திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
நாட்டில் தொழில் பழகுநர் சூழலை வலுப்படுத்துவதற்காக தேசிய தொழில் பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தில் நேரடிப் பணப் பரிமாற்ற வசதியை மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்
Posted On:
12 AUG 2023 9:28AM by PIB Chennai
நாடு தழுவிய அளவில் தொழில் பழகுநர் பயிற்சியில் தொழில்துறையினர் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், தேசிய தொழில் பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தில் (என்ஏபிஎஸ்) நேரடி பணப்பரிமாற்ற நடைமுறையை (டிபிடி) இன்று தொடங்கி வைத்தார். இதில் சுமார் 1 லட்சம் தொழிற் பழகுநர்களுக்கு 15 கோடி ரூபாயை அமைச்சர் இன்று விடுவித்தார்.
2016 ஆம் ஆண்டில் தேசிய தொழிற் பழகுநர் ஊக்குவிப்புத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, 2023 ஜூலை 31 வரை மொத்தம் 25 லட்சம் இளைஞர்கள் தொழில் பழகுநர்களாக சேர்ந்து பணியமர்த்தப்பட்டுள்ளனர். 2023-24 நிதியாண்டில் சுமார் 2.6 லட்சம் தொழிற் பழகுநர்கள் பயிற்சியை முடித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு. தர்மேந்திர பிரதான், நமது நாட்டில் தொழில் பழகுநர் சூழலை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான நாள் இது என்று கூறினார். தேசிய தொழில் பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தில் நேரடிப் பணப்பரிமாற்றத்தை அறிமுகப்படுத்துவது, கற்கும்போதே பணம் ஈட்டுவதை ஊக்குவிக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கான ஒரு பெரிய படியாகும் என்று அவர் தெரிவித்தார். இன்று நேரடிப் பணப்பரிமாற்றம் (டிபிடி) மூலம் உதவித்தொகை பெற்ற 1 லட்சம் பயிற்சியாளர்களுக்கும் அமைச்சர் திரு தர்மேந்திரப் பிரதான் வாழ்த்துத் தெரிவித்தார்.
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் செயலாளர் திரு அதுல் குமார் திவாரி பேசுகையில், நமது நாட்டின் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இந்த அமைச்சகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்று கூறினார். ஒவ்வொரு தனிநபரின் திறனும் சிறப்பானது என்று சிறந்த எதிர்காலத்தை உருவாக்க நாம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மகாராஷ்டிரா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், கேரளா, ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள தொழில் குழுமங்கள் மற்றும் தொழில் பழகுநர்களுடன் அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கலந்துரையாடினார்.
**************
ANU/AP/PLM/DL
(Release ID: 1948083)
Visitor Counter : 140