பாதுகாப்பு அமைச்சகம்
பிரதமர் மோடியின் சீரிய தலைமையின் கீழ் உலகளாவிய பொருளாதார வரைபடத்தில் தனது இடத்தை மீண்டும் பிடித்துள்ள இந்தியா எழுச்சிமிக்க சக்தியாக திகழ்கிறது: பாதுகாப்பு அமைச்சர்
Posted On:
02 JUN 2023 1:38PM by PIB Chennai
பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமையின் கீழ் உலகளாவிய பொருளாதார வரைபடத்தில் தனது இடத்தை மீண்டும் பிடித்துள்ள இந்தியா எழுச்சிமிக்க சக்தியாக இருப்பதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் 2023 ஜூன் 02-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார். கடந்த 17-ம் நூற்றாண்டு வரை சக்திவாய்ந்த பொருளாதார நாடாகவும், உலக ஜிடிபியில் கால்பங்கை பூர்த்தி செய்யும் நாடாகவும் இந்தியா திகழ்ந்ததை நினைவுகூர்ந்தார். ஆனால் பலவீனமான ராணுவம் மற்றும் அரசியல் அடிமைத்தனம் காரணமாகவே இந்தியா தனது மகிமையை இழந்ததாகவும் குற்றம்சாட்டினார்.
எனவே இந்தியா இழந்த தனது பழமையான அந்தஸ்தைப் பெறுவதற்காக மத்திய அரசு முனைப்புடன் பாடுபட்டு வருவதாக கூறிய ராஜ்நாத் சிங், இதற்காக இளைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லமையுடன் கூடிய ஆயுதப்படைகள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், காலனி ஆதிக்க மனப்பான்மையை நீக்கும் முயற்சிகள் ஆகியவற்றுடன் பாதுகாப்புத் துறையை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் கையாண்டு வருவதாகவும் கூறினார்.
எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்பதும் சக்திவாய்ந்த ராணுவத்தின் தலையாயக் கடமையாகும். வலிமையான தற்சார்புமிக்க செழுமையான தேசம் என்ற இலக்கை அடையும்போது, நட்புநாடுகளின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் சக்திபெற்றதாக நாடு உருமாறும் எனவும், இந்தியா தன்னை உலகளாவிய வல்லரசாக தம்மை மேம்படுத்திகொள்ளும் நேரம் இது என்றும் கூறினார்.
உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக திகழும் இந்தியா எதிர்வரும் 2027-ம் ஆண்டில் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக மார்கன் ஸ்டான்லி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நேரடி வரி சீர்திருத்தம், ஜிஎஸ்டி போன்றவற்றின் மூலம் எளிமையான வகையில் தொழில் செய்ய வழிவகை உருவாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள புரட்சிகர நடவடிக்கைகள், உலக நாடுகளின் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியாவை மாற்றியிருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
ராணுவ ஆயுத உற்பத்தி மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் பாதுகாப்பு துறையை தற்சார்புடையதாக மாற்ற கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய திரு ராஜ்நாத் சிங், 2022-23-ம் நிதியாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ராணுவ உபகரண உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாகவும், முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.16,000 கோடி அளவுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதையும் நினைவுகூர்ந்தார்.
சுகாதாரம், கல்வி, சாலைப்போக்குவரத்து, ரயில்வே உள்ளிட்ட அனைத்துத்துறைகளிலும் அரசு தீவிர கவனம் செலுத்திவருவதாகவும் கூறினார். நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான பொருளாதார உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதுடன் இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அரசு அக்கறை செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
ஜனநாயகம், மதசுதந்திரம், கௌரவம், அமைதி ஆகியவற்றை உலகம் முழுவதும் உருவாக்குவதே வளர்ச்சியடைந்த இந்தியாவின் தொலைநோக்குப்பார்வை என்று குறிப்பிட்ட மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இந்தியாவின் இந்த கனவை நிறைவேற்ற எந்தபாகுபாடுமின்றி இந்தியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1929325
***
AD/ES/AG/GK
(Release ID: 1929434)
Visitor Counter : 155