பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் ஏப்ரல் 24 அன்று கொண்டாடப்படுகிறது

Posted On: 22 APR 2023 4:02PM by PIB Chennai

இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், மத்தியப் பிரதேச அரசுடன் இணைந்து, தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை (NPRD) 2023-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதியன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரேவாவில் கொண்டாடவுள்ளது. ரேவாவில் உள்ள சிறப்பு ஆயுதப் படை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய விழாவில் பிரதமர் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.

பஞ்சாயத்து அளவில் பொது கொள்முதலுக்கான ஒருங்கிணைந்த இ-கிராம்ஸ்வராஜ் மற்றும் அரசின் இணைய வழிச் சந்தையின் ஒருங்கிணைந்த இணைய தளத்தைப் பிரதமர் திறந்து வைக்கிறார். இது டிஜிட்டல் இந்தியா திட்டத்தை வலுப்படுத்துவதுடன் கிராமப்புற பொருளாதாரத்திற்கும், தொழில்முனைவோருக்கும் பெரும் ஊக்கத்தை அளிக்கும்.

பிரதமரின் கிராமப்புற  வீட்டு வசதி திட்டத்தின்  (PMAY-G)  கீழ் 4 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளின் வீடுகளுக்கு பிரதமர் புதுமனை புகுவிழா நடத்தி வைக்கிறார். தற்போது 4.11 லட்சம் வீடுகள் புதுமனை புகுவிழாவிற்குத் தயாராக உள்ளன. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.7,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவிலும் பிரதமர் கலந்து கொள்கிறார். பின்னர் ரேவா - இத்வாரி ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் இந்தியா @2047-க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 24-ம் தேதின்று சிறப்பு கிராம சபையைக் கூட்டவும், கிராம பஞ்சாயத்துகளுக்கு ஆலோசனை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அனைத்து மாநில/யூனியன் அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

பின்னணி:

அடித்தட்டு மக்களுக்கு அதிகாரத்தைப் பரவலாக்கும் வகையில் 1992-ம் ஆண்டு ஏப்ரல் 24 நடைமுறைக்கு வந்த அரசியலமைப்பு சட்டத்தின் 73-வது திருத்தத்தைக் கொண்டாடும் வகையில் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதியை தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமாக (NPRD) கொண்டாடுகிறது. இந்த ஆண்டு, 30-வது  தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  கொண்டாடப்படவுள்ளது.

***

PKV/CR/DL



(Release ID: 1918793) Visitor Counter : 325