கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
சென்னையிலிருந்து இலங்கை செல்லும் இந்தியாவின் முதலாவது சர்வதேச சுற்றுலா கப்பலை திரு சர்பானந்தா சோனாவால் கொடியசைத்து அனுப்பிவைத்தார்
Posted On:
05 JUN 2023 8:29PM by PIB Chennai
சென்னையிலிருந்து இலங்கை செல்லும் இந்தியாவின் முதலாவது சர்வதேச சுற்றுலா கப்பல் – எம்வி எம்ப்ரஸ்-ஐ மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால் இன்று கொடியசைத்து அனுப்பிவைத்தார்.
சென்னையில் ரூ.17.21 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சர்வதேச கப்பல் சுற்றுலா முனையத்தின் தொடக்கத்தை இது குறிக்கிறது. நாட்டில் கப்பல் சுற்றுலா மற்றும் கடல்சார் வணிகத்தின் புதிய சகாப்தமாக இது இருக்கும். சுற்றுச்சூழல் தினத்தோடு இணைந்து நடைபெற்ற இந்த நிகழ்வின் போது துறைமுக அதிகாரிகளுடன் இணைந்து துறைமுக வளாகத்தில் மத்திய அமைச்சர் 2500 மரக்கன்றுகளை நட்டார்.
இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால், சென்னை-இலங்கை இடையே முதலாவது கப்பல் சுற்றுலா தொடங்கப்பட்டுள்ள நிலையில், இந்த துறையில் புதிய அத்தியாயத்திற்கு இது வழிவகுக்கும் என்றார். குறைந்த செலவில் உலகத் தரத்திலான கப்பல் சுற்றுலா எளிதில் அனைவருக்கும் கிடைப்பது நடைமுறைக்கு வரும்போது மக்கள் சொகுசான சுற்றுலாவை அனுபவித்து பொழுதுபோக்குவார்கள் என்றும், வியத்தகு காட்சிகளைக் காண்பார்கள் என்றும் அவர் கூறினார்.
2024 ஆம் ஆண்டு வாக்கில் மேலும் 3 புதிய சர்வதேச கப்பல் சுற்றுலா முனையங்கள் செயல்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். 2023-ல் 208 ஆக உள்ள சுற்றுலா கப்பல்களின் எண்ணிக்கை 2030-ல் 500 ஆக உயரும் என்றும், 2047 வாக்கில் இது 1100 ஆக இருக்கும் என்றும் அவர் கூறினார். இதை தொடர்ந்து சுற்றுலா கப்பல்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையும் 2030-ல் 9.5 லட்சமாகவும், 2047-ல் 37 லட்சமாகவும் அதிகரிக்கக் கூடுமென்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த சுற்றுலா கப்பல் இலங்கையிலிருந்து சென்னை திரும்புவதற்கு முன் அந்நாட்டில் உள்ள ஹம்பன் தோட்டா, திரிகோணமலை, காங்கேசன் துறை ஆகிய துறைமுகங்கள் வழியாக எம்வி எம்ப்ரஸ் சுற்றுலா கப்பல் பயணம் செய்யும்.
****
AD/SMB/RR/RK
(Release ID: 1930162)
Visitor Counter : 169