பிரதமர் அலுவலகம்
42-வது பிரகதி கலந்துரையாடல் கூட்டத்திற்கு பிரதமர் தலைமையேற்றார்
10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் ரூ.1,21,300 கோடி மதிப்பிலான 12 முக்கியத் திட்டங்களை பிரதமர் ஆய்வு செய்தார்
மதுரை, ராஜ்கோட், ஜம்மு, அவந்திப்புரா, பிபிநகர், ரெவாரி, தர்பங்கா எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டுமானத்தின் முன்னேற்றம் குறித்து பிரதமர் ஆய்வு மேற்கொண்டார்
ஸ்வநிதி திட்டத்தை ஆய்வு செய்த பிரதமர், நகர்ப்புற பகுதிகளில் உள்ள அனைத்துத் தகுதியான சாலையோர வியாபாரிகளை அடையாளம் காணத் தலைமைச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார்
அனைத்து அரசு திட்டங்களின் பயன்கள், ஸ்வநிதி முன்னேற்றப் பிரச்சாரத்தின் மூலம் ஸ்வநிதி பயனாளிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு பிரதமர் வலியுறுத்தினார்
Posted On:
28 JUN 2023 7:42PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரகதி எனப்படும் மத்திய – மாநில அரசுகள் தொடர்புடைய திட்டங்களைக் குறித்த காலத்தில் செயல்படுத்துவதற்கான தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப அடிப்படையிலான பன்னோக்கு தள 42-வது கலந்துரையாடல் கூட்டத்திற்கு இன்று தலைமையேற்றார்.
இந்தக் கூட்டத்தில் 12 முக்கியத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. இந்த 12 திட்டங்களில் 7 திட்டங்கள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் சார்ந்ததாகும். ரயில்வே அமைச்சகத்தின் 2 திட்டங்கள், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், எஃகு அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் ஆகியவற்றின் தலா ஒரு திட்டம் இதில் அடங்கும். இத்திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.1,21,300 கோடியாகும். இத்திட்டங்கள் தமிழ்நாடு, சத்தீஷ்கர், பீகார், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், குஜராத், மகாராஷ்ட்ரா, தெலங்கானா, ஒடிசா, ஹரியானா ஆகிய 10 மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், தாத்ரா நாகர்ஹவேலி ஆகிய 2 யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்ததாகும்.
மதுரை, ராஜ்கோட், ஜம்மு, அவந்திப்புரா, பிபிநகர், ரெவாரி, தர்பங்கா ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டுமானத்தின் முன்னேற்றம் குறித்து பிரதமர் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டங்களில் உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு திட்டங்களை உரிய காலக்கெடுவுக்குள் நிறைவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பிரதமர் அறிவுறுத்தினார்.
இந்தக் கலந்துரையாடலின் போது பிரதமரின் ஸ்வநிதி திட்டம் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார். இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த அனைத்து தகுதி வாய்ந்த சாலையோர வியாபாரிகளை அடையாளம் காணுமாறு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களை அவர் வலியுறுத்தினார். சாலையோர வியாபாரிகள் டிஜிட்டல் (மின்னணு) பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன், அனைத்து அரசு திட்டங்களின் பயன்கள், ஸ்வநிதி முன்னேற்றப் பிரச்சாரத்தின் மூலம் ஸ்வநிதி பயனாளிகளின் குடும்பத்தினருக்கு சென்றடைவதை உறுதி செய்யுமாறு பிரதமர் வலியுறுத்தினார்.
ஜி20 கூட்டங்களை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காக அனைத்து தலைமைச் செயலாளர்களையும் பிரதமர் பாராட்டினார். இந்தக் கூட்டங்கள் மூலம் தங்கள் மாநிலங்கள் பயன் பெறுவதை உறுதி செய்யுமாறு, குறிப்பாக சுற்றுலா மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த பிரகதி கூட்டங்களின் போது இதுவரை ரூ.17.05 லட்சம் கோடி மதிப்பிலான 340 திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
***
AP/PKV/KPG/KRS
(Release ID: 1936080)
Visitor Counter : 181
Read this release in:
Telugu
,
Malayalam
,
Assamese
,
Bengali
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Kannada