பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஊழலுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்துக்கான கூட்டு செயல்முறைகளை எடுத்துரைக்க ஜி 20 ஊழல் எதிர்ப்புப் பணி்க்குழுவின் அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது: மத்திய இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங்

Posted On: 12 AUG 2023 11:52AM by PIB Chennai

ஊழலுக்கு எதிரான இந்தியாவின் அறப்போர் தொடரும் என்று மத்திய இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். 

 

2023 ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை கொல்கத்தாவில் ஜி 20 ஊழல் எதிர்ப்புப் பணிக்குழுவின் (ஏ.சி.டபிள்யூ.ஜி) 3 வது மற்றும் இறுதி கூட்டம் நடைபெற்றது. இதில் ஊழல் எதிர்ப்புப் பணிக்குழுவின் அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் இன்று (12-08-2023) நடைபெற்றது.  இதில் கலந்து கொண்டு பேசிய திரு ஜிதேந்திர சிங், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு,

ஊழலுக்கு எதிராக எந்தவித சமரசமுமின்றி செயல்படுவதாகக் கூறினார்.  2018 ஆம் ஆண்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி,  ஜி 20 அமைப்புக்கு வழங்கிய தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் குறித்த 9 அம்ச செயல்திட்டத்தையும் அவர் நினைவு கூர்ந்தார்.

 

ஊழலுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வழிநடத்துவதற்கான கூட்டு விருப்பத்தை எடுத்துரைக்க ஜி 20 ஊழல் எதிர்ப்புப் பணிக்குழுவின் அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் நம் அனைவருக்கும் ஒரு வாய்ப்பாகும் என்று அமைச்சர் கூறினார். தப்பியோடிய குற்றவாளிகள் தொடர்பாக, நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.   தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் நாடுகளின் சட்ட வேறுபாடுகளைப் பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

 

பிரதமர் மோடி முன்வைத்த 9 அம்ச செயல்திட்டத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார். தப்பியோடிய அனைத்து பொருளாதாரக் குற்றவாளிகளுக்கும் புகலிடம் வழங்க மறுப்பதற்கான சட்ட செயல்முறைகள் மற்றும் வழிமுறைகளில் ஜி 20 நாடுகள் இடையே வலுவான  ஒத்துழைப்புத் தேவை என்று அவர் கூறினார்.

 

தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களின் பங்கேற்பு ஆகியவை எங்கள் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளுக்கு அடித்தளமாக உள்ளன என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமும், மக்களின் பங்கேற்பை அதிகரிப்பதன் மூலமும் ஊழலை எதிர்க்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார். ஊழலைத் தடுப்பதிலும் எதிர்த்துப் போராடுவதிலும் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.

 

ஊழல் ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் பலவீனப்படுத்துகிறது என்று கூறிய திரு ஜிதேந்திர சிங், இது சமத்துவமின்மையை ஏற்படுத்துவதுடன் நிர்வாகத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை குறைக்கிறது என்று குறிப்பிட்டார். ஊழல் சமூகத்தின் ஏழ்மையான மற்றும் மிகவும் விளிம்புநிலை மக்களை அதிக அளவில் பாதிக்கிறது என்று அவர் தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் கொள்கை, அனைவரின் வளர்ச்சி - அனைவரின் நம்பிக்கை என்பதுதான் எனவும் இதுவே அரசின் வழிகாட்டியாக உள்ளது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.  அனைத்து வடிவங்களிலும் ஊழலை ஒழித்து, வளர்ச்சியை நோக்கிய பயணம் இந்திய அரசின் முக்கிய கொள்கையாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

**************  

ANU/AP/PLM/DL



(Release ID: 1948085) Visitor Counter : 181