நிதி அமைச்சகம்
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் தொல்லியல்துறை சார்பில் சிறப்பு அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டினார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இப்பகுதி வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான சிறந்த தலமாக இந்த அருங்காட்சியகம் இருக்கும். மேலும் இப்பகுதியின் கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக்கு பெரிதும் இது உதவும் - நிர்மலா சீதாராமன்
Posted On:
05 AUG 2023 2:45PM by PIB Chennai
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி (பொருநை) ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள புராதன மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் அருகே அமையவுள்ள அருங்காட்சியகத்திற்கு மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று (ஆக. 5, 2023 – சனிக்கிழமை) அடிக்கல் நாட்டினார்.
முன்னதாக தொல்லியல் களத்திற்கு வருகை தந்த அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஆய்வு களத்தில் வைக்கப்பட்டிருந்த பழங்கால மட்பாண்டங்கள் மற்றும் இதரப் பொருட்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்த பின், தொல்லியல் துறையின் சிறப்புகளை விவரிக்கும் நூலையும், ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் குறித்த நூலையும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆதிச்சநல்லூர் தளத்தின் தனித்துவமான, பாரம்பரியமான மற்றும் வளமான வரலாற்றை எடுத்துரைத்தார். கி.மு 467 ஆம் ஆண்டைச் சேர்ந்த பல்வேறு பொருட்களும், கி.மு 665 ஆம் ஆண்டைச் சேர்ந்த சிறுதானியங்கள், நெல் மற்றும் உமி போன்ற உணவு தானியங்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அமைக்கப்படவிருக்கும் தொல்லியல் அருங்காட்சியகத்தில் இந்த அரிய கலைப்பொருட்கள் அனைத்தைம் காட்சிப்படுத்தப்படும். இது பார்வையாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் உலகத் தரம் வாய்ந்த அனுபவத்தை வழங்கும்.
2021 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஒரு முன்முயற்சியை நிறைவேற்றும் வகையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசு இந்த அருங்காட்சியகத்தை அமைக்க நிதி ஒதுக்கியுள்ளது. ஆதிச்சநல்லூர் வழியாக செல்லும் பயணிகளுக்கு இப்பகுதி சிறந்த தலமாக இருக்கும். மேலும், இப்பகுதியின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக்கு இது பெரிதும் பங்களிக்கும்.
பார்வையாளர்களின் அனுபவத்தை மேலும் மேம்படுத்துவதற்காக ஒளி மற்றும் ஒலி காட்சியுடன் கூடிய ஆம்பிதியேட்டரை உருவாக்க தொல்லியல் துறையிடம் திட்டங்கள் உள்ளன. காசி தமிழ் சங்கமம் மற்றும் சௌராஷ்டிரா தமிழ் சங்கமன் போன்ற நிகழ்வுகளைக் கொண்டாடுவதன் மூலம் நாட்டின் கலாச்சார ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்காக பிரதமர் மோடியின் அரசு எடுத்துள்ள பரந்த முயற்சிகளுடன் இந்த முன்முயற்சியை எடுத்துக் காட்டுகிறது.
இந்தியாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சியின் ஒரு பகுதியாக, தற்போது பெர்லினில் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை குறிப்பாக ஆதிச்சலூருக்கு சொந்தமான கலைப்பொருட்களை திருப்பி எடுத்துவர அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.. அரசின் இத்தகைய முயற்சிகளின் விளைவாக இதுவரை 350 க்கும் மேற்பட்ட பண்டைய கலைப்பொருட்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் இந்தியாவுக்கு திரும்ப கொண்டுவரப்பட்டுள்ளன என அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
இந்தியாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தை தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக கௌரவிக்கவும், பாதுகாக்கவும், காட்சிப்படுத்தவும் மத்திய அரசின் பல்வேறு விரிவான முயற்சிகளை மத்திய நிதியமைச்சர் எடுத்துரைத்தார்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், சோம்நாத், காசி விஸ்வநாதர் கோயில் உள்பட பல பாரம்பரிய தலங்கள் புத்துயிர் பெற்றுள்ளன. இதன்படி, சுதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், இந்த இடங்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவதற்கும் பௌத்த சுற்றுலா, ராமாயண சுற்றுலா, கடலோர சுற்றுலா, பாலைவன சுற்றுலா மற்றும் இமயமலை சுற்றுலா போன்ற பல சுற்றுலாக்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருவாதாக அவர் கூறினார்.
பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 'பஞ்சதீர்த்' என்று அழைக்கப்படும் ஐந்து இடங்களின் தற்போதைய வளர்ச்சி குறித்தும், இந்தியாவின் பாதுகாப்புப் படையினருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தில்லியில் தேசிய போர் நினைவுச்சின்னம் மற்றும் தேசிய போலீஸ் நினைவுச்சின்னம் கட்டப்படுவது குறித்தும் நிதியமைச்சர் எடுத்துரைத்தார். நாடு முழுவதும் 10 புதிய பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர் அருங்காட்சியகங்கள் நிறுவப்பட்டு வருவதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
மேலும், நமது முன்னோர்களின் அறிவுசார் திறனைப் பாதுகாக்கும் வகையில், 3.4 கோடி பக்கங்கள் கொண்ட 3.3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன என்றும் மத்திய நிதியமைச்சர் எடுத்துரைத்தார். தில்லியில் வடக்கு மற்றும் தெற்கு வட்டங்களில் ( நார்த் & சௌத் பிளாக்) 950 அறைகளைக் கொண்ட புதிய தேசிய அருங்காட்சியகத்திற்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய அருங்காட்சியகம் 5,000 ஆண்டுகளுக்கும் மேலான இந்தியாவின் நாகரிக கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் எட்டு கருப்பொருள் பிரிவுகளைக் கொண்டிருக்கும். அதோடு அந்தந்த மாநிலங்களின் சுந்திரப் போராட்டப் பங்களிப்பை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பு காட்சிப்படுத்தல் இதில் இடம்பெறும்.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் ஒவ்வொரு பிரதமருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் மற்றொரு குறிப்பிடத்தக்க திட்டமான 'பிரதான் மந்திரி சங்க்ரஹாலயா' நிறுவப்பட்டுள்ளது என்றும் இந்த அருங்காட்சியகம் கடந்த 75 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்கு முன்னாள் பிரதமர்கள் ஆற்றிய பங்களிப்புகளின் விவரிப்பு பதிவாக செயல்படுகிறது என்றும் மத்திய நிதியமைச்சர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் விருந்தினர்களாக தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி, திரு அனிதா ராதாகிருஷ்ணன், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் - தமிழ்நாடு அரசு; தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் முனைவர் க.செந்தில்ராஜ், இந்தியத் தொல்லியல் துறை தலைமை இயக்குநர் திரு.கே.கே.பாஷா, தொல்லியல் துறை இயக்குநர் முனைவர் த. அருண்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
***
SM/AP/DL
(Release ID: 1946019)
Visitor Counter : 238