சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

மகளிர் 20 உச்சிமாநாடு மகளிர் தலைமையிலான வளர்ச்சி மாற்றம், செழிப்பு மற்றும் முன்னேற்றம்


மாமல்லபுரத்தில் ஜூன் 14 முதல் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது

Posted On: 14 JUN 2023 1:57PM by PIB Chennai

மகளிர் 20 உச்சி மாநாடு தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் உள்ள ரேடிசன் ப்ளூ ரெசார்ட் டெம்பிள் பே விடுதியில் ஜூன் 14 முதல் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்தாண்டு உச்சி மாநாட்டின் கருப்பொருள் ‘மகளிர் தலைமையிலான வளர்ச்சி – மாற்றம், செழிப்பு மற்றும் முன்னேற்றம்’ என்பதாகும். இந்த உச்சி மாநாட்டில், ஒரு கண்காட்சியும். மக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியும், 8 அமர்வுகளும், 1 உள்ளறைக் கூட்டமும் இடம்பெறும்.

இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ், அடிமட்ட அளவிலான பங்கேற்பு அதிகரிப்பதை உறுதிசெய்தல், மகளிர் 20 நடைமுறையில் மக்களின் பங்கேற்பை அதிகரித்தல் என்ற நோக்கத்துடன் மகளிர் 20 செயல்படுகிறது. ‘அதிகாரமளித்தலுக்கான பயணம்’ என்ற கருப்பொருளுடன் மக்கள் பங்கேற்பு நிகழ்ச்சியுடன் உச்சிமாநாடு தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் மகளிர் இடையே ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த அனுபவங்கள், மகளிர் 20 சர்வதேச பிரதிநிதிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும். மக்கள் பங்கேற்பு நிகழ்ச்சி தமிழ்நாட்டைச் சேர்ந்த அடிமட்டத்தில் இருக்கும் பெண்கள் தங்களது கவலைகள், அனுபவங்கள், கேள்விகளை. உலகளாவிய பெண் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பை வழங்கும். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திருமிகு பன்சூரி ஸ்வராஜ் இந்த நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றுவார். இதனைத் தொடர்ந்து இந்தியாவைச் சேர்ந்த 5 கீழ்மட்டத்திலான பெண்கள் கருத்துக்களை தெரிவிப்பார்கள். கலைஞரும், கின்னஸ் உலக சாதனைப் படைத்தவருமான திருமிகு மேஹா ஹர்ஷா தனது ஊக்கமளிக்கும் கதைகளை பிரதிநிதிகளுடன் பகிர்ந்து கொள்வார். அமெரிக்காவின் இணைத் துறைத்தலைவர் திருமிகு வர்ஜீனியா லிட்டில்ஜான், அடிமட்ட பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியை மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம், தமிழ்நாடு அரசு மற்றும் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித்துறையின் ஆதரவுடன் தமிழகத்தைச் சேர்ந்த அடிமட்டத்திலான தொழில் முனைவோர் கண்காட்சியும் இந்த உச்சிமாநாட்டில் இடம்பெறும். இந்தக் கண்காட்சி மகளிர் தொழில் முனைவோர் தங்களது திறமைகள். படைப்பாற்றல் திறன், புத்தாக்கம் ஆகியவற்றை காட்சிப்படுத்தும் தளமாக இருக்கும். அர்ஜென்டினா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மகளிர் 20 பிரதிநிதிகளின் காட்சிப்படுத்துதலும் இதில் இடம்பெறும். இந்தக் கண்காட்சி 15-ந் தேதி மாமல்லபுரம் விடுதியில் தொடங்கி வைக்கப்படும்.

இந்திய மகளிர் 20 அமைப்பின் தலைவர் டாக்டர் சந்தியா புரேச்சாவின் தொடக்க உரையுடன், மகளிர் 20 உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வு ஆரம்பமாகும். மகளிர் 20 அமைப்பின் அறிவிக்கை வரைவுக் குழுவின் தலைவர் டாக்டர் ஷமிகா ரவி, இந்தியாவின் ஐ.நா. இருப்பிட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஷோம்பி ஷார்ப், ஜி20 ஷெர்பா திரு.அமிதாப் கான், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானி, மகளிர் 20 அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமிகு தாரித்ரி பட்நாயக் ஆகியோர் இதில் கலந்து கொள்வார்கள். ஜி20 தலைவர்கள் பிரகடனத்தில் இடம் பெறக் கூடிய நடவடிக்கை எடுக்கத்தக்க பரிந்துரைகளைக் கொண்ட மகளிர் 20 அறிவிக்கை 2023 இந்த தொடக்க அமர்வில் வெளியிடப்படும். மகளிர் 20 பிரதிநிதிகள் மற்றும் அறிவுசார் பங்குதாரர்கள் எழுதிய மகளிர் தலைமையிலான வளர்ச்சிக் குறித்த பல்வேறு கட்டுரைகளும் இதில் வெளியிடப்படும்.

ஜூன் 15-ந் தேதி மகளிர் சுகாதாரம், பாலின சமத்துவம், சமூகப் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்கு இடையிலான பிரிவு, மகளிர் தலைமையிலான பருவநிலை நடவடிக்கை, பாலின டிஜிட்டல் பிரிவை நிரப்புதல் ஆகிய தலைப்புகளில் 3 முழு அமர்வுகள் நடத்தப்படும். முதல் அமர்வின் முடிவில் மகளிர் 20 முதலாவது பதிலளிப்போர் கட்டமைப்பு வெளியிடப்படும். அந்த நாளின் முடிவில் தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் உயரிய கலாச்சார பாரம்பரியத்தை பறைச்சாற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளும், இரவு விருந்தும் நடைபெறும்.

தடைகளை உடைத்தல், வர்த்தகம் மற்றும் முதலீட்டின் மூலம் அதிகாரமளித்தல், பொருளாதாரத்திற்கான கட்டமைப்பு மற்றும் சேவைகளில் முதலீடு செய்தல் ஆகிய கருப்பொருள்களில் 3 அமர்வுகள் 16-ந் தேதி நடைபெறும். மகளிர் அதிகாரமளித்தல் ஆற்றலைக் கொண்டாடுதல் என்பது குறித்த உள்ளறை கூட்டம் கடைசியாக நடைபெறும். மகளிர் அதிகாரமளித்தலின் ஆற்றல் உலகின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார முன்னேற்றத்தில் பெண்களின் பங்கை அங்கீகரித்தல் ஆகியவற்றை இந்த அமர்வு நோக்கமாகக் கொண்டிருக்கும். இந்த நிறைவு அமர்வில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், பிஜேபியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான திருமதி பாரதி கோஷ் கலந்து கொண்டு வரவேற்புரை நிகழ்த்துவார். 2015 துருக்கி மகளிர் 20-ன் தலைவர் திருமிகு குல்தன் துர்க்தன், 2021 இத்தாலி மகளிர் 20-ன் தலைவர் திருமிகு லிண்டா லாரா சப்பதினி, 2022 இந்தோனேஷியா மகளிர் 20-ன் தலைவர் திருமிகு உலி சிலாலாஹி, 2023 மகளிர் 20-ன் தலைவர் டாக்டர் சந்தியா புரேச்சா ஆகியோர் உரையாற்றுவார்கள். தமிழ்நாடு அரசு வரும் 17-ந் தேதி ஒருங்கிணைத்துள்ள சுற்றுலா மூலம் மகளிர் 20 பிரதிநிதிகள் மாமல்லபுரத்தின் வளமான வரலாற்று பாரம்பரியத்தை அனுபவிப்பார்கள்.

பாலின சமத்துவத்தை நோக்கமாகக் கொண்டு, துருக்கியின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ ஜி20 நிகழ்ச்சிக்குழுவாக மகளிர் 20 அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் மகளிர் அதிகாரமளித்தல், மகளிர் உரிமைகளுக்கு வாதாடுதல், சமுதாயத்தில் மகளிர் குரல்களை உயர்த்துதல் ஆகியவையாகும். இந்தியாவின் மகளிர் 20 செயல் திட்டம், மகளிர் தொழில்முனைவு அடிமட்ட மகளிர் தலைமை, பாலின டிஜிட்டல் பிளவை நிரப்புதல், கல்வி மற்றும் திறன் மேம்பாடு, பருவநிலை மாற்றம் ஆகிய 5 முக்கிய முன்னுரிமைகளை நோக்கமாகக் கொண்டுள்ளது.

***



(Release ID: 1932258) Visitor Counter : 282


Read this release in: Urdu , English , Hindi