பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எகிப்தில் நடைபெறவுள்ள பிரைட் ஸ்டார்- 23 பயிற்சிக்கு இந்திய ராணுவக் குழு புறப்பட்டுச் சென்றது

Posted On: 29 AUG 2023 12:29PM by PIB Chennai

எகிப்தில் உள்ள முகமது நகுயிப் ராணுவத் தளத்தில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 14 வரை நடைபெற உள்ள "பிரைட் ஸ்டார் - 23" பயிற்சிக்காக 137 பேர் கொண்ட இந்திய ராணுவக் குழு புறப்பட்டுச் சென்றது. இந்தப் பயிற்சி, ஒரு பன்னாட்டு முப்படைகளின் கூட்டு ராணுவப் பயிற்சியாகும். இது அமெரிக்க ராணுவ மத்திய கட்டளைப் படை (US CENTCOM) மற்றும் எகிப்திய ராணுவத்தால் வழிநடத்தப்படும். இது 1977 ஆம் ஆண்டின் கேம்ப் டேவிட் ஒப்பந்தத்தின் போது அமெரிக்காவிற்கும் எகிப்துக்கும் இடையிலான இருதரப்பு பயிற்சியாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 1980-ம் ஆண்டு எகிப்தில் இதன் முதல் பயிற்சி நடத்தப்பட்டது. 1995 ஆம் ஆண்டு முதல் இப்பயிற்சி மற்ற நாடுகள் பங்கேற்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. இந்த ஆண்டுக்கு முன்பு, 2021-ம் ஆண்டு பிரைட் ஸ்டார் பயிற்சி நடத்தப்பட்டது. இதில் 21 நாடுகளின் படைகள் பங்கேற்றன.

இந்த ஆண்டு 34 நாடுகள் பிரைட் ஸ்டார்-23 பயிற்சியில் பங்கேற்கின்றன. இது மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க பிராந்தியத்தில் இதுவரை இல்லாத மிகப்பெரிய கூட்டு ராணுவப் பயிற்சியாக இருக்கும். மொத்தம் 549 வீரர்களுடன் பிரைட் ஸ்டார் பயிற்சியில் இந்திய ஆயுதப்படைகள் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

இந்தப் பயிற்சியில் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது மற்றும் உலக அமைதியை நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்ட செயல்பாடுகளை மேம்படுத்துவதை மையமாகக் கொண்ட ஏராளமானப் பயிற்சி நடவடிக்கைகள் இடம்பெறும்.

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு, சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்களை மற்ற ராணுவங்களுடன் பகிர்ந்து கொள்ள இந்திய ராணுவத்திற்கு பிரைட் ஸ்டார் - 23 பயிற்சி ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும்.

***

ANU/AP/PLM/GK


(Release ID: 1953222) Visitor Counter : 175


Read this release in: English , Urdu , Marathi , Hindi