சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav g20-india-2023

மருத்துவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்களுக்குதொண்டாற்ற வேண்டும்;சென்னை இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் வலியுறுத்தல்

Posted On: 14 JUL 2023 5:48PM by PIB Chennai

கடந்த 70 ஆண்டுகளாக இஎஸ்ஐ மருத்துவமனை தொழிலாளர்களின் ஆரோக்கியத்தை பேணிக்காத்து வருவதாக மத்திய தொழிலாளர் நலன், வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் கூறியுள்ளார்.

சென்னை இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியின் 3-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, 2017-ம் ஆண்டு மருத்துவப்படிப்பில் சேர்ந்து எம்பிபிஎஸ் பட்டப்படிப்பை முடித்த 89 மாணவ, மாணவியருக்கு பட்டங்களை அமைச்சர் பூபேந்தர் யாதவ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய அவர், மருத்துவ அறிவியல் தொடர்ந்து பரிமாணத்தை அடைந்து வருவதாக குறிப்பிட்டார்.  இதன் விளைவாக மருத்துவர்கள் எப்போதும் மாணவர்களாகவே கற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றும் கூறினார்.

 இஎஸ்ஐ மருத்துவமனை  மற்றும் கட்டிடங்கள் உருவாக தொழிலாளர்களின் பங்களிப்பே காரணம் என்றும், கல்லூரியில் இருந்து பட்டம் பெறுபவர்கள் அவர்களுக்கு தொண்டாற்ற வேண்டியது அவர்களின் கடமை என்றும் அமைச்சர் கூறினார்.

மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக மனஉளைச்சல் ஏற்படுவதாகவும், இது குறித்து மருத்துவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். இஎஸ்ஐயின் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் 3.10 கோடி தொழிலாளர்கள் பயனடைந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், தொலை மருத்துவ ஆலோசனைப் பிரிவை தொடங்கிவைத்ததுடன், நல்ல ஆரோக்கியம் குறித்த ஸ்வாஸ்திய மித்ரா திட்டம், நலமான குடும்பம் நலமான வாழ்வு என்னும் குடும்ப தத்தெடுப்பு திட்டம், தன்னார்வ உடல் மற்றும் உறுப்புகள் தானம் ஆகியவற்றையும் தொடங்கிவைத்து உடல் தானம் செய்த இருவருக்கு சான்றிதழ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி, இஎஸ்ஐசி-யின் தலைமை இயக்குநர் திரு ராஜேந்திர குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக சென்னையில் இம்மாதம் 26 முதல் 28-ந் தேதி வரை நடைபெறவுள்ள சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை தொடர்பான பணிக்குழு மற்றும் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தின் ஏற்பாடுகள் குறித்து மத்திய, மாநில அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் ஆய்வு செய்தார். இந்தக் கூட்டத்தில் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர்  மெய்யநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வு கூட்டத்திற்குப் பின் சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு அமைச்சர் நேரில் சென்றார். அறக்கட்டளையின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதனுடன் அவர் கலந்துரையாடினார். நாடு முழுவதும் கடலோர பகுதிகளில் சதுப்புநில காடுகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் இந்த அறக்கட்டளை, பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான மிஷ்டியில் முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த சந்திப்பிற்கு பிறகு சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள  ஐந்திணைகளை அடையாளப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை மத்திய அமைச்சர் பார்வையிட்டார்.

 

***



(Release ID: 1939545) Visitor Counter : 191


Read this release in: English , Urdu , Hindi