மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

மீன்வளத் துறையில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பாக மத்திய மாநில அரசுகளிடையே கலந்துரையாடல் இருக்கவேண்டும் என்று மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்

Posted On: 10 JUL 2023 6:57PM by PIB Chennai

மீன்வளத் துறையில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பாக மத்திய மாநில அரசுகளிடையே கலந்துரையாடல் இருக்கவேண்டும் என்று மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க மகாபலிபுரத்தில் தேசிய மீன் விவசாயிகள் தினம் 2023 இன்று கொண்டாடப்பட்டது. மீன்வளத் துறையின் எதிர்காலம் பற்றி விவாதிப்பதும் மீனவர்கள், மீன் விவசாயிகள் மற்றும் சிறுதொழில் நிறுவனத்தினரின் நல்வாழ்வு குறித்து விவாதிப்பதும் இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, மீன்வளத் துறை எதிர்கொள்ளும் சவால்களை செயற்கை நுண்ணறிவு போன்ற அதி நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எதிர்கொள்ள வேண்டும் என்றார்.

மீன்களால் ஏற்படும் நோய்களைக் கண்டறிந்து உடனடியாகத் தீர்வு காண செயலி ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது என்று கூறிய அவர், இதனை மேலும் விரிவுபடுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.

2015 ஆம் ஆண்டு நீலப் புரட்சிக்காக ரூ. 20,000 கோடி ஒதுக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர் மீனவர்களையும் மீனவ சமூகத்தையும் மேம்படுத்த இது மிகப்பெரிய நடவடிக்கை ஆகும் என்றார்.

இந்தியாவிலிருந்து இப்போது இறால் ஏற்றுமதி ரூ. 70 ஆயிரம் கோடியாக உள்ளது என்றும் இதனை ரூ. 1 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் கூறிய அமைச்சர் இந்த இலக்கை எட்டுவதற்கு மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், 2014 ஆம் ஆண்டு வரை 50 ஆண்டு ஆட்சிக் காலத்தில் மீன்வளத்துறையில்  ரூ.4,000 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டதாகவும் ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் ரூ. 38 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். இறால் ஏற்றுமதியில் உலகிலேயே முதன்மை நாடாக இந்தியா உள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

சென்னை காசிமேடு உள்பட ஐந்து மீன்பிடித் துறைமுகங்கள் நவீனமயமாக்கப்பட உள்ளன என்று கூறிய  அமைச்சர், காசிமேடு மீன்பிடித் துறைமுகப் பணிகளை  2024 ஜனவரி மாதத்திற்குள் முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

2014ல் மீன்வளத்துறையில் 500 ஆக இருந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தற்போது 9 லட்சமாக அதிகரித்துளன என்று அமைச்சர் தெரிவித்தார். மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கான கிசான் அட்டை திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும்  இதற்கு தேசிய அளவில் இயக்கம் நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.   மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் ஐசிஎம்ஆர் போன்ற மத்திய அரசின் அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இரண்டு நாள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் திரு சஞ்சீவ் பலியான், மாநில மீன்வளத்துறை அமைச்சர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மீன்வளத்துறை அமைச்சர்கள், மத்திய மீன்வளத்துறை செயலாளர், மாநிலங்களின் மீன்வளத்துறை செயலாளர்கள் மற்றும் ஆணையர்கள் பங்கேற்கின்றனர்.

மீன்வளம் சார்ந்த ஸ்டார்ட்-அப் தொழில் நிறுவனங்களில் சிறப்பாக செயல்படும் 10 நிறுவனங்களுக்கு இந்த நிகழ்வில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 18 மாநிலங்களில் 138 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட உள்ள 176 திட்டங்கள் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டன.

33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமார் 260 இடங்களில் காணொலிக் காட்சி மூலம் தேசிய மீன் விவசாயிகள் தின நிகழ்வு ஒளிபரப்பப்பட்டது. இவற்றில் மீனவர்கள், மீன் விவசாயிகள், அறிஞர்கள், விஞ்ஞானிகள், அலுவல் சார்ந்த பிரமுகர்கள் உட்பட 23 ஆயிரம் பேர் பங்கேற்றனர். மேலும் இந்த நிகழ்வு யூடியூப், ட்விட்டர், முகநூல் போன்ற சமூக ஊடகத் தளங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

**

AD/SMB/GK



(Release ID: 1938509) Visitor Counter : 131


Read this release in: English , Urdu , Marathi , Hindi