குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
இந்தியாவின் வளர்ச்சியில் பிரிக்க முடியாத பகுதியாக வடகிழக்கின் வளர்ச்சி உள்ளது – குடியரசு துணைத்தலைவர்
Posted On:
03 MAY 2023 6:15PM by PIB Chennai
மணிப்பூர் மாநிலத்திற்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டுள்ள குடியரசு துணைத்தலைவர் திரு ஜெக்தீப் தன்கர், மணிப்பூரின் தனமஞ்சூரி பல்கலைக்கழகத்திலும், மணிப்பூர் பல்கலைக்கழகத்திலும் உரையாற்றினார்.
'கிழக்கைப் பார்' கொள்கையில் இருந்து மேம்படுத்தப்பட்ட, 'கிழக்கே செயல்படுங்கள்' என்ற இந்திய அரசின் கொள்கை, வடகிழக்கு பகுதிக்கு உத்வேகத்தை அளித்து, அதன் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில், வடகிழக்கின் வளர்ச்சி இன்றியமையாதது என்று அவர் கூறினார்.
தனமஞ்சூரி பல்கலைக்கழகத்தில் பேசிய திரு தன்கர், வடகிழக்கு பிராந்தியத்தில் உள்கட்டமைப்பு வேகமாக மேம்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டினார். மேம்படுத்தப்பட்ட ரயில் இணைப்பு, விமான நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் பிற முயற்சிகளைக் குறிப்பிட்ட அவர், வடகிழக்குக் கலாச்சாரம், பன்முகத்தன்மை, நடனங்கள் மற்றும் இயற்கைத் தாவரங்கள் உலகில் இணையற்றவை என்று கூறினார். மணிப்பூர் மக்களின் அரவணைப்பு மற்றும் விருந்தோம்பல் தன் இதயத்தைத் தொட்டதாகவும், மாநிலத்தின் மகிழ்ச்சிக் குறியீடு உண்மையில் உயர்ந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் கூறினார்.
மாணவர்களை 2047-ன் வீரர்கள் என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர், மாணவர்கள் பெரிய யோசனைகளை கனவு காண்பது மட்டுமல்லாமல், அவற்றை நனவாக்க வேண்டும், வளர்ச்சிக்கான வழிகளைப் பயன்படுத்தி, வேலை தேடுபவர்களை விட வேலைகளை உருவாக்குபவர்களாக மாற வேண்டும் என்றார்.
தேசிய கல்விக் கொள்கை - 2020 ஒரு தொலைநோக்கு ஆவணம் என்றும், மாற்றத்துக்கான காரணியாகும் என்றும் கூறிய அவர், கல்வி என்பது ஒரு பட்டப்படிப்புடன் மட்டுப்படுத்தப்படாமல், திறன்களை மேம்படுத்துவதற்கும் மதிப்புகளை வளர்ப்பதற்கும் வழிவகுக்க வேண்டும் என்றும் கூறினார்.
மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் குடியரசு துணைத் தலைவர்
மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் , பல்வேறு யோசனைகளை பரிசோதிக்க அவர்களை ஊக்குவித்தார். அவர்கள் தங்கள் கனவுகளை செயல்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவின் வளர்ச்சியை உலகம் உற்றுநோக்கிக் கொண்டிருப்பதாகக் கூறிய அவர், இது அதன் செழிப்பான ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பின் மூலம் சாத்தியமானதாக கூறினார். இந்தியா இப்போது வாய்ப்புகளின் பூமியாக பார்க்கப்படுகிறது, உலகின் ஒவ்வொரு முதலீட்டாளரும் அதன் வளமான மனித வளங்கள் மற்றும் பெருகிய முறையில் வெளிப்படையான அரசாங்க செயல்முறைகள் காரணமாக இந்தியாவின் மீது அதிக கவனம் செலுத்துகின்றனர் என்றார். தேசத்தை எப்போதும் முதன்மையாக வைத்து அதன் சாதனைகளில் பெருமை கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
மணிப்பூர் ஆளுநர் திருமிகு அனுசுயா உய்கே, மணிப்பூர் முதலமைச்சர் திரு. என். பிரேன் சிங், வெளியுறவு மற்றும் கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர். ராஜ்குமார் ரஞ்சன் சிங் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
***
AD/PKV/KPG
(Release ID: 1921785)
Visitor Counter : 149