உள்துறை அமைச்சகம்

உயர் திறன் புலன் விசாரணைக்கான 2023-ம் ஆண்டுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கங்கள் அறிவிப்பு


தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேருக்கு இந்தப் பதக்கம் அறிவிப்பு

Posted On: 12 AUG 2023 10:37AM by PIB Chennai

புலனாய்வில் சிறந்து விளங்கியதற்கான 2023 ஆம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கங்கள் 140 காவல்துறையினருக்கு வழங்கப்படுகிறது.

 

இந்தப பதக்கம் 2018-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது குற்றங்களை விசாரிப்பதில் உயர் தரத்தை மேம்படுத்துவதையும், அத்தகைய சிறந்த விசாரணையை அங்கீகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட பதக்கம் ஆகும். இந்தப் பதக்கம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12-ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

 

இந்த ஆண்டுக்கான இந்த விருதுகளைப் பெறுபவர்களில், மத்திய புலனாய்வு அமைப்பைச் (சிபிஐ) சேர்ந்த 15 பேர், தேசிய புலனாய்வு முகமையைச் (என்.ஐ.ஏ) சேர்ந்த 12 பேர், மாநில காவல்துறைகளில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 10 பேர், கேரளா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த தலா 9 பேர், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 7 பேர் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த 6 பேர் அடங்குவார்கள். மற்றவர்கள் பிற மாநிலங்கள்  மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். இதில் 22 பெண் காவல் அதிகாரிகளும் அடங்குவர்.

 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காவல் உதவி ஆணையர் விக்டர் எஸ்.ஜான், காவல் உதவி கண்காணிப்பாளர் பொன்கார்த்திக் குமார் காவல் ஆய்வாளர்கள் கே.ரம்யா, ரவிக்குமார், ஆர்.விஜயா, எஸ்.வனிதா, எஸ்.சரஸ்வதி, எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு இந்தப் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

**************  

ANU/AP/PLM/DL



(Release ID: 1948110) Visitor Counter : 171