சுற்றுலா அமைச்சகம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் 2023 மே 01 முதல் 04-ம் தேதி வரை நடைபெறும் அரேபிய சுற்றுலாச் சந்தை (ATM) 2023-ல் சுற்றுலா அமைச்சகம் பங்கேற்கிறது

Posted On: 02 MAY 2023 3:33PM by PIB Chennai

அரேபிய சுற்றுலாச் சந்தை (ATM) 2023-ல் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் பங்கேற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி 2023-ம் ஆண்டு மே 1 முதல் 4-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெறுகிறது. அரேபிய சுற்றுலாச் சந்தையானது சுற்றுலாத் துறைக்கான முக்கிய சர்வதேச நிகழ்வுகளில் ஒன்றாகும். இதில் உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்கள் பங்கேற்பர்.

பல்வேறு கலாச்சாரம், பாரம்பரியம், உணவு வகைகள் மற்றும் இயற்கை அழகு, சாகசம், வனவிலங்குகள், ஆரோக்கியம் ஆகியவற்றுடன், தனித்துவமான மற்றும் உண்மையான அனுபவங்களைத் தேடும் பயணிகளுக்கு இந்தியா ஒரு சிறந்த இடமாகும். மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் இந்த நிகழ்ச்சியில், 2023-ல் இந்தியாவுக்கு வருகை தாருங்கள் எனப் பொருள்படும் Visit India Year 2023 என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. பயண முகவர்கள், விமான நிறுவனங்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் உட்பட மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க சுற்றுலாத் துறையுடன் உறவுகளை வலுப்படுத்தவும் இந்த நிகழ்ச்சி வாய்ப்பளிக்கும்.

அரேபிய சுற்றுலாச் சந்தை 2023-ல் இந்தியாவின் பங்கேற்பு, சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான நாட்டின் உறுதியை எடுத்துரைக்கிறது. இந்தியாவின் சுற்றுலா உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக இந்தியாவை மேம்படுத்துவதற்கும் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் 24x7 கட்டணமில்லா பல மொழி உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர 12 இந்திய மொழிகளிலும், அரபு, பிரெஞ்சு, ஜெர்மன் உள்பட 10 சர்வதேச மொழிகளில் பேசலாம். மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.incredibleindia.org) ஆன்மீகம், பாரம்பரியம், சாகசம், கலாச்சாரம், யோகா, ஆரோக்கியம் மற்றும் பல முக்கிய அனுபவங்களைக் காண முடியும். இந்த இணையதளத்தை ஹிந்தி மற்றும் முன்னணி சர்வதேச மொழிகளிலும்  காண முடியும்.

குறிப்பாக இந்தியாவின் ஜி-20 தலைமையின் பின்னணியில், சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், சுற்றுலா அமைச்சகம் இந்த ஆண்டை ‘விசிட் இந்தியா இயர் 2023’ என்று கொண்டாடுகிறது. நம் நாட்டின் பல்வேறு சுற்றுலாச் சலுகைகளை முன்னிலைப்படுத்தவும், உலக சுற்றுலாப் பயணிகளுக்கு அவற்றைக் காட்சிப்படுத்தவும், இந்நிகழ்ச்சியில் கவனம் செலுத்தப்படுகிறது.

 

-----

AD/CR/KPG



(Release ID: 1921447) Visitor Counter : 148


Read this release in: English , Urdu , Hindi , Marathi