வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்காக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பிரிட்டன் செல்கிறார்

Posted On: 09 JUL 2023 12:50PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல்,  ஜூலை 10 முதல் 12 வரை இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்கிறார். அமைச்சரின் பயணம் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே தற்போது பேச்சுவார்த்தை நடந்து வரும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கவனம் செலுத்துவதுடன் நின்று விடாமல், ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்கத்தின் உறுப்பு நாடுகளுடன், வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தின் முன்னேற்றம் குறித்து விவாதிப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும். இதற்காக அவர் ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்கத்தின் உறுப்பு நாடுகளின்  அமைச்சர்களையும் சந்திப்பார்.

இந்தியா, இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளும் தங்களின் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கும், இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வதற்கும் உறுதிபூண்டுள்ள நிலையில், இந்தப் பயணம் ஒரு முக்கியமான கட்டத்தில் வருகிறது.  தடையற்ற ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் வேகமடைவதால், விவாதங்களை மேலும் முன்னெடுத்துச் செல்வதையும், பொருளாதார வளர்ச்சியை உந்தித் தள்ளுவதையும்  இந்தப் பயணம் நோக்கமாகக் கொண்டிருக்கும். இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்தும் விரிவான மற்றும் பரஸ்பரம் நன்மை பயக்கும் உடன்படிக்கைக்கு இது வழி வகுக்கும்.

இந்தப் பயணத்தின் போது,  வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சர்,  பல்வேறு துறைகள் மற்றும் தொழில்துறைகளின் பிரதிநிதிகளுடன் உயர்மட்ட சந்திப்புகளில் ஈடுபடுவார். வர்த்தக தடைகளை நிவர்த்தி செய்தல், முதலீடுகளை ஊக்குவித்தல், தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை போன்ற துறைகளில் அதிக ஒத்துழைப்பை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் முக்கிய முன்னுரிமைகள் மற்றும் நோக்கங்களை விவாதிக்க இந்தச் சந்திப்புகள் வாய்ப்பளிக்கும்.

ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்கத்தின்  உறுப்பு நாடுகளின்  (சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைன்) அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து, தற்போதைய பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை  அமைச்சர் ஆய்வு செய்வார். ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்க உறுப்பு நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் இடையே, வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதிகரித்த முதலீடுகள், குறைக்கப்பட்ட வர்த்தகத் தடைகள் மற்றும் அதிக சந்தை அணுகலுக்கு உகந்த சூழலை இது உருவாக்குகிறது.

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரின் பயணம்,  இந்திய அரசின்  சர்வதேச பங்காளிகளுடன் தீவிரமாக ஈடுபடுவதற்கும், பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்கும் உள்ள உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது இந்தியா, இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளின் பொருளாதாரங்களுக்கும் பயனளிப்பதோடு மட்டுமல்லாமல், அந்தந்த குடிமக்களின் ஒட்டுமொத்த செழிப்பு மற்றும் நலனுக்கும் பங்களிக்கும்.  வலுவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக உறவுகளை உருவாக்குவதற்கான உறுதியையும் இது  பிரதிபலிக்கிறது.

***

AD/PKV/DL



(Release ID: 1938286) Visitor Counter : 251