மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

2.8 கோடிக்கும் அதிகமான மீனவர்கள் மற்றும் மீன்விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தையும் வேலைவாய்ப்பையும் மீன்வளத்துறை வழங்குகிறது: திரு பர்ஷோத்தம் ரூபாலா

Posted On: 28 JUN 2023 6:20PM by PIB Chennai

2.8 கோடிக்கும் அதிகமான மீனவர்கள் மற்றும் மீன்விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தையும் வேலைவாய்ப்பையும் மீன்வளத்துறை வழங்குவதாக மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா  தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை குறித்து புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். சர்வதேச அளவில் மீன் உற்பத்தியில் 8 சதவீதத்தைப் பூர்த்தி செய்து, உலகின் 3-வது மிகப் பெரிய மீன் உற்பத்தி நாடாக இந்தியா திகழ்வதாகக் குறிப்பிட்ட அவர், கடல்வாழ் உயிரின உற்பத்தியில் 2-ம் இடத்தையும், இறால் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், முன்னணி நாடாகவும்  இந்தியா திகழ்வதாகக் குறிப்பிட்டார்.  கடந்த 9 ஆண்டுகளில் மீனவர் மற்றும் மீன் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க மத்திய அரசு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், பிரதமரின் மீன்வளத்திட்டத்திற்கு 2020-21 முதல் 2022-23ஆம் ஆண்டு வரையிலான கடந்த 3 ஆண்டுகளில் ரூ.14,656 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த நிதியில் 73 சதவீதம்  பயன்படுத்தப்பட்டதாகவும் கூறினார். கடந்த 2013-14-ஆம் ஆண்டில் 95.71 லட்சம் டன்னாக இருந்த இந்தியாவின் வருடாந்திர மீன் உற்பத்தி 2021-22-ஆம் ஆண்டில் முன் எப்போதும் இல்லாத வகையில், 162.48 லட்சம் டன்னாக அதிகரித்து சாதனைப் படைத்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

இதே போல் 2022-23 ஆம் ஆண்டில் நாட்டின் மீன் உற்பத்தி 174 லட்சம் டன்னுக்கு மேல் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் கூறினார்.

2013-14 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கடல்வாழ் உணவு ஏற்றுமதி 2 மடங்கு அதிகரித்திருக்கிறது என்று குறிப்பிட்ட ரூபாலா, 2013-14-ஆம் ஆண்டில் ரூ.30,213 கோடியாக இருந்த கடல்வாழ் உணவு ஏற்றுமதி 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.63,969 கோடியாக அதிகரித்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

பிரதமரின் மீன் வளத்திட்டத்தின் கீழ், மீன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மீனவர்கள், மீன்விவசாயிகள் உள்ளிட்ட அனைவருக்கும் குழு விபத்துக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதற்கான ஒட்டுமொத்த பிரீமியம் தொகையையும் மத்திய - மாநில அரசுகள் செலுத்துவதாகவும் குறிப்பிட்டார். விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர உடல் குறைபாடு ஏற்பட்டாலோ இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் வழங்கப்படுவதாகவும், இந்தத் திட்டத்தில் கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில் 29.11 லட்சம் மீனவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருப்பதாகவும் மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்தார்.

***

AP/ES/KPG/KRS



(Release ID: 1936064) Visitor Counter : 123


Read this release in: English , Urdu , Hindi , Marathi