மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

பப்புவா நியூ கினியாவுடன் தரவு கட்டமைப்பை பகிர்ந்து கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது

Posted On: 28 JUL 2023 8:54PM by PIB Chennai

முதல் சர்வதேச டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகள் (டிபிஐ) உச்சி மாநாட்டை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (எம்.இ.ஐ.டி.ஒய்) ஜூன் 12-13, 2023 அன்று மகாராஷ்டிராவின் புனேவில் ஏற்பாடு செய்தது. இந்த மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்பட 250-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் நேரில் கலந்து கொண்டனர். இதில், 2,000க்கும் மேற்பட்டோர் காணொலி மூலம் பங்கேற்றனர்.


மாநாட்டின் தொடர்ச்சியாக, இந்திய குடியரசின் மெய்ட்டி மற்றும் பப்புவா நியூ கினியாவின் தகவல் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்ப அமைச்சகம் (எம்.ஐ.சி.டி) ஆகியவை மக்கள்தொகை அளவில் செயல்படுத்தப்பட்ட வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று புதுதில்லியில் கையெழுத்திட்டன.


புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில், இந்தியத் தரப்பில், மெய்ட்டியின் தேசிய மின் ஆளுமைப் பிரிவின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. அபிஷேக் சிங் தலைமை வகித்தார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஷில் பால் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் தேசிய மின் ஆளுமைப் பிரிவின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


பப்புவா நியூ கினியா அரசு தரப்பை (எம்.ஐ.சி.டி) செயலாளர் திரு. ஸ்டீவன் மதாய்னாஹோ வழிநடத்தினார். அவருடன் தேசிய தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப ஆணையத்தின் தலைவர் திரு. நோயல் கொலின் அவிரோவெங் மொபிஹா, திரு. ஜோசப் எலெடோனா மற்றும் மூத்த  அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பப்புவா நியூகினியா தூதரகத்தின் தூதர் திரு.பவுலியாஸ் கோர்னி அவர்களும் கலந்து கொண்டார்.


இந்த நிகழ்வின் போது, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, டிஜிட்டல் அடையாளம், டிஜிட்டல் கட்டணம், தரவு பரிமாற்றம், தரவு ஆளுமை மற்றும் தரவு பாதுகாப்பு கொள்கைகள், இணையம் மற்றும் மொபைல் இணைப்பு போன்ற முக்கியமான மாற்றத்தக்க டிஜிட்டல் அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மக்கள்தொகை அளவிலான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் மாற்றத்தக்க தளங்கள் / திட்டங்களைப் பகிர்ந்து செயல்படுத்துவதற்கும், வாழ்க்கையை எளிதாக்குவதற்கும், நிர்வாகத்தில் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் திறன்களை உருவாக்கவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

****

ASD/DL
 



(Release ID: 1943982) Visitor Counter : 110


Read this release in: English , Urdu , Hindi , Marathi