பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

2023 மே மாதத்தின் மாநிலங்களுக்கான மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் கண்காணிப்பு முறையின் 10-வது அறிக்கை வெளியீடு

Posted On: 14 JUN 2023 12:35PM by PIB Chennai

 

நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வுத் துறை, 2023 மே மாதத்தின் மாநிலங்களுக்கான மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் கண்காணிப்பு முறையின் மாதாந்திர அறிக்கையை வெளியிட்டது. நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வுத் துறை வெளியிட்டுள்ள மாநில/ யூனியன் பிரதேச அரசுகள் குறித்த 10-வது அறிக்கை இதுவாகும்.

இந்த அறிக்கையின்படி, கடந்த மே மாதத்தில் 65,983 குறைகளை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் நிவர்த்தி செய்துள்ளன. மாதந்தோறும் தீர்த்து வைக்கப்படும் குறைகளின் மொத்த எண்ணிக்கையில் இது மிக அதிகம். இதன் மூலம் மாநில அரசுகள் வசம் நிலுவையில் இருந்த குறைகளின் எண்ணிக்கை 1,94,713 ஆக குறைந்துள்ளது.

யூனியன் பிரதேசங்கள், வடகிழக்கு மாநிலங்கள், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறைகள் உள்ள மாநிலங்கள் மற்றும் 15 ஆயிரத்திற்கும் குறைவான குறைகள் உள்ள மாநிலங்கள் ஆகிய 4 பிரிவுகளில் 1.1.2023 முதல் 31.5.2023 வரையிலான காலகட்டத்தில் மாநிலங்களின் சிறப்பான செயல்பாடுகளின் அடிப்படையில் அவை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறைகள் உள்ள மாநிலங்களுள் உத்தரப்பிரதேச அரசு முதலிடத்திலும் (62.07 புள்ளிகள்), ஜார்கண்ட் அரசு (46.14 புள்ளிகள்) மற்றும் மத்திய பிரதேச அரசு (43.05 புள்ளிகள்) ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களிலும் உள்ளன‌. 15 ஆயிரத்திற்கும் குறைவான குறைகள் பதிவான மாநிலங்கள் பிரிவில் 72.49 புள்ளிகளுடன் தெலங்கானா அரசு முதலிடம் வகிக்கிறது. 55.75 புள்ளிகளுடன் சத்தீஸ்கர் மாநில அரசு இரண்டாவது இடத்திலும், 49.69 புள்ளிகளுடன் உத்தராகண்ட் அரசு மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன

வடகிழக்கு மாநிலங்கள் பிரிவில்  சிக்கிம் (64.90 புள்ளிகள்), அசாம் (54.89 புள்ளிகள்) மற்றும் அருணாச்சல பிரதேசம் (51.72 புள்ளிகள்) ஆகிய மாநிலங்களின் அரசுகள் முறையே ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாவது இடம் பிடித்துள்ளன. யூனியன் பிரதேசங்கள் பிரிவில் 70.56 புள்ளிகளுடன் லட்சத்தீவுகள் அரசு முதலிடத்தையும், 63.09 புள்ளிகளுடன் அந்தமான் மற்றும் நிக்கோபார் அரசு இரண்டாவது இடத்தையும், 55.20 புள்ளிகளுடன் லடாக் அரசு மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

கடந்த மே மாதத்தில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநில அரசு 18404 குறைகளைப் பெற்று, மிக அதிகபட்சமாக 16,780 குறைகளை தீர்த்து வைத்துள்ளது. நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வுத் துறையின் மே மாத அறிக்கை http://www.darpg.gov.in/ என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1932235

 

***



(Release ID: 1932393) Visitor Counter : 129