கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
இந்தியாவின் கடல்சார் மாற்றத்தில் உலகளாவிய ஒத்துழைப்புக்கு திரு சர்பானந்த சோனாவால் அழைப்பு விடுத்துள்ளார்
Posted On:
22 AUG 2023 4:55PM by PIB Chennai
இந்தியக் கடல்சார் தொழில்துறையின் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து விவாதித்த மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனாவால், உள்நாட்டுக் கடல்சார் துறையில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு கிழக்கு மற்றும் மேற்கு மண்டலங்களைச் சேர்ந்த இந்தியத் தூதர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், கனடா, சிங்கப்பூர், ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா, கொரியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, பிரேசில் உள்ளிட்ட 45-க்கும் அதிகமான இந்தியத் தூதரகங்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு குறிப்பிடத்தக்க வகையில் வெளிப்படுத்தப்பட்டன. காமன்வெல்த் நாடுகள், பிம்ஸ்டெக், மத்திய கிழக்கு, வளைகுடா மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள மற்ற அண்டை நாடுகளின் இந்தியத் தூதரகங்களும் கலந்து கொண்டன.
வரவிருக்கும் உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023 குறித்து திரு சோனோவால் குறிப்பிட்டார், உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் உள்ள அரசுகள் மற்றும் பெருநிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்க தூதர்கள் தங்களின் முயற்சிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இந்தியா 5 வது பெரிய பொருளாதாரமாகவும், வாங்கும் சக்தி சமநிலையில் 3 வது பெரிய பொருளாதாரமாகவும் உருவெடுத்துள்ளதை எடுத்துரைத்த திரு சோனாவால், கடல்சார் துறையில் தடையின்றி 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டிற்கான உறுதிப்பாட்டால் நாட்டின் முன்னேற்றம் வகைப்படுத்தப்படுகிறது என்பதை அமைச்சர் கோடிட்டுக் காட்டினார்.
"10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான (12,000 மில்லியன் அமெரிக்க டாலர்) முதலீட்டில், நமது எல்லைகளுக்குள்ளும் உலக அளவிலும் எதிரொலிக்கும் பொருளாதார மாற்றத்தை நம்மால் செயல்படுத்த முடியும். அதன் பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான சர்வதேச வர்த்தக உறவுகளின் முக்கியத்துவத்தை நாம் அங்கீகரித்துள்ளோம், மேலும் கடல்சார் முன்னணியில் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம்" என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
"இந்தியா ஏற்கனவே 34 நாடுகளுடன் கடல் போக்குவரத்து மற்றும் ஒத்துழைப்புக்கான இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. மேலும் 40 நாடுகளுடன் மாலுமிகளின் சான்றிதழ்களை அங்கீகரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. சமமான மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பல்வேறு பன்னாட்டு கடல்சார் மன்றங்களில் நாங்கள் தீவிரமாக பங்கெடுத்து வருகிறோம். உங்கள் ஆதரவின் மூலம், நாங்கள் பரஸ்பர வளர்ச்சியை அடைவோம், வெகுமதிகளைப் பெறுவோம், ஒத்துழைப்பு, கண்டுபிடிப்பு மற்றும் செழிப்பின் பாரம்பரியத்தை வளர்ப்போம்” என்று மத்திய அமைச்சர் திரு சோனாவால் தெரிவித்தார்.
துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகத்தின் செயலாளர் திரு டி.கே.ராமச்சந்திரன், வரவிருக்கும் உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாட்டின் (ஜி.எம்.ஐ.எஸ்) குறிக்கோள்கள் குறித்து தனது அறிமுக உரையின் போது விவாதித்தார். துறைமுகங்கள் மற்றும் உட்புற நீர்வழிகளில் முன்னேற்றங்கள், தொழில்நுட்பம் மற்றும் திட்ட செயலாக்கத்திற்காக வெளிநாட்டு வணிகங்களுடனான கூட்டாண்மைகள் மற்றும் பல நாடுகளின் தனித்துவமான வர்த்தகத் தேவைகள் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை அவர் வலியுறுத்தினார்.
வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு பெரியசாமி குமரன் கூறுகையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டிற்கான சாத்தியக்கூறுகளை மையமாகக் கொண்டு, இந்தியாவின் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்தில் மாறுதலுக்கான கட்டம் குறித்த கண்ணோட்டத்தை விவரித்தார்.
உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு என்பது வாய்ப்புகளை ஆராய்வதற்கும், சவால்களைப் புரிந்துகொள்வதற்கும், இந்தியாவின் கடல்சார் துறையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் தொழில்துறையின் முக்கிய நபர்களை ஒன்றிணைக்கும் கடல்சார் துறையை மையமாகக் கொண்ட முதன்மை நிகழ்வாகும். இந்த மாநாடு 2023 அக்டோபர் 17 முதல் 19 வரை புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023 பற்றிய முழுமையான நிகழ்ச்சி நிரல் மற்றும் பதிவு விவரங்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் www.maritimeindiasummit.com
***
ANU/AP/SMB/AG/KPG
(Release ID: 1951169)
Visitor Counter : 142