புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
சர்வதேச சூரிய சக்திக் கூட்டமைப்பின் 8-வது நிலைக்குழுக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது
Posted On:
07 JUN 2023 1:48PM by PIB Chennai
சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் (ஐ.எஸ்.ஏ) எட்டாவது நிலைக்குழுக் கூட்டம் 06.06.20223 அன்று புதுதில்லியில் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங் தலைமையில் நடைபெற்றது. நேரடியாகவும் காணொலி வாயிலாகவும் என இரண்டு முறைகளிலும் இக்கூட்டம் நடைபெற்றது. பிரான்சும் இதற்கு கூட்டாக தலைமை வகித்தது. உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் சிலர் தில்லியில் நேரில் கலந்து கொண்டனர். காணொலி வாயிலாகவும் சில நாடுகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
உறுப்பு நாடுகளின் செயல்விளக்க திட்டங்கள், சூரிய சக்தித் தொழில்நுட்ப பயன்பாட்டு வள மையம் (ஸ்டார்-சி), சூரிய சக்திக் கூட்டமைப்பின் 6-வது கூட்டத்துக்கான ஏற்பாடுகள் போன்றவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தி்ல் பேசிய மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு ஆர் கே சிங், தூய எரிசக்தி மாற்றத்திற்காக சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு தொடர்ந்து அயராது செயலாற்றி வருகிறது என்று குறிப்பிட்டார். எரிசக்தி முறை மாற்றம் என்பது உலகத்திற்கான தற்போதைய தேவை என்று அவர் கூறினார். அதை எவ்வளவு விரைவாக நாம் அடைகிறோம் என்பதே தற்போதைய கேள்வி என்று அவர் தெரிவித்தார்.
சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் மிகப் பெரிய சவால்களாக இருக்கின்றன என்று கூறிய அவர், இந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டியது அவசியம் என்றார். உலகில் கார்பன் வெளியேற்றத்தை பூஜ்யம் என்ற நிலைக்குக் கொண்டுவர, சில நாடுகள் மட்டுமே தூயஎரிசக்திக்கு மாறுவது போதாது என்று அவர் தெரிவித்தார். வளர்ச்சிக் குறைந்த நாடுகளுக்கு இதில் உதவிகளை வழங்குவதன் மூலமே இந்த சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று திரு ஆர் கே சிங் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1930426
----
AD/PLM/KPG/GK
(Release ID: 1930513)
Visitor Counter : 211