார். கடந்த காலங்களில் போட்டித் தேர்வுகளுக்கு படிக்கும் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும், போட்டி என்பது வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு நேர்மறையான விசயம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதி என்றும், தற்காலிக தோல்வி பெரும்பாலும் எதிர்காலத்தில் ஒரு பெரிய வெற்றிக்கு வழிவகுக்கிறது என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகம் மாணவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மாணவர்கள் மீது படிப்பின் அழுத்தமும், போட்டியும் இருந்தால், அனைத்து தரப்பினரும் அந்த அழுத்தத்தை நேர்மறை சிந்தனையுடன் அகற்றி, நம்பிக்கையுடன் முன்னேற உதவ வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஒவ்வொரு தனிநபரிடமும் தனித்துவமான திறமைகள் உள்ளன என்று குடியரசுத் தலைவர் கூறினார். மற்றவர்களிடமிருந்து உத்வேகம் பெறுவது நல்லது ஆனால் ஒருவர் தனது சொந்த ஆர்வங்களையும், திறன்களையும் அறிந்து, சரியான வழியைத் தேர்வு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இதற்கு, சுயமாக சிந்திக்கவேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட அவர், உள்மனத்தை விழிப்படையச் செய்வதன் மூலம், ஒருவர் தனது சொந்த திறன்களை அதிகரிக்க முடியும் என்று கூறினார். நேர்மறையான சிந்தனை மற்றும் செயல்களால், நம் சொந்த வாழ்க்கையை மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார்.
உலகில் அன்பு, நல்லிணக்கம் மற்றும் அமைதியைப் பரப்ப பிரம்ம குமாரிகள் அயராது உழைப்பது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். ஒருவரின் சிந்தனையை மாற்றுவது எளிதல்ல, ஆனால் உறுதி மற்றும் தொடர்ச்சியான முயற்சிகளால் அதை அடைய முடியும் என்று அவர் கூறினார். உலகை ஒரு சிறந்த இடமாக மாற்ற தொடர்ந்து உழைத்து வரும் பிரம்ம குமாரிகள் அமைப்பை குடியரசுத் தலைவர் பாராட்டினார்.
***
AD/ANU/IR/RS/KPH/DL
(रिलीज़ आईडी: 1953851)
आगंतुक पटल : 141