மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மாணவிகளுக்கும், திருநங்கைகளுக்கும் சமமான தரமான கல்வியை வழங்குவதற்காக பாலின சேர்க்கை நிதியை அமைக்க தேசிய கல்விக் கொள்கை 2020 வழிவகுக்கிறது

Posted On: 31 JUL 2023 3:58PM by PIB Chennai

தேசிய கல்விக் கொள்கை 2020 சமமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கல்வியில் கவனம் செலுத்துகிறது. எந்தவொரு குழந்தையும் அவர்களின் பின்னணி மற்றும் சமூக-கலாச்சார அடையாளங்களின் காரணமாக கல்வி வாய்ப்புகளின் பின்தங்கிவிடக்கூடாது என்பதில் இக்கொள்கை உறுதியாக உள்ளது. இது பெண்கள் மற்றும் திருநங்கைகளை உள்ளடக்கிய, சமூக-பொருளாதார ரீதியாக பிந்தங்கியவர்களின் சிரமங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் உள்ளூர் சமூக அமைப்புகளின் ஒத்துழைப்புடன் கல்வியில் பாலின சமத்துவத்தை அடைய தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது.

அனைத்து மாணவிகள் மற்றும் திருநங்கை மாணவர்களுக்கு சமமான தரமான கல்வியை வழங்குவதற்காக பாலின சேர்க்கை நிதியை அமைக்க தேசிய கல்விக் கொள்கை2020 வழிவகுக்கிறது. சமக்ரா சிக்ஷா 2.0 திட்டத்தின் மூலம் இதனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு தரமான கல்வியை வழங்க இத்திட்டத்தின் கீழ் பல்வேறு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எட்டாம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு இலவச சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள், தொலைதூர / மலைப்பகுதிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு  குடியிருப்புகள், பெண் ஆசிரியர்கள் உட்பட கூடுதல் ஆசிரியர்கள் நியமனம், மாணவிகளுக்கு தனி கழிப்பறைகள் போன்றவை இதில் அடங்கும்.

கூடுதலாக, பள்ளிக் கல்வியின் அனைத்து மட்டங்களிலும் பாலின இடைவெளிகளைக் குறைப்பதற்காக, கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில், எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி, சிறுபான்மை மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ளோர் (பி.பி.எல்) போன்ற பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்கான உறைவிடப் பள்ளிகளான கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. 30.06.2023 நிலவரப்படி,நாட்டில் மொத்தம் 5639 கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகளில், 6.88 இலட்சம் பெண் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இத்தகவலை மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

---

ANU/CR/KPG

 



(Release ID: 1944406) Visitor Counter : 98