இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

டிஸ்னி ஹாட்ஸ்டார் ஆகஸ்ட் 12 முதல் தேசிய ஃபிட் இந்தியா வினாடி வினா 2022-ஐ ஒளிபரப்புகிறது

Posted On: 10 AUG 2023 7:06PM by PIB Chennai

ஃபிட் இந்தியா வினாடி வினாவின் இரண்டாவது பகுதியின் தேசிய அளவிலான சுற்றுகள் ஆகஸ்ட் 12 முதல் பிரபல ஓடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்படும். ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 8 மணிக்கு மொத்தம் 13 பகுதிகள்  ஒளிபரப்பாகின்றன. அவற்றை தொகுப்பாளர்கள் தனய் திவாரி மற்றும் தான்யா புரோஹித் தொகுத்து வழங்க உள்ளனர்.

மொத்தம் 72 மாணவர்கள் (36 பள்ளிகளைச் சேர்ந்த தலா இரண்டு மாணவர்கள்) மாநில சுற்றுகளில் அந்தந்த மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களிலிருந்து முதல் இடங்களைப் பிடித்தனர். மாநில சுற்றுகளைத் தொடர்ந்து வெற்றி பெற்ற 36 பள்ளிகளுக்கு தலா ரூ.2.5 லட்சம் ரொக்கப் பரிசை மாண்புமிகு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் கடந்த மாதம் மும்பையில் வழங்கினார். பள்ளியைச் சேர்ந்த 2 மாணவர்கள் இடம் பெற்றுள்ள அணிக்கு மொத்தம் ரூ.25,000 வழங்கப்பட்டது.

இப்போது தேசிய சுற்றுகளில் வெற்றி பெறுபவர்களின் மொத்த பரிசுத் தொகை ரூ.25 லட்சமாகும். மாணவர்கள் மொத்தம் ரூ.2.5 லட்சம் பெறுகிறார்கள். முதல் மற்றும் இரண்டாவது இடம் பெறும்  பள்ளிக்கு முறையே ரூ.15 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

ஃபிட் இந்தியா வினாடி வினாவின் இரண்டாவது பகுதியை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்துடன் இணைந்து நடத்துகிறது. இந்த வினாடி வினா இந்தியாவின் பழமையான விளையாட்டு வரலாறு, உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான பரந்த அளவிலான தலைப்புகளை உள்ளடக்கியது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாண்புமிகு மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் முன்னிலையில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மற்றும் உள்துறை இணை அமைச்சர் திரு நிசித் பிரமானிக் ஆகியோரால் வினாடி வினா தொடங்கப்பட்டது.

மொத்தம் 348 பள்ளிகள் மற்றும் 418 மாணவர்கள் மாநில / யூனியன் பிரதேச சுற்றுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 39 சதவீதம் பேர் மாணவிகள். தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள் இரண்டு மாணவர்களைக் கொண்ட குழுவை உருவாக்கி, தொடர்ச்சியான சுற்றுகள் மூலம் மாநில / யூனியன் பிரதேச சாம்பியன்ஷிப்பில் போட்டியிட்டன. 36 மாநில / யூனியன் பிரதேச சாம்பியன்களை அடையாளம் காண மொத்தம் 120 சுற்றுகள் நடத்தப்பட்டன.

ஃபிட் இந்தியா வினாடி வினாவின் முதல் பகுதியின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாவது பகுதி வரவேற்பைப் பெற்றது. வினாடி வினாவின் 2 வது பகுதியில் இந்தியாவின் 702 மாவட்டங்களில் உள்ள 16,702 பள்ளிகளைச் சேர்ந்த 61,981 மாணவர்கள் பங்கேற்றனர். ஃபிட் இந்தியா வினாடி வினாவின் முதல் பகுதியில் 13,502 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 36,299 மாணவர்கள் பங்கேற்றனர். முதல் பகுதியைவிட வினாடி வினாவின் இரண்டாவது பகுதியில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 70% அதிகரித்துள்ளது.

*****

ANU/AD/IR/KRS



(Release ID: 1947600) Visitor Counter : 135