பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் காந்திநகரில் அகில பாரதிய சிக்ஷா சங் அமர்வில் பிரதமர் பங்கேற்றார்


“குஜராத் ஆசிரியர்களுடனான எனது அனுபவம் தேசிய அளவிலும், கொள்கைக் கட்டமைப்பை உருவாக்குவதிலும் எனக்கு உதவியது”

“உலகத் தலைவர்கள் பலர் தங்களின் இந்திய ஆசிரியர்களை உயர்வாக மதிக்கிறார்கள்”

“நிலைபேறுள்ள மாணவனாக இருக்கும் நான் சமூகத்தில் நடக்கும் எதையும் துல்லியமாக கவனிப்பதற்கு கற்றுக் கொண்டுள்ளேன்”

“பாரம்பரிய முறையிலான கற்பித்தலிலிருந்து ஆசிரியர்கள் விடுபட நம்பிக்கையுள்ள அச்சமற்ற இக்கால மாணவர்கள் சவால் விடுக்கின்றனர்”

“கற்றல், கல்லாமை, மறுபடியும் கற்றல் என்பதற்கு அவர்கள் நமக்கு வாய்ப்பளிப்பதால் தனிப்பட்ட முறையிலும், தொழில் முறை ரீதியாகவும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக கருதி ஆர்வமுள்ள மாணவர்களிடமிருந்து வரும் சவால்களை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்”

“தொழில்நுட்பம் தகவலை தர முடியும்; ஆனால் கண்ணோட்டத்தை தர இயலாது”

“21 ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப புதிய நடைமுறைகளை இந்தியா உருவாக்கி வருகிறது, இதனைக் கருத்தில் கொண்டு புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது”

“மாநில மொழிகளில் கல்விக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. இது ஆசிரியர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்தும்”

प्रविष्टि तिथि: 12 MAY 2023 12:49PM by PIB Chennai

அகில பாரதிய சிக்ஷா சங் அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இது அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சம்மேளனத்தின் இரண்டாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் 29-ஆவது மாநாடாகும். இந்த நிகழ்வையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார். ‘மாற்றத்தை ஏற்படுத்தும் கல்வியின் இதயமாக ஆசிரியர்கள்’ என்பது இந்த மாநாட்டின் மையப்பொருளாகும்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டோரிடையே உரையாற்றிய பிரதமர், அமிர்த காலத்தில் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தீர்மானத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில் அனைத்து ஆசிரியர்களின் மகத்தான பங்களிப்பை எடுத்துரைத்தார். தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் உதவியுடன் குஜராத்தின் முதலமைச்சர் என்ற முறையில் கல்வித் துறையில் மாற்றத்திற்கான அனுபவத்தை எடுத்துரைத்த பிரதமர், பள்ளியில் இடைநிற்றல் சதவீதம் 40-லிருந்து 3 ஆக குறைந்துள்ளது என குஜராத்தின் தற்போதைய முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் தெரிவித்ததாக கூறினார். குஜராத் ஆசிரியர்களுடனான எனது அனுபவம் தேசிய அளவிலும், கொள்கைக் கட்டமைப்பை உருவாக்குவதிலும் எனக்கு உதவியது என்று பிரதமர் குறிப்பிட்டார். பள்ளிகளில் மாணவிகளுக்கான கழிப்பறைகள் கட்டுமானம் இயக்க ரீதியில் நடைபெற்றதை ஒரு உதாரணமாக அவர் எடுத்துரைத்தார். பழங்குடியினர் பகுதிகளில் அறிவியல் கல்வியின் தொடக்கம் பற்றியும் அவர் பேசினார்.

உலகத் தலைவர்கள் பலர் தங்களின் இந்திய ஆசிரியர்களை உயர்வாக மதிக்கிறார்கள் என்பது பற்றியும் பிரதமர் பேசினார். வெளிநாட்டு பிரமுகர்களை சந்திக்கும்போது இதனை தாம் கேட்டறிந்ததாக அவர் கூறினார். பூடான் மற்றும் சவூதி அரேபிய மன்னர்களும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநரும் தங்களின் இந்திய ஆசிரியர்கள் பற்றி உயர்வாக பேசியதை பிரதமர் நினைவுகூர்ந்தார்.

நிலைபேறுள்ள மாணவனாக இருக்கும் நான் சமூகத்தில் நடக்கும் எதையும் துல்லியமாக கவனிப்பதற்கு கற்றுக் கொண்டதை பெருமிதத்துடன் பேசினார். ஆசிரியர்களுடனான தமது அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார். 21 ஆம் நூற்றாண்டின் மாறி வரும் காலத்தில் இந்தியாவின் கல்வி முறை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் மாறி வருவதாக அவர் தெரிவித்தார். முன்பெல்லாம் நிதி மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு சவால்களாக இருந்தன. இருப்பினும் மாணவர்கள் சவாலாக இருந்ததில்லை. தற்போது அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் நிதி சவால்கள் படிப்படியாக தீர்வு காணப்படுகின்றன. மாணவர்கள் எல்லையற்ற ஆர்வத்தை கொண்டுள்ளனர். பாரம்பரிய முறையிலான கற்பித்தலிலிருந்து ஆசிரியர்கள் விடுபட நம்பிக்கையுள்ள அச்சமற்ற இக்கால மாணவர்கள் சவால் விடுக்கின்றனர் என்று அவர் கூறினார். மாணவர்கள் பலவிதமான தகவல் ஆதாரங்களைப் பெற்றிருப்பதால் ஆசிரியர்கள் கூடுதல் தகவல்களை பெற்றிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. கற்றல், கல்லாமை, மறுபடியும் கற்றல் என்பதற்கு அவர்கள் நமக்கு வாய்ப்பளிப்பதால் தனிப்பட்ட முறையிலும், தொழில் முறை ரீதியாகவும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக கருதி ஆர்வமுள்ள மாணவர்களிடமிருந்து வரும் சவால்களை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

கற்றுத் தருபவர் என்பதோடு மாணவர்களின் வழிகாட்டியாகவும் ஆசிரியர்கள் இருக்க வேண்டுமென்று அவர் கூறினார். எந்தவொரு பாடத்திலும் ஆழமான புரிதலை பெறுவது எவ்வாறு என உலகின் எந்தத் தொழில்நுட்பமும் போதித்ததில்லை என்று உறுதிபட தெரிவித்த பிரதமர், தகவல்கள் மிகையாகும்போது முதன்மை தலைப்புகள் மீதான கவனம் மாணவர்களுக்கு சவாலாக மாறுகிறது என்றார். எனவே 21 ஆம் நூற்றாண்டில் மாணவர்களின் வாழ்க்கையில் ஆசிரியர்களின் பங்கு முன்பிருந்ததை விட அதிக அர்த்தமுள்ளதாக மாறியிருக்கிறது என்று தெரிவித்தார். தங்களின் குழந்தைகள் மிகச் சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்பட வேண்டுமென்று அனைத்து பெற்றோர்களும் விரும்புகிறார்கள். இதனால் அவர்கள் மீது தங்களின் முழு நம்பிக்கையை வைக்கிறார்கள் என்றும் பிரதமர் கூறினார்.

புதிய கல்விக் கொள்கை பற்றி பேசிய பிரதமர், இந்தக் கொள்கையின் உருவாக்கத்தில் லட்சக்கணக்கான ஆசிரியர்களின் பங்களிப்பு இருந்ததை பெருமையாக பிரதமர் குறிப்பிட்டார். 21 ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப புதிய நடைமுறைகளை இந்தியா உருவாக்கி வருகிறது, இதனைக் கருத்தில் கொண்டு புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். புதிய கல்விக் கொள்கை புத்தக அறிவு மட்டுமே என்று மாணவர்களை கட்டுப்படுத்திய பொருத்தமற்ற பழைய கல்விக் கொள்கையை மாற்றியமைக்கிறது என்று அவர் கூறினார். புதிய கொள்கை நடைமுறை புரிதலை அடிப்படையாகக் கொண்டது.

தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி வழியாக கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது பற்றி குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவை 200 ஆண்டுகளுக்கு மேல் பிரிட்டிஷார் ஆட்சி செய்தபோதும் மக்கள் தொகையில் மிகக் குறைந்த அளவினரே ஆங்கிலம் அறிந்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டினார். தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மாநில மொழியில் கற்றிருந்தாலும் ஆங்கிலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அதனை கலந்து விடுகிறார்கள். இதனால் தற்போதைய அரசு மாநில மொழியில் கற்பித்தல் என்பதை அறிமுகம் செய்து மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். மாநில மொழிகளில் கல்விக்கு அரசு முக்கியத்துவம் அளிப்பது ஆசிரியர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்தும்.

தாம் முதலமைச்சரானபோது தனிப்பட்ட இரண்டு வாழ்த்துக்கள் பெற்றதை பிரதமர் நினைவுகூர்ந்தார். முதலில் முதலமைச்சர் இல்லத்திற்கு பள்ளி நண்பர்களை அழைத்ததையும், அடுத்ததாக அனைத்து ஆசிரியர்களையும் கௌரவித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். இப்போதும் கூட தமது ஆசிரியர்களுடன் தாம் தொடர்பில் இருப்பதாக திரு.மோடி கூறினார். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையேயான தனிப்பட்ட பிணைப்பு குறைந்து வரும் போக்கு குறித்து அவர் கவலை தெரிவித்தார். பள்ளிகளை விட்டு வெளியேறிய பின் மாணவர்கள் அவற்றிலிருந்து இணைப்பை துண்டித்துக் கொள்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார். மாணவர்களும், நிர்வாகமும் கல்வி நிறுவனம் நிறுவப்பட்ட தேதியை அறிந்திருப்பதில்லை. பள்ளிக்கான பிறந்தநாளை கொண்டாடுவது மாணவர்களுக்கும், பள்ளிகளுக்கும் இடையேயான உறவுத் துண்டிப்பை சரிசெய்யும் என்று அவர் கூறினார்.

ஆசிரியர்களால் செய்யப்படும் சிறு சிறு மாற்றங்களும், இளம் மாணவர்களின் வாழ்க்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களை கொண்டு வரக்கூடும். அனைத்து ஆசிரியர்களும் இந்தியாவின் மரபுகளை முன்னெடுத்துச் செல்வார்கள் என்றும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்குவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்து பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.ஆர்.பாட்டீல், மத்திய அமைச்சர் திரு புருஷோத்தம் ரூபாலா, மத்திய இணையமைச்சர் டாக்டர் முஞ்ச்பாரா மகேந்திரபாய், அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் திரு ராம்பால் சிங், நாடாளுமன்ற உறுப்பினர்கள், குஜராத் அமைச்சர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

******

AD/SMB/RR/KPG


(रिलीज़ आईडी: 1923678) आगंतुक पटल : 180
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam