பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எம்க்யூ-9பி ட்ரோன்கள் கொள்முதல் : யூகச் செய்திகள் ஏற்கத்தகாதவை

Posted On: 25 JUN 2023 12:46PM by PIB Chennai

முப்படைகளுக்காக மிக உயரமான இடத்திலிருந்தும் நீண்ட தூரத்திலிருந்தும் தொலையுணர்வு மூலம் இயக்கவல்ல  31 எம்க்யூ -9B (16 வான் பாதுகாப்பு மற்றும் 15 கடல் பாதுகாப்பு)  போர் விமானங்களை  வெளிநாட்டு ராணுவ தளவாடங்கள் விற்பனை  வழியாக அமெரிக்காவிலிருந்து கொள்முதல் செய்வதற்கான தேவையைப் பாதுகாப்புத் துறையின் கொள்முதல் கவுன்சில்  ஜூன் 15, 2023 அன்று, ஏற்றுக்கொண்டது.  இது, தொடர்புடைய உபகரணங்களுடன் வாங்கப்பட வேண்டிய ஆளில்லாத வானூர்திகள் (ட்ரோன்கள்)  எண்ணிக்கையையும் உள்ளடக்கியது.

அமெரிக்க அரசால் வழங்கப்பட்ட தகவலின்படி இவற்றின் விலை 3,072 மில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டதாக ஏஓஎன்  குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், அமெரிக்க அரசின் கொள்கை ஒப்புதல் கிடைத்தவுடன்  பேச்சுவார்த்தையில்  விலை தீர்மானிக்கப்படும். மற்ற நாடுகளுக்கு ஜென்ரல் அட்டாமிக்ஸ்  வழங்கும் சிறந்த விலையுடன் கொள்முதல் செலவைப் பாதுகாப்பு அமைச்சகம்  ஒப்பிடும். கொள்முதல் நடைமுறை செயல்பாட்டில் உள்ளது. வகுக்கப்பட்ட நடைமுறையின்படி இது நிறைவுபெறும்.

இதற்கிடையே, விலை மற்றும் பிற கொள்முதல் விதிமுறைகளைக் குறிப்பிடும் சில யூகச் செய்திகள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இவை ஏற்கத்தகாதவை, மறைமுக நோக்கம் கொண்டவை மற்றும் உரிய கொள்முதல் நடைமுறையைச் சீர்குலைப்பவை. விலை மற்றும் பிற விதிமுறைகள், நிபந்தனைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை; இவை  பேச்சுவார்த்தைக்கு உட்பட்டவை. இது தொடர்பாக, ராணுவத்தின்  மன உறுதியைக்  கடுமையாக பாதிக்கின்ற,  கொள்முதல்  நடைமுறையில்  எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற போலியான  செய்திகள்/தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

***

AD/SMB/DL


(Release ID: 1935231) Visitor Counter : 233