பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

புதிய இந்தியாவின் கனவுகள் என்ற அமிர்த தலைமுறை இயக்கத்தை மெட்டாநிறுவனமும், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்துதொடங்கியுள்ளன

Posted On: 07 JUN 2023 4:41PM by PIB Chennai

இந்தியாவின் இளைஞர்கள் தங்களின் எதிர்கால விருப்பங்களையும், கனவுகளையும் வெளிப்படுத்த ஊக்கப்படுத்தி அவர்களுக்கு அதிகாரமளிக்கவும், செயல்பாடுகளில் ஈடுபடுத்தவும் அமிர்த தலைமுறை இயக்கத்தை மெட்டா நிறுவனத்துடன் இணைந்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானி இன்று தொடங்கி வைத்தார்.

இன்ஸ்டாகிராம், முகநூல் ஆகியவற்றில் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் தங்களின் விருப்பங்களையும், படைப்பாக்கத்தையும் பகிர்ந்து கொள்ள அமிர்த தலைமுறை இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. தாங்கள் வளரும் போது என்னவாக விரும்புகிறோம் என்பதை பங்கேற்பாளர்கள் கண்டறிய இது ஊக்கமளிக்கிறது.

இந்த இயக்கத்தின் தொடக்க நிகழ்வில் பேசிய திருமதி ஸ்மிருதி சுபின் இரானி, “நமது இளைஞர்கள் எதிர்கால இந்தியாவின் சிற்பிகள் ஆவர். இளைஞர்களின் ஈடுபாட்டையும், ஊக்கத்தையும் அதிகரித்து அவர்களின் விருப்பங்கள் நிறைவேற வழிவகுப்பதை நோக்கமாக கொண்டிருப்பது அமிர்த தலைமுறை இயக்கமாகும். அவர்களின் கனவுகள் நனவாக அவர்களுக்கு தேவையான உதவியையும், ஊக்கத்தையும் இது உறுதி செய்யும். அர்த்தமுள்ள இந்த முன்முயற்சிக்கு மெட்டா இந்தியா நிறுவனம் பங்குதாரராக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறினார்.

மெட்டா இந்தியா நிறுவனத்தின் கொள்கைப் பிரிவு தலைவரும், அரசு தொடர்பாளருமான நட்டாஷா ஜோக் பேசுகையில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்துடன் மற்றொரு சிறந்த முன்முயற்சியில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

அமிர்த தலைமுறை இயக்கத்தில் பங்கேற்போர் தங்களின் விருப்பங்களை #Amrit Generation என்ற ஹேஷ்டேகுடன் இன்ஸ்டாகிராம் அல்லது முகநூலில் பதிவிட வேண்டும். இதற்கான தகுதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் போன்றவற்றை முகநூலின் ஜிபிஏ பக்கத்திலும், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் சமூக ஊடகங்களிலும் காணலாம்.

பங்கேற்பாளர்களின் 50 பேர் தெரிவு செய்யப்பட்டு, புதுதில்லிக்கு அழைக்கப்பட்டு மூத்த கொள்கை வகுப்போர், தொழில் துறை தலைவர்கள் போன்றோருடன் கலந்துரையாட வகை செய்யப்படும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட துறைகளில் அவர்களின் கனவுகள் நிறைவேற வழிகாட்டுதல் அளிக்கப்படும்.

தெரிவு செய்யப்பட்ட இளைஞர்கள் குருகிராமில் உள்ள மெட்டா நிறுவன அலுவலகத்திற்கு பயணம் செய்யும் வாய்ப்பையும் பெறுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1930496

***

AD/SMB/RR/GK



(Release ID: 1930532) Visitor Counter : 253