இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

உலக அளவில் சவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் தயாராக வேண்டும் – அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர்


நிறைவேறக்கூடிய இலக்குகளை நிர்ணயித்து நாட்டைக் கட்டமைப்பதில் பங்கு கொள்ள வேண்டும் என இளைஞர்களுக்கு வலியுறுத்தல்

Posted On: 12 AUG 2023 4:01PM by PIB Chennai

இன்றைய உலகம் எதிர்கொள்ளும் சவால்களை திறம்பட எதிர்கொண்டு அவற்றை வெற்றி காண்பதில் இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளார்.

சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி , சென்னையில், யுனிசெஃப் சார்பில் இளைஞர்களின் தாக்கம் குறித்தான கருத்தரங்கு நடைபெறுகிறது. கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், கடந்த 23 ஆண்டுகளாக இளைஞர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில், சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12ந்தேதி தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இளைஞர்களை அதிகமாக கொண்டுள்ள நாடாக இந்தியா திகழ்கிறது. இளைஞர்களிடம் அளவிடமுடியாத ஆற்றல் குவிந்து கிடக்கிறது. அதைச் சரியாகப் பயன்படுத்தி, நாட்டுக்கும், உலகிற்கும் உரிய பங்களிப்பை இளைஞர்கள் வழங்க வேண்டும். இந்த ஆண்டின் கருப்பொருள் மிகப்பொருத்தமானதாக உள்ளது என்று கூறினார். 

இன்றைய உலகில் இளைஞர்கள் எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அவற்றை கூட்டு முயற்சியின் மூலம் வெல்ல முனைய வேண்டும். இதில் இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமாகும் என்று கூறிய அவர், இமாச்சலப் பிரதேசத்தில், தர்மசாலா கிரிகெட் மைதானத்தை அமைப்பதில் மிக இளம் வயதில், தாம் ஆற்றிய பறங்கு பற்றி குறிப்பிட்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் ட்ரோன் கொள்கை காரணமாக, இமாச்சலப் பிரதேசத்தில் மனிதர்கள் செல்ல முடியாத பகுதிகளுக்கு, ட்ரோன்கள் மூலம், பொருட்கள், மருந்து பொருட்கள் ஆகியவை கொண்டு செல்லப்படுகின்றன. இதற்கு இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். ட்ரோன் தொழில்நுட்பத்தில் எண்ணற்ற இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். 

சவால்களை எதிர்கொண்டு, இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், தெற்காசியா பகுதி முழுமைக்கும் இளைஞர்கள் தொண்டாற்ற வேண்டும். நாட்டின் சுதந்திரத்தின் அமிர்த காலமான அடுத்த 25 ஆண்டுகளுக்குள் வளமான எதிர்காலத்தை இளைஞர்கள் உருவாக்க வேண்டும். அமிர்த காலத்தை மக்கள் பங்கேற்கும் வகையில், மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். 

இளைஞர்கள் ஒரு இலக்கை நிர்ணயித்து, அதனைச் செயல்படுத்த உழைக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் 5 உறுதி மொழிகளைப் பின்பற்றி நாட்டை முன்னேற்றுவது இளைஞர்களின் கடமையாகும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.  உங்களிடம் முயற்சியும் நம்பிக்கையும் இருக்குமாயின் அதற்குரிய வழி பிறக்கும் என்றார். உங்களுடைய பங்கு நம் நாட்டிற்கு மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்றார்.

உலக நாடுகள் 2030ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத உலகை உருவாக்க திட்டமிட்டுள்ள நிலையில், அதனை 2025க்குள் நிறைவேற்ற இந்தியா இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியா ஜி20 அமைப்புக்கு தலைமை ஏற்றுள்ளது. உலகமே ஒரு குடும்பம் என்ற கருப்பொருளுடன், பல்வேறு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. 140 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில், தண்ணீர், மின்சாரம், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை குறைந்த அளவு சேமித்தாலும், அதன்மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பெரும் பங்காற்றலாம் என்று அவர் குறிப்பிட்டார். 

கோவிட் பெருந்தொற்று காலத்தில் இந்தியா தனது மக்களுக்கு மட்டுமல்லாமல், 160 நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கி, சாதனை படைத்துள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர்,  டிஜிட்டல் பரிவர்த்தனையில் உலகிலேயே முன்னணி நாடாக இந்தியா உள்ளது. உலக அளவில் 41 சதவீத டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் நடைபெறுகிறது என்று கூறினார். 

கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஏழைகளின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வரும் அரசு நாட்டில் 27 சதவீதம் மக்களை வறுமைக் கோட்டுக்கு மேலே கொண்டு வந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு உலக பொருளாதாரத்தில் 10 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் அது 3வது இடத்துக்கு முன்னேறும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். 

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், விடுதலைப் போராட்ட வீர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், எனது மண் எனது தேசம் என்ற இயக்கத்தை பிரதமர் அறிவித்துள்ளார். ஒவ்வொரு கிராமத்திலும், சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், 75 மரக்கன்றுகளை நடுவதில் இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். பிரதமர் பங்கேற்க இருக்கும் இதன் நிறைவு விழாவில் நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள் பங்கேற்பார்கள் என்றும், உங்களுக்குள் இருக்கும் திறமையை கண்டறிந்து, அதனை செயல்படுத்தி நீங்கள் விரும்பும் மாற்றத்தை சமூகத்தில் கொண்டு வாருங்கள் என்று தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் இணை செயலாளர் நிதேஷ் குமார் மிஷ்ரா, யுனிசெஃப் இந்தியா பிரதிநிதி  சிந்தியா மெக்காஃப்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

***

AD/PKV/DL



(Release ID: 1948107) Visitor Counter : 791