நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

நீடிக்கவல்ல மேம்பாட்டு ஒத்துழைப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் 2023-27 நித்தி ஆயோக் – ஐநா இடையே கையெழுத்தானது

Posted On: 16 JUN 2023 7:13PM by PIB Chennai

நீடிக்கவல்ல மேம்பாட்டு ஒத்துழைப்புத் கட்டமைப்பு ஒப்பந்தம் 2023-27  நித்தி ஆயோக் – ஐநா இடையே இன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் நித்தி ஆயோக் சார்பில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி திரு பிவிஆர் சுப்பிரமணியம், ஐநா சார்பில் இந்தியாவில் உள்ள உறைவிட ஒருங்கிணைப்பாளர் திரு ஷோம்பி ஷார்ப் ஆகியோர் கையெழுத்திட்டனர்.  நித்தி ஆயோகின்  துணைத் தலைவர் திரு சுமன் பெரி, மத்திய அமைச்சகங்களின் பிரதிநிதிகள் மற்றும் இந்தியாவில் உள்ள ஐநா முகமைகளின் தலைவர்கள் இந்த நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.

பாலின சமத்துவம், இளையோருக்கு அதிகாரமளித்தல், மனிதஉரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்துகின்ற நீடிக்கவல்ல வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான மத்திய அரசின் தேசிய தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப கூட்டான நடவடிக்கைக்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தம் 2030-க்கான நிகழ்ச்சி நிரலில் இருந்து 4 முக்கிய அம்சங்களை (அதாவது மக்கள், வளம், புவிக்கோள், பங்கேற்பு) கட்டமைப்பதாக இருக்கும். இந்த 4 முக்கிய அம்சங்களும், சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு, ஊட்டச்சத்து மற்றும் உணவுப்பாதுகாப்பு, தரமான கல்வி, பொருளாதார வளர்ச்சி மற்றும் கண்ணியமான வேலை, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை, மக்கள், சமூகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகாரமளித்தல் என்ற 6 பயன்பாடுகளில் கவனம் செலுத்தும்.  

இந்த நிகழ்வில் பேசிய நித்தி ஆயோகின்  துணைத்தலைவர் திரு சுமன் பெரி, இந்த ஒப்பந்தத்தின் படி புதிய கண்டுபிடிப்பு, அனைவரையும் உள்ளடக்கிய, உறுதியான, நீடிக்கவல்ல வளர்ச்சிக்கு அடுத்த 5 ஆண்டுகள் முக்கியமானதாக இருக்கும் என்றார். இந்தியாவின் பரந்துபட்ட நிலை, பலவகையான மக்களின் வாழ்நிலை காரணமாக ஒருவரையும் பின்தங்கச் செய்யாமல் இருப்பது என்ற இந்தியாவின் கொள்கைக்கு  இது முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

நித்தி ஆயோகின் தலைமை நிர்வாக அதிகாரி  திரு பிவிஆர் சுப்பிரமணியம் பேசுகையில், இந்தப் புதிய கட்டமைப்பு ஒப்பந்தம், நீடிக்கவல்ல வளர்ச்சிக்கான 2030 திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சமயத்திலும் பிரதமரின் அறைகூவலுக்கு ஏற்ப அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவது என்ற கண்ணோட்டத்தின் காலத்திலும் கையெழுத்தாகியுள்ளது என்றார்.

AP/SMB/RS/KRS


(Release ID: 1932977) Visitor Counter : 197