மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
அகில பாரதிய சிக்ஷா சமகம் 2023 எனப்படும் கல்வி மாநாடு நிறைவடைந்தது: மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் நிறைவுரையாற்றினார்
Posted On:
30 JUL 2023 7:08PM by PIB Chennai
அகில பாரதிய சிக்ஷா சமகம் - 2023 எனப்படும் அகில இந்தியக் கல்வி மாநாடு புதுதில்லியில் நிறைவடைந்தது. பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்த இரண்டு நாள் மாநாட்டை நேற்று (29.07.2023) தொடங்கி வைத்தார். இதில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இன்று (30.07.2023) நிறைவுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் கல்வித் துறை இணையமைச்சர்கள் திருமதி அன்னபூர்ணா தேவி, டாக்டர் சுபாஷ் சர்க்கார், டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர். உயர்கல்வித் துறைச் செயலர் திரு கே.சஞ்சய் மூர்த்தி, கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைச் செயலர் திரு சஞ்சய் குமார், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் செயலர் திரு அதுல் குமார் திவாரி உள்ளிட்டோரும் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிறைவு விழாவில் பேசிய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், இந்தியாவை அறிவுசார் வல்லரசாக மாற்றுவதற்காக தேசிய கல்விக் கொள்கையை திறம்பட்ட முறையில் அமல்படுத்த கல்வித் துறை உறுதிபூண்டுள்ளது என்று கூறினார். பள்ளி சூழல் அமைப்பை வலுப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய இணையமைச்சர் டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், பாரம்பரியம், தர்க்க ரீதியான அறிவாற்றல், கலாச்சாரம் ஆகியவற்றின் கலவையாக தனித்துவமான முறையில் நமது கல்வி முறை உள்ளது என்று கூறினார். நிகழ்ச்சியில் பேசிய இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார், கல்வித் துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்வதில், புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இணையமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி பேசுகையில், புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 தாய்மொழி வழிக் கல்வியை ஊக்குவிப்பதாகக் கூறினார்.
2 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி, உயர்கல்வி, திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 16 கருப்பொருள்கள் அடங்கிய அமர்வுகளில் கல்வியாளர்கள் பங்கேற்று உரையாற்றினர்.
இந்த இரண்டு நாட்களில், உயர்கல்வி, பள்ளிக் கல்வி மற்றும் திறன் மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கிய மொத்தம் 106 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. உல்லாஸ் என்ற மொபைல் செயலியையும் அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் அறிமுகம் செய்தார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் (சி.ஐ.சி.டி) பத்து முக்கியத் திட்டங்கள் குறித்த பின்வரும் நூல்களைகளையும் கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்:
• பழந்தமிழ் நூல்களின் உறுதியான பதிப்புகள் (Definitive Editions of Ancient Tamil Works)
• பழந்தமிழ் நூல்களின் மொழிபெயர்ப்பு (Translation of Ancient Tamil Works)
• தமிழ் வரலாற்று இலக்கணம் ( Historical Grammar of Tamil)
• தமிழின் தொன்மை: பல்துறை ஆய்வு (Antiquity of Tamil: An Inter-Disciplinary Research)
• தமிழ்ப் பேச்சுவழக்குகளின் ஒத்திசைவு மற்றும் மொழியியல் ஆய்வு (Synchronic And Diachronic Study of Tamil Dialects)
• மொழியியல் பகுதியாக இந்தியா ( India As a Linguistic Area)
• பழந்தமிழ் ஆய்வுகளுக்கான டிஜிட்டல் நூலகம் (Digital Library for Ancient Tamil Studies)
• செம்மொழித் தமிழை இணையவழியில் கற்பித்தல் (Online Teaching of Classical Tamil)
• செம்மொழித் தமிழ்ப் படைப்புகளுக்கான தொகுப்பு மேம்பாடு (Corpus Development for Classical Tamil Works)
• செம்மொழித் தமிழ் பற்றிய காட்சி அத்தியாயங்கள் (Visual Episodes on Classical Tamil)
பள்ளிக் கல்வி, உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை தொடர்பான கண்காட்சியும் இந்த மாநாட்டில் இடம்பெற்றது. இதில் 200 அரங்குகள் இடம்பெற்றன. மாணவர்கள், இளைஞர்கள், என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தக் கண்காட்சியை பார்வையிட்டனர்.
************
AP/PLM/KRS
(Release ID: 1944197)
Visitor Counter : 223