ஜல்சக்தி அமைச்சகம்
இந்தியாவில் நீர்நிலைகள் குறித்த முதல் கணக்கெடுப்பு
Posted On:
23 APR 2023 5:14PM by PIB Chennai
இந்திய வரலாற்றில் முதன்முறையாக, தொலைநோக்குப் பார்வை கொண்ட பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையின் கீழ், மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷெகாவத்தின் வழிகாட்டுதல்படி, மத்திய ஜல் சக்தி அமைச்சகம் நாடு முழுவதுமுள்ள நீர்நிலைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு, குளங்கள், ஏரிகள் என இயற்கையாலும் மனிதர்களாலும் உருவாக்கப்பட்ட நீர்நிலைகள் உட்பட இந்தியாவின் நீர் ஆதாரங்களின் விரிவான பட்டியலை வழங்குவதோடு, நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பு குறித்தத் தரவுகளையும் சேகரித்துள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து நீர்நிலைகளின் விரிவான தரவுகளை அறிய, 6-வது சொட்டு நீர்ப்பாசன கணக்கெடுப்புடன் இணைந்து, இந்த "நீர்ப்பாசனக் கணக்கெடுப்பு" தொடங்கப்பட்டது.
நீர்நிலைகளின் வகை, ஆக்கிரமிப்புகளின் நிலை, பயன்பாடு, சேமிப்புத் திறன் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டன. இது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் பயன்பாட்டில் உள்ள மற்றும் பயன்பாட்டில் இல்லாத அனைத்து நீர்நிலைகளையும் உள்ளடக்கியது. பாசனம், தொழில், மீன் வளர்ப்பு, வீட்டுப்பயன்பாடு, பொழுதுபோக்கு, நிலத்தடி நீர் போன்ற நீர்நிலைகளின் அனைத்து வகையான பயன்பாடுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
நீர்நிலைகள் கணக்கெடுப்பின் முக்கிய அம்சங்கள்/கண்டுபிடிப்புகள் பின்வருமாறு:
நாட்டில் 24,24,540 நீர்நிலைகள் கணக்கிடப்பட்டுள்ளன, அவற்றில் 97.1% (23,55,055) கிராமப்புறங்களிலும், 2.9% (69,485) நகர்ப்புறங்களிலும் உள்ளன.
நீர்நிலைகளின் எண்ணிக்கையில் மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, அசாம் ஆகிய 5 மாநிலங்களில் மட்டும் நாட்டின் மொத்த நீர்நிலைகளில் 63% உள்ளன.
நகர்ப்புறங்களில் உள்ள நீர்நிலைகளின் எண்ணிக்கையில் மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, உத்தரப் பிரதேசம், திரிபுரா மாநிலங்கள் முதல் 5 இடத்தில் உள்ளன. கிராமப்புறங்களில் மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, அசாம் ஆகிய மாநிலங்கள் முதல் 5 இடங்களைப் பெற்றுள்ளன.
இந்தக் கணக்கெடுப்பு குறித்த அறிக்கை ஜல்சக்தித் துறையின் இணையதளத்தில் உள்ளது: https://jalshakti-dowr.gov.in.
அகில இந்திய அறிக்கையைப் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு: https://jalshakti-dowr.gov.in/document/all-india-report-of-first-census-of-water-bodies-volume-1/
மாநில வாரியான அறிக்கையைப் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு: https://jalshakti-dowr.gov.in/document/state-wise-report-of-first-census-of-water-bodies-volume-2/
***
SMB/CR/DL
(Release ID: 1918980)
Visitor Counter : 453