மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

நீடிக்கவல்ல மீன் வளர்ப்பிற்கு அர்ப்பணிப்புடன் பங்களிப்பை வழங்கும் மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகளின் மகத்தான சேவையை தேசம் அங்கீகரிக்கும் ஒரு சிறப்பான வாய்ப்பே தேசிய மீன் விவசாயிகள் தினம்


வளர்ந்துவரும் புரோட்டீன் தேவையை பூர்த்தி செய்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் மீன் விவசாயிகளின் சேவையை அங்கீகரிக்கும் தளமே தேசிய மீன் விவசாயிகள் தினம்

Posted On: 08 JUL 2023 12:07PM by PIB Chennai

இந்திய மீன்வளத் துறையின் மகத்தான சாதனைகளை நினைவுகூரும் வகையில், மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, தேசிய மீன் விவசாயிகள் தினத்தைக் கொண்டாடுகிறது. இந்த ஆண்டு மீன்பிடித் தொழிலில் ஒன்பது ஆண்டுகால முன்னேற்றம், வளர்ச்சி, சாதனைகள் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில்,  'கோடைகால சந்திப்பு 2023' மற்றும் 'ஸ்டார்ட்-அப் கான்க்ளேவ்' ஆகியவற்றை மீன்வளத்துறை தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் ஜூலை 10 - 11 தேதிகளில் நடத்துகிறது.

 

மீன்வளத் துறையின் குறிப்பிடத்தக்க சாதனைகளை முன்னிலைப்படுத்தவும், தொழில்துறையில் புதுமை மற்றும் தொழில்முனைவை வளர்க்கவும் இந்த நிகழ்ச்சிகள் பயன்படும்.  இந்த நிகழ்வு மீன் வளர்ப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில் வல்லுநர்கள், தொழில்முனைவோர் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஒன்றிணைத்து மீன் வளம் தொடர்பான அறிவைப் பரிமாறிக் கொள்ளவும், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மீன்வளத்தின் நிலையான வளர்ச்சிக்கான எதிர்கால வாய்ப்புகளை ஆராயவும் உதவுகிறது. ஆர்வமுள்ள தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட் அப்களுக்கு, மீன்பிடித்தல் மற்றும் மீன்வளர்ப்பில் தங்களின் புதுமையான யோசனைகள், தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை வெளிப்படுத்த ஒரு தனித்துவமான தளத்தை 'ஸ்டார்ட்-அப் கான்க்ளேவ்' எனும் மாநாடு வழங்கும். இந்த மாநாடு மீன்பிடித் தொழிலின் வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலுக்கு பங்களிக்கக்கூடிய புதிய முயற்சிகளை ஊக்குவித்து ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

இந்நிகழ்ச்சியில், நாடு முழுவதிலுமிருந்து மீன் பண்ணையாளர்கள், மீன் வளர்ப்பாளர்கள், மீனவர்கள், வல்லுநர்கள், அதிகாரிகள், விஞ்ஞானிகள் என சுமார் 10,500 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  மீன் வளர்ப்பு, மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்களின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய சுமார் 50 அரங்குகள் நிகழ்வின் போது காட்சிப்படுத்தப்படும். இந்த நிகழ்ச்சியில், மீன்வள ஸ்டார்ட் அப்கள்/மீன் வேளாண் உற்பத்தி அமைப்புகள்/மீன் கூட்டுறவு சங்கங்கள் பற்றிய கண்காட்சி தொடங்கி வைக்கப்படும்.  அதைத் தொடர்ந்து.  மத்திய மீன்வளத்துறை திட்டத்தின் கீழ், மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தால் பயன் பெறுபவர்கள்,  பயனாளிகள் அல்லாதவர்கள் சார்ந்த மீன்வளத்துறையின் சாதனைகள், துறையால் ஆதரிக்கப்படும் மீன்வளத் திட்டங்கள் மெய்நிகர் வடிவில் காட்சிப்படுத்தப்படும். மீன்வளத் தொடக்க விருது வழங்கும் விழாவில், மீனவர்கள்/மீனவர் பெண்களுடன் மெய்நிகர் கலந்துரையாடல்  நடைபெறும்.

 

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் மற்றும் துறையின் இணையமைச்சர்கள் சிறப்புரை ஆற்றி, இத்துறையின் முன்னேற்றத்தை எடுத்துரைப்பதுடன், மீன்வளத்துறையின் சமீபத்திய போக்குகள், சிறந்த நடைமுறைகள் மற்றும் வளர்ந்து வரும் வாய்ப்புகள் பற்றிய மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்குவார்கள். மத்திய  மீன்வளத்துறை அமைச்சர், இணையமைச்சர்கள் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்று தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வார்கள். மீன்வளத் துறையின் எதிர்கால சவால்கள் மற்றும் முன்னோக்கிச் செல்வது குறித்து அவர்கள் விவாதிப்பார்கள்.

 

மீன் வளர்ப்பாளர்கள், மீன்வளர்ப்பு தொழில் வல்லுநர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் பங்களிப்பை அங்கீகரித்து பாராட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 10 ஆம் தேதி தேசிய மீன் விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது. தேசிய மீன் விவசாயிகள் தினம் 2023 என்பது மீன் வளர்ப்பாளர்களின் மகத்தான பங்களிப்பையும், நிலையான மீன்வளர்ப்புக்கான அவர்களின் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் ஒரு வாய்ப்பாகும். பொறுப்பான நடைமுறைகளைத் தழுவி, மீன்பிடித் துறையின் திறனைப் பயன்படுத்துவதன் மூலம், வளமான எதிர்காலத்தை உறுதிசெய்து, உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தி, தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பங்களிக்க முடியும்.

 

இந்திய மீன்வளத்துறையில் பேராசிரியர் டாக்டர். ஹிராலால் சௌத்ரி மற்றும் அவரது சகா டாக்டர். கே.எச். அலிகுன்ஹி ஆகியோரின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் தேசிய மீன் விவசாயிகள் தினம்  கொண்டாடப்படுகிறது,  இந்திய மீன்வளத்துறையில் முக்கிய மீன்களின்   இனப்பெருக்கத்தை ஹைபோபிசேஷன் நுட்பத்தின் மூலம் வழிநடத்தினார். இது உள்நாட்டு மீன் வளர்ப்பில் ஒரு புரட்சிக்கு வழிவகுக்கும். நாட்டின் மீன்பிடித் துறையின் மேம்பாட்டிற்கு மீன் வளர்ப்பாளர்கள், மீனவர்கள் உள்ளிட்டோர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரித்து, கூட்டாகச் சிந்தித்து, நீடித்து நிலைத்திருப்பதற்கான வழிகளை விவாதிப்பதற்கான சூழலை உருவாக்குவதே இந்நாளைக் கொண்டாடுவதன் நோக்கமாகும். நமது மீன்வளத்தை நிர்வகிக்கவும், மீன் புரதத்துக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வதிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு பங்களிப்பதிலும் மீன் விவசாயிகள் வகிக்கும் குறிப்பிடத்தக்க பங்கை அங்கீகரிக்க தேசிய மீன் விவசாயிகள் தினம் ஒரு முக்கிய தளமாக செயல்படுகிறது. நவீன மீன்வளர்ப்பு நுட்பங்களைப் பின்பற்றுதல், மீன் உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் நீர்வாழ் வளங்களைப் பாதுகாப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கண்டுபிடிப்புகளை இது எடுத்துக்காட்டுகிறது. பல ஆண்டுகளாக, மீன்பிடித் துறை அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப தலையீடுகளால் உந்தப்பட்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளது.

 

தேசிய மீன் விவசாயிகள் தினத்தையொட்டி, கருத்தரங்குகள், பயிலரங்குகள், கண்காட்சிகள் மற்றும் கலந்துரையாடல் அமர்வுகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்படும், மின்வளம் குறித்த அறிவைப் பரப்பவும், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை வளர்க்கவும் மீன்வளத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் வல்லுநர்கள், மீன் வளர்ப்பில் சமீபத்திய முன்னேற்றங்கள், ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் மற்றும் வளர்ந்து வரும் போக்குகள் பற்றிய ஆலோசனைகளை வழங்குவார்கள்.

 

மீன்பிடித் துறையை ஒரு முழுமையான வழியில் மாற்றியமைப்பதிலும், நாட்டில் நீலப் புரட்சியின் மூலம் பொருளாதார எழுச்சியையும் செழுமையையும் ஏற்படுத்துவதிலும் மத்திய  அரசு எப்போதும் முன்னணியில் உள்ளது. உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதை இத்துறை கவனத்தில் கொண்டுள்ளது.  தரத்தை மேம்படுத்துதல், உள்நாட்டு மீன் நுகர்வு மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரித்தல், வேலையற்ற இளைஞர்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குதல்,  கழிவுகளைக் குறைத்தல் ஆகியவை இதன் நோக்கமாகும். 

 

2015 முதல், மத்திய அரசு ரூ.38,572 கோடிக்கு ஒட்டுமொத்த முதலீடுகளை அறிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு ரூ. 3000 கோடி முதலீட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்ட நீலப் புரட்சித் திட்டத்தின் கீழ் மீன்வளத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் மேலாண்மை முயற்சி  மீன்பிடித் துறையை முன்னேற்றுவதில் முக்கியப் பங்காற்றியுள்ளது. 2018 மத்திய பட்ஜெட்டில், மத்திய நிதியமைச்சர் மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை  அமைப்பது குறித்து அறிவித்தார். மீன்வளத் துறைக்கு, மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்புத் துறையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக, கடல் மற்றும் உள்நாட்டு மீன்வளம் இரண்டிலும் மீன் உற்பத்தியைப் பெருக்குவதற்காக ரூ. 7522.48 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியின் கீழ் உள்ள திட்டங்கள், வட்டி மானியத்துடன் மதிப்பிடப்பட்ட அல்லது உண்மையான திட்டச் செலவில் 80% வரை கடன் பெற தகுதியுடையவையாகும் .

 

2020 ஆம் ஆண்டில் பிரதமர், மீனவர்கள் நலனுக்கான பிரதமரின் மத்ஸய சம்பதா திட்டத்தை அறிவித்தார்.  இது இந்தியாவில் மீன்வளத் துறையின் நிலையான மற்றும் பொறுப்பான மேம்பாட்டின் மூலம் நீலப் புரட்சியைக் கொண்டுவருவதற்கான திட்டமாகும். ஐந்து ஆண்டுகளில் ரூ 20,050 கோடி மதிப்பிலான ஒரு துணைத் திட்டத்தை நிதியமைச்சர் அறிவித்தார். 2023-24 மத்திய  பட்ஜெட்டில் ரூ. 6,000 கோடி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின்  முதன்மை நோக்கம், 2024-25க்குள் மீன் உற்பத்தியை 22 மில்லியன் மெட்ரிக் டன்னாக  உயர்த்துவதாகும்.

 

இந்த லட்சியத் திட்டம், இந்தத் துறையில் கிட்டத்தட்ட 55 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம், மீன்பிடித் துறையை மாற்றுவதற்கும், நீடித்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.  தனியார் துறை ஈடுபாடு, தொழில் முனைவோர் வளர்ச்சி, வணிக மாதிரிகளின் மேம்பாடு, எளிதாக வியாபாரம் செய்வதை மேம்படுத்துதல், கண்டுபிடிப்புகள் மற்றும் முன்முயற்சிகள் போன்றவற்றுக்கு சாதகமான சூழலை வளர்க்கும் அதே வேளையில் மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பில் சமீபத்திய கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைப்பதையும், ஸ்டார்ட்-அப்கள், தொழில் பாதுகாப்பகங்கள்  போன்றவற்றை ஊக்குவிப்பதையும்  இந்தத் திட்டம் வலியுறுத்துகிறது.

 

மத்திய அரசின் மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, நாடு முழுவதும் உள்ள மீன் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் அயராத முயற்சிகளை அங்கீகரிக்கிறது.  அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு இந்திய மீன்வளத் துறையின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. இந்தக் கொண்டாட்டம் அவர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரித்து நமது  நன்றியை தெரிவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு பங்குதாரர்களையும் சென்றடையும் வகையில், https://youtube.com/@NFDBINDIA என்ற தளத்தில் முழுநிகழ்ச்சியும்   நேரலையில் ஒளிபரப்பப்படும்.

***

AD/PKV/DL



(Release ID: 1938144) Visitor Counter : 179