நிலக்கரி அமைச்சகம்

சத்தீஷ்கரில் ரூ.169 கோடி முதலீடு செய்ய தென்கிழக்கு நிலக்கரி நிறுவனம் முடிவு

Posted On: 26 JUL 2023 3:47PM by PIB Chennai

சத்தீஷ்கரைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் கோல் இந்தியா துணை நிறுவனமான சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் (எஸ்இசிஎல்) அடுத்த 5 ஆண்டுகளில் தனது செயல்பாட்டு மாநிலங்களான சத்தீஷ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் ரூ.169 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்த மாநிலங்களில் தோட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக சத்தீஷ்கர் ராஜ்ய வன் விகாஸ் நிகாம் (சிஜிஆர்விவிஎன்) மற்றும் மத்தியப் பிரதேச ராஜ்ய வன் விகாஸ் நிகாம் (எம்பிஆர்விவிஎன்) ஆகியவற்றுடன் இந்நிறுவனம் சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டு முதல் 2027-28 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு நடவுப் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, எஸ்.இ.சி.எல் சத்தீஷ்கரில் ரூ.131.52 கோடியும், மத்தியப் பிரதேசத்தில் ரூ.38.11 கோடியும் தோட்டப் பணிகளுக்காக செலவிடும்.

இந்நிறுவனம் மாநில நிகாம்களுடன் இணைந்து சத்தீஷ்கர் மாநிலத்தில் 26 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளையும், மத்தியப் பிரதேசத்தில்  12 லட்சம் மரக்கன்றுகளையும் நடவுள்ளது. இந்நிறுவனத்தின் மூன்றாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் இதுவாகும். முந்தைய இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் இந்நிறுவனம் 2013-14 மற்றும் 2022-23 க்கு இடையில்  மொத்தம் ரூ .168 கோடி செலவில் சத்தீஷ்கர் மாநிலத்தில் 46 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளையும், மத்தியப் பிரதேசத்தில் 16 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளையும் நட்டுள்ளது.

 

பசுமைப் பரப்பை அதிகரிக்கவும், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், எஸ்.இ.சி.எல் அதன் சுரங்கப் பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் விரிவான நடவுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 2022-23 நிதியாண்டில் இந்நிறுவனம் 365 ஹெக்டேர் பரப்பளவில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு அதன் வரலாற்றில் மிக உயர்ந்த நடவுகளை மேற்கொண்டது  . எஸ்.இ.சி.எல் நடவுப் பணிகளை மேற்கொண்ட பகுதிகளில் பசுமைப் பரப்பில் கணிசமான முன்னேற்றத்தை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

***

(Release ID: 1942821)

ANU/SMB/KRS



(Release ID: 1943047) Visitor Counter : 101