ஆயுஷ்
2023-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்திற்கான 50 நாட்கள் கவுண்டவுனை நினைவுகூரும் வகையில் ஜெய்ப்பூரில் நாளை யோகா திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
Posted On:
01 MAY 2023 6:19PM by PIB Chennai
மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் நாளை (2023 மே 2, 2023) ஜெய்ப்பூரில் உள்ள ஸ்ரீ பவானி நிகேதன் ஷிக்ஷா சமிதி விளையாட்டு மைதானத்தில் சர்வதேச யோகா தினத்திற்கான 50 நாட்கள் கவுண்ட்டவுனை நினைவுகூரும் வகையில் யோகா திருவிழாவைக் கொண்டாடவுள்ளது.
நாளைய நிகழ்ச்சி நடைபெறவுள்ள இடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சர்பானந்த சோனோவால், பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் சர்வதேச யோகா தினம் (IDY) ஒரு முக்கிய நிகழ்வாக மாறியுள்ளதாகவும், இது தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் உற்சாகமாகக் கொண்டாடப்படுவதாகக் கூறினார்.
இந்த ஆண்டுக்கான சர்வதேச யோகா தின செயல் திட்டத்தைப் பற்றி விவரித்த அமைச்சர், “இந்த ஆண்டு, ஆயுஷ் அமைச்சகம் உலகெங்கிலும் உள்ள முக்கியமான துறைமுகங்களில் பொது யோகா நெறிமுறை (சிஒய்பி) பயிற்சிகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகக் கூறினார். இந்த தனித்துவமான 'ஓஷன் ரிங் ஃபார் யோகா' திட்டத்திற்காக வெளியுறவு அமைச்சகம், துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
யோகா பயிற்சியை நாட்டின் 2 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல இந்த ஆண்டு பொது சேவை மையங்களை பயன்படுத்தவுள்ளதாகவும், கிராமப்புறங்களில் யோகா செய்தியைப் பரப்ப ஆசிய காமன்வெல்த் கல்வி ஊடக மையத்தின் (CEMCA) சமூக வானொலி வலையமைப்பு பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
தற்போது இந்தியா முழுவதும் பயணம் செய்து வரும் ஜி-20 பிரதிநிதிகளின் வருகையால், உலகம் முழுவதும் யோகா வளர்ந்து வருவது தெளிவாகியுள்ளதாகவும் மத்திய ஆயுஷ் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
ஏற்கனவே ராஜஸ்தான் அரசுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து மேலும் விரிவாகக் கூறிய திரு. சோனோவால், மத்திய ஆயுஷ் அமைச்சகம் 2014-15-ம் ஆண்டு முதல் 2022-23-ம் ஆண்டு வரை தேசிய ஆயுஷ் இயக்கத்தின் (NAM) கீழ் மாநில வருடாந்திர செயல் திட்டங்களில் (SAAPs) முன்மொழியப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்த ராஜஸ்தான் மாநில அரசுக்கு சுமார் ரூ. 230 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் கூறினார்.
***
AD/CR/KPG
(Release ID: 1921231)
Visitor Counter : 178