நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

நுகர்வோர் ஈடுபாட்டை அதிகரிக்கவும், தரநிலைப்படுத்தலில் நிலைத்தன்மையில் கவனம் செலுத்தவும் ஐஎஸ்ஓ உறுப்பு நாடுகள் முடிவு

Posted On: 28 MAY 2023 10:44AM by PIB Chennai

இந்தியத் தரநிர்ணய அமைவனம் பிஐஎஸ்  நடத்திய நான்கு நாள் 44வது ஐஎஸ்ஓ கோபால்கோ மாநாடு 26ந்தேதி  புதுதில்லியில் நிறைவடைந்தது. நிறைவு விழாவில், மத்திய  நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமிகு நிதி காரே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

 “சமீபத்திய ஆண்டுகளில் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம். மேலும், இதுபோன்ற விசயங்களை விரைவாகக் கண்காணிப்பதற்கு உதவும் வகையில் வலுவான நுகர்வோர் குறைகளைத் தீர்க்கும் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தரப்படுத்தலில் நிலைத்தன்மையை  முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். அதே வேளையில், உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்புகளின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்’’ என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பிஐஎஸ் கூடுதல் தலைமை இயக்குநர் திருமிகு  மம்தா உபாத்யாய் லால் , இந்திய தரநிர்ணய அமைவனத்தின்  செயல்பாடுகள் மற்றும் முயற்சிகளை எடுத்துரைத்தார். தர நிர்ணயத்தில் பலவிதமான முயற்சிகளை நிறுவனம்  எடுத்துள்ளது. தரப்படுத்தலில் நுகர்வோர் ஈடுபாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடக்க உரையாற்றினார்.

நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான பல்வேறு கருப்பொருள்கள் பற்றிய உரையாடல் அமர்வுகள், பட்டறைகள் மற்றும் கலந்துரையாடல்கள்  ஆகியவை இந்த மாநாட்டில் நடைபெற்றன. பயிலரங்குகளின் போது, பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் குழுக்கள் அமைக்கப்பட்டன. அங்கு அவர்கள் கருத்துக்கள், தகவல்கள், அனுபவங்கள் போன்றவற்றை பரிமாறிக் கொண்டனர்.

நான்கு நாள் நிகழ்வில், இந்திய அரசு மற்றும் வணிகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் உள்பட புகழ்பெற்ற உலகளாவிய பங்குதாரர்களின் சர்வதேச பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.           

 

***

AD/PKV/DL



(Release ID: 1927848) Visitor Counter : 126