மத்திய ஆயுஷ் அமைச்சகம் கோவாவில் உள்ள ரிபந்தரில் சுகாதார கவனிப்பு மற்றும் ஆயுஷ் ஆராய்ச்சி வசதிகளுக்கான ஆயுஷ் சுகாதார சேவை நிறுவனத்தை நிறுவியுள்ளது. இந்த வசதி உள்ளூர் சமூகத்திற்குக் குறைந்த செலவில் உயர்தர ஆயுஷ் சுகாதார சேவைகள் வழங்குவதையும், ஒரு அருங்காட்சியகம், நூலகம் மற்றும் கனிம மற்றும் கடல் சார்ந்த மருந்துகள் பற்றிய ஆராய்ச்சியை நடத்துவதற்கென்றே அர்ப்பணிக்கப்பட்ட ஆய்வகத்தை உருவாக்குவதன் மூலம் பாரம்பரிய மருத்துவத்தில் ஆராய்ச்சியை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதனை கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த் திறந்துவைத்தார். மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் திரு ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக், கோவா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் திரு விஸ்வஜித் ரானே மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
“இன்று தொடங்கப்பட்டுள்ள ஆயுஷ் சுகாதார சேவைகள், பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்தும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப உள்ளன. பழமையான இந்திய மருத்துவ அறிவியலின் மூலம், ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கு நாம் நல்வாழ்வு தர முடியும். அத்தகைய அர்ப்பணிப்புடன் நாம் முன்னோக்கிச் சென்றால், நிச்சயமாக தற்போதுள்ள பல சுகாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்" என்று இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.
இந்த முயற்சி பாரம்பரிய மருத்துவத்தை நவீன மருத்துவ முறையுடன் ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் என்று மத்திய அமைச்சர் திரு ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக் நம்பிக்கை தெரிவித்தார். ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும், ஒவ்வொரு கிராமத்துக்கும் ஆயுஷை எடுத்துச் செல்லவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். அப்போதுதான் மக்கள் ஆயுஷ் சேவையை முழுமையாகப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
****
SM/SMB/KRS