சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

உலக அரிவாள் செல் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டது

Posted On: 20 JUN 2023 12:10PM by PIB Chennai

அரிவாள் செல் நோய் பற்றியும், உலகம் முழுவதும் தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள் மீதான அதன் தாக்கம் பற்றியும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 அன்று, உலக அரிவாள் செல் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது. 

அரிவாள் செல் நோய் என்பது மரபணு ரீதியாக ரத்தத்தில் ஏற்படும் பிரச்சனையாகும்.  இயல்புக்கு மாறான ரத்த சிவப்பணுக்கள் பிறை அல்லது அரிவாள் வடிவம் பெறுவதால் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு பலவகையான சுகாதாரப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

உலகளாவிய அரிவாள் செல் பாதிப்பு சமூகங்களைக் கண்டறிந்து பாதிப்பிலிருந்து மீளும் வகையில் அவர்களை வலுப்படுத்துதல், பிறந்த குழந்தையிடம் நோய் கண்டறிதல், அரிவாள் செல் நோய் நிலையை அறிந்து கொள்ளுதல்’ என்பது இந்த ஆண்டு உலக அரிவாள் செல் நோய் தினத்தின் மையப்பொருளாகும். மரபணு ரீதியாக குழந்தைகளையும், பெரியவர்களையும் புரிந்து கொள்வதற்கும் அரிவாள் செல் நோய்க்கு எதிரான போராட்டத்திற்கும் இந்த மையப்பொருள் முதல்கட்ட நடவடிக்கையாகும். மேலும் அரிவாள் செல் நோய் நிலையைக் கண்டறிவதற்கு நவீனத் தொழில்நுட்பத்தை வலியுறுத்துவதாகவும் இது உள்ளது. 

அரிவாள் செல் நோய் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை நாடு முழுவதும் 30-க்கும் அதிகமான இடங்களில் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து பல நிகழ்வுகளை நடத்தியது.  உலக அரிவாள் செல் விழிப்புணர்வு தினத்தையொட்டி, கருத்தரங்குகள், பயிலரங்குகள் தேசிய அளவில் நடத்தப்பட்டன. இவை தவிர இணையதளம் வழியாக விநாடி வினா நிகழ்ச்சிகளும் கட்டுரை மற்றும் சுவரொட்டி உருவாக்கும் போட்டிகளும் நடத்தப்பட்டன.

***

(Release ID: 1933580)

SM/SMB/RJ/KRS



(Release ID: 1933629) Visitor Counter : 172