பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐநா அமைதிப் படையின் 75வது சர்வதேச தினத்தை இந்திய ராணுவம் கொண்டாடுகிறது

Posted On: 29 MAY 2023 11:35AM by PIB Chennai

ஐநா அமைதிப்படையின் 75வது சர்வதேச தினத்தை இந்திய ராணுவம் இன்று கொண்டாடுகிறது. இதனையொட்டி,  புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் ராணுவத் தளபதி, துணை ராணுவத் தளபதி, கடற்படை மற்றும் விமானப்படை பிரதிநிதிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  1948 ஆம் ஆண்டு, போர் நிறுத்த ஐநா கண்காணிப்பு அமைப்பு பாலஸ்தீனத்தில் செயல்படத் தொடங்கிய நாள் இதுவாகும்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில், ஐநா அமைதிப்படையில் பணியாற்றிய அல்லது பணியாற்றும் அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களின் தொழில்முறை, அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்திற்கு ஐ.நா. மற்றும் உலகெங்கிலும் உள்ள நாடுகள் அஞ்சலி செலுத்தி, தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்தவர்களின் நினைவைப் போற்றுகின்றன.  இந்த ஆண்டு ஐநா அமைதிப்படை தினத்தின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளில் இந்தியா பெரும் பங்களிப்பைக் கொண்டுள்ளது. அமைதிப்படைக்கு பெருமளவில் துருப்புகளை அளிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.  இதுவரை சுமார் 2,75,000 துருப்புகளை இந்தியா, அமைதி காக்கும் பணிகளுக்கு பங்களித்துள்ளது, தற்போது சுமார் 5,900 துருப்புகள்  சவாலான நிலப்பரப்புகளில், கடினமான சூழ்நிலையில் செயல்பட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்ட  இந்திய ராணுவத்தின் 159 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.

ஐநா ஆணையத்தின் கீழ் மோதல் பகுதிகளில் அமைதி காக்கும் பெண்களின் தேவையை கருத்தில் கொண்டு, லைபீரியாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய பெண்கள் குழுவாக இந்தியா தனது வீராங்கனைகளை காங்கோவில் ஈடுபடுத்தியுள்ளது. 

அமைதி காக்கும் நடவடிக்கைகளில் முக்கிய பயிற்சி அளிப்பதற்காக இந்திய ராணுவம் புதுதில்லியில் ஐ.நா. அமைதி காக்கும் மையத்தை,  நிறுவியுள்ளது. இந்த மையம் ஒவ்வொரு ஆண்டும் 12,000 க்கும் அதிகமான துருப்புகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

ஐநா பணிகளில் இந்தியப் படைகளின் செயல்பாட்டுத் திறன் மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, இந்திய ராணுவம் அதிநவீன உபகரணங்கள் மற்றும் வாகனங்களை நிலைநிறுத்தியுள்ளது. இந்த வாகனங்களும் உபகரணங்களும் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. கடினமான நிலப்பரப்பு, வானிலை மற்றும் பனிப் பகுதிகளில் செயல்பாட்டு நிலைமைகளின் மாறுபாடுகளை இவை வெற்றிகரமாக தாங்கி நிற்கின்றன.

ஐ.நா.  மற்றும் கூட்டாளி நாடுகளுக்கான திறன் மேம்பாட்டில் இந்தியா முன்னணியில் உள்ளது.  அமைதி காக்கும் பயிற்சி, தளவாட ஆதரவு, பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு பங்களிப்பதன் மூலம் ஐநா முன்முயற்சிகளுக்கு ஆதரவளிக்க இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது. 

***

Release ID: 1928025

SRI/PKV/RK


(Release ID: 1928063) Visitor Counter : 216