நிதி அமைச்சகம்

பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் முன்னேற்றம்: மத்திய நிதி சேவைகள் துறைச் செயலாளர் மற்றும் தமிழக தலைமைச் செயலாளர் இணைந்து தமிழ்நாட்டின் மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகளுடன் சென்னையில் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினர்


பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் சிறு கடன்களை விரைந்து வழங்க வேண்டும்: மத்திய நிதி சேவைகள் துறைச் செயலாளர் டாக்டர் விவேக் ஜோஷி

Posted On: 05 AUG 2023 4:09PM by PIB Chennai

மத்திய நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறைச் செயலாளர் டாக்டர் விவேக் ஜோஷி, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் திரு ஷிவ் தாஸ் மீனாவுடன் சென்னையில் இன்று ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

 

இக்கூட்டத்தில் கூடுதல் செயலாளர், இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிகள், கூடுதல் தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசின் பிற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் இணை ஆணையர்கள், இயக்குநர்கள் மற்றும் தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவைச் (எஸ்.எல்.பி.சி.) சேர்ந்த உள்ளூர் வங்கித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

 

வங்கிகளால் திருப்பி அனுப்பப்பட்ட அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் மீது நிதிச் சேவைகள் துறைச் செயலாளர் அதிக கவனம் செலுத்தி தகவல்களைக் கேட்டார். திருப்பி அனுப்பப்பட்ட விண்ணப்பங்களில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் வங்கிகளும் ஒன்றாக இணைந்து மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நிதிச் சேவைகள் துறை ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளதாகவும் குறைந்த கடன் தர (சிபில்) மதிப்பெண்ணில் என்ற காரணத்துக்காக மட்டுமே விண்ணப்பங்களைத் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அவர் வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

 

பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய வங்கிகளுடன் ஒருங்கிணைந்து புதிய விண்ணப்பங்களைப் பெறுமாறு அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளையும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் திரு ஷிவ்தாஸ் மீனா கேட்டுக் கொண்டார்.

 

சிறு கடன் வாங்குபவர்களுக்கு பயனளிக்கும் வகையில் திறந்த மனதுடன் கடன்களை வழங்குமாறு வங்கிகளுக்கு நிதிச் சேவைகள் துறைச் செயலாளர் டாக்டர் விவேக் ஜோஷி அறிவுறுத்தினார். இந்த கடன்கள் ஏற்கெனவே மத்திய அரசின் கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

 

ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன்களை விரைவாகவும் நேர்மறையாகவும் செயலாக்குவதன் முக்கியத்துவத்தை கிளை அளவிலும் பரப்ப வேண்டும் என இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்த வங்கிகளின் மூத்த அதிகாரிகள் களப்பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

 

பிரதமரின் ஸ்வநிதி திட்டம்:

பிரதமரின் ஸ்வநிதி திட்டம் சாலையோர வியாபாரிகளின் பொருளாதார வளர்ச்சிக்காக கடன் மற்றும் டிஜிட்டல் செயலாக்கம் ஆகியவற்றை தடை இல்லாமல் செயல்படுத்தி அதன் மூலம் அவர்களுக்கு அதிகாரமளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்குவதில் இத்திட்டம் தொடர்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வருகிறது. இத்திட்டம் நாடு முழுவதும் திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் நிதிச் சேவைகள் துறை (டி.எஃப்.எஸ்) ஆகியவற்றால் இந்த திட்டத்தின் செயல்திறன் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. ஜூலை 31, 2023 நிலவரப்படி, 54.40 லட்சம் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 51.46 லட்சம் விண்ணப்பங்களுக்கு ரூ. 6, 623 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

***

SM/AD/PLM/DL



(Release ID: 1946036) Visitor Counter : 195


Read this release in: English , Urdu , Hindi , Telugu