பாதுகாப்பு அமைச்சகம்

இன்றைய காலகட்டத்தில் ஐநா அமைதிப்படையின் பாதுகாப்பு, செயல்திறனுக்கு புதுமை மற்றும் மேம்பட்ட சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் ; பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

Posted On: 13 JUN 2023 12:12PM by PIB Chennai

வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள ஐநா  அமைதிப் படைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதிப்படுத்த, பொறுப்புள்ள நாடுகளிடையே புதுமையான அணுகுமுறைகள் மற்றும் மேம்பட்ட ஒத்துழைப்பு அவசியம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், கூறியுள்ளார்.  புதுதில்லியில், ஐநா அமைதிப்படையின் 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், இந்திய ராணுவம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நினைவுக் கருத்தரங்கில் உரையாற்றிய அவர், ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும், மோதல்களைத் தடுப்பதற்கும், அமைதியை மீட்டெடுப்பதற்கும் இந்த ஒத்துழைப்பு தேவை என்று கூறினார்.

இன்று அமைதி காக்கும் படையினர் எதிர்கொள்ளும் வேகமாக வளர்ந்து வரும் சவால்களை எடுத்துரைத்த திரு ராஜ்நாத் சிங், அவர்களின் பாதுகாப்பு மற்றும் செயல் திறனுக்காக பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் வளங்களில் அதிக முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அமைதி காக்கும் நடவடிக்கைகளில் பெண்களின் அர்த்தமுள்ள பங்கேற்பை அவர் வலியுறுத்தினார்.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்  உட்பட  முடிவெடுக்கும் அமைப்புகளை உலகின் மக்கள்தொகையின்  உண்மையான நிலையைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர்  மீண்டும் வலியுறுத்தினார். “அதிக மக்கள்தொகைக் கொண்ட நாடான இந்தியா, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இடம் பெறாத சூழல், ஐ.நா.வின் தார்மீக சட்டப்பூர்வமான தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. எனவே, ஐநா அமைப்புகளை இன்னும் ஜனநாயகமாகவும், நமது சகாப்தத்தின் தற்போதைய உண்மையான  பிரதிநிதியாகவும் மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது," என்று அவர் கூறினார்.

 ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளில் இந்தியா பெரும் பங்களிப்பைக் கொண்டுள்ளது. இதுவரை சுமார் 2.75 லட்சம் துருப்புக்களை அமைதி காக்கும் பணிகளுக்கு இந்தியா பங்களித்துள்ளது. தற்போது சுமார் 5,900 துருப்புக்கள் 12 ஐ.நா பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஐநா அமைதிப்படையில் பணியாற்றிய அல்லது தற்போது பணியாற்றி வரும் அனைத்து இந்தியர்களுக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் நன்றி தெரிவித்தார். நமது வீரர்கள் மிகவும் சவாலான மற்றும் ஆபத்தான சூழல்களில் தன்னலமின்றி பணியாற்றியுள்ளனர். அமைதி காக்கும் உணர்வை உள்ளடக்கி ஐ.நா சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளை நிலைநிறுத்தியுள்ளனர். அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, தொழில்முறை மற்றும் தியாகம் நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே கலந்து கொண்டார். ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி திருமதி ருசிரா காம்போஜ் இந்த நிகழ்வில் காணொலிச் செய்தி மூலம் உரையாற்றினார். பாதுகாப்புப் படைத் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌஹான், இந்தியாவுக்கான ஐநா உறைவிட ஒருங்கிணைப்பாளர் திரு ஷோம்பி ஷார்ப் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஐநா அமைதி காக்கும் நடவடிக்கைகளில் பணிபுரிபவர்களின் தொழில்முறை, அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்தை கவுரவிப்பதற்கும், அமைதிக்காக தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களை நினைவுகூருவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் மே 29 அன்று ஐநா அமைதிப்படைகளின் சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1931881

***

AP/PKV/GK



(Release ID: 1931986) Visitor Counter : 95