எரிசக்தி அமைச்சகம்

மின் உற்பத்தி நிலையங்கள் பயோமாஸ் துகள்களை குறைந்தவிலையில் வாங்குவதற்கான உயிரி எரிபொருள்கூட்டுக் கொள்கையை மத்திய மின்சக்தி அமைச்சகம் மாற்றியமைத்துள்ளது

Posted On: 27 JUN 2023 4:08PM by PIB Chennai

அனல் மின் நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் பயோமாஸ் துகள்களின் விலையை நிர்ணயம் செய்ய மத்திய மின்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. உயிரி எரிபொருள் துகள்களுக்கான வளர்ந்து வரும் சந்தை நிலைமைகளை கருத்தில் கொண்டு, அனல் மின் நிலையங்கள், துகள்கள் உற்பத்தியாளர்கள், விவசாயிகள், வங்கியாளர்கள் உள்ளிட்ட பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வணிக நம்பகத்தன்மை, மின் கட்டணத்தில் தாக்கம் மற்றும் மின் பயன்பாடுகள், திறமையான மற்றும் விரைவான துகள்கள் கொள்முதல் ஆகியவற்றை வரையறுக்கப்பட்ட விலை கணக்கில் எடுத்துக்கொள்ளும். மத்திய மின்சார ஆணையத்தின் கீழ் உள்ள குழுவால் இறுதி செய்யப்பட்ட வரையறுக்கப்பட்ட விலை நடைமுறை 2024 ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும்.

இக்குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் வரை, மின் நிறுவனங்கள் தங்கள் அனல் மின் நிலையங்களுக்கு உயிரி எரிபொருள் துகள்களின் உடனடித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக குறுகிய கால டெண்டர்களுக்குச் செல்ல வேண்டும்.

எரிசக்தி பாதுகாப்பு, புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் அதே நேரத்தில் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது ஆகியவற்றுக்கான அரசின் முக்கிய கொள்கையாக நிலக்கரி அடிப்படையிலான மின் நிலையங்களில் உயிரி எரிபொருள் இணைக்கப்படுவதாக மத்திய மின்துறை அமைச்சர் திரு. ஆர்.கே. சிங் கூறியுள்ளார்.

இந்த முடிவை விளக்கிய மின்துறை செயலாளர் திரு. அலோக் குமார், இந்த முடிவு விவசாயிகள், தொழில்முனைவோர் ஆகியோருக்கு பயனளிக்கும் என்றார். இணை எரிபொருளுக்கான இலக்குகளை அடையவும், பயிர்க்கழிவுகளை எரிப்பதைக் குறைக்கவும், இந்திய குடிமக்களுக்கு தூய்மையான மற்றும் பசுமையான எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் இது உதவும் என்று அவர் கூறினார்.

அனல் மின் நிலையங்களில் நிலக்கரியுடன் பயோமாஸ் எரிபொருளை இணைக்க வேண்டும் என்ற கொள்கையின்படி, இதுவரை நாட்டில் உள்ள 47 அனல் மின் நிலையங்களில் மொத்தம் 64,350 மெகாவாட் திறன் கொண்ட சுமார் 1.80 லட்சம் மெட்ரிக் டன் பயோமாஸ் எரிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இதில், 2023-24 நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் 50,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான இணை எரிபொருள் பயன்பாடும் அடங்கும்.   மேலும், சுமார் 114 மில்லியன் மெட்ரிக் டன் உயிரி எரிபொருள் துகள்கள் டெண்டர் விடும் பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன . அனல் மின் நிலையங்கள் மூலம் சுமார் 69 லட்சம் மெட்ரிக் டன் பயோமாஸ் துகள்களுக்கு கொள்முதல் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கொள்கைகள் நடைமுறையில் இருப்பதாலும், சமர்த் இயக்கத்தின் மூலம் மத்திய மின்சக்தி அமைச்சகத்தின் உந்துதலாலும், நாடு முழுவதும் உள்ள அனல் மின் நிலையங்களில் உயிரி எரிபொருள் பயன்பாடு கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

***

(Release ID: 1935606)

AP/PKV/RR/KRS



(Release ID: 1935697) Visitor Counter : 119