பாதுகாப்பு அமைச்சகம்

புதுதில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கென்யா பாதுகாப்பு அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார்

Posted On: 29 AUG 2023 4:53PM by PIB Chennai

பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், இன்று (29-08-2023) புதுதில்லியில், கென்யாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ஏடன் பேர் டூலேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவுகளுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, இந்தியாவுக்கும், கென்யாவுக்கும் இடையிலான உறவு வலுவடைந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பில் ஆழமான ஒத்துழைப்பின் அவசியம் குறித்தும் இரு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தினர்.

பாதுகாப்பு தொழில்துறை மற்றும் தளவாட உற்பத்தியில் திறன் மேம்பாடு மற்றும் ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பினரும் விரிவாக விவாதித்தனர். கோவா கப்பல் கட்டும்  நிறுவனம் மற்றும் கென்யா ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனங்களுக்கு இடையே திறன் மேம்பாடு மற்றும் கப்பல் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

நட்பின் அடையாளமாக, கென்யப் படைகளின் பயன்பாட்டிற்காக கிளைடர்ஸ் இந்தியா நிறுவனம் தயாரித்த 15 பாராசூட்களை (மெயின் மற்றும் ரிசர்வ்) கென்ய பாதுகாப்பு அமைச்சரிடம் திரு ராஜ்நாத் சிங் வழங்கினார்.

தனியார் துறை உட்பட இந்திய பாதுகாப்புத் துறையின் வளர்ந்து வரும் திறன்களைப் பாராட்டிய திரு ஏடன் பேர் டூயல், கென்யப் படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் இந்தியா ஆதரவு வழங்கக் கூடிய பிரிவுகளை எடுத்துரைத்தார். கென்யப் படைகளின் பயிற்சியாளர்களுக்கு இந்திய ஆயுதப் படைகளின் பயிற்றுநர்களால் பயிற்சி அளிக்கவும், அத்தகைய திட்டங்களிலிருந்து அதிக நன்மைகளை கென்யா பெறவும் முடியும் என்று அவர் கூறினார்.

பரஸ்பர நலன் சார்ந்த பிற பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தும் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் முப்படைகளின் தளபதி திரு அனில் சவுகான், பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அரமானே, பாதுகாப்பு அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கென்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். கோவா மற்றும் பெங்களூருவில் உள்ள இந்திய கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் பாதுகாப்பு தொழிற்சாலைகளை அவர் பார்வையிடுகிறார்.

***

(Release ID: 1953231)

AP/ANU/PLM/KRS



(Release ID: 1953356) Visitor Counter : 101


Read this release in: English , Urdu , Hindi , Marathi