பிரதமர் அலுவலகம்

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஸ்ரீமந்தா சங்கர்தேவ் கலாக்ஷேத்ராவில் கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்டங்களை குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

அசாம் காவல்துறையால் வடிவமைக்கப்பட்ட 'அஸ்ஸாம் காப்' மொபைல் செயலியை அறிமுகம்

"குவஹாத்தி உயர்நீதிமன்றம் அதன் சொந்த பாரம்பரியம் மற்றும் அடையாளத்தைக் கொண்டுள்ளது"

"ஜனநாயகத்தின் தூணாக விளங்கும் நீதித்துறையானது 21ஆம் நூற்றாண்டில் இந்தியர்களின் எல்லையற்ற விருப்பங்களை நிறைவேற்றுவதில் வலுவான முக்கியப் பங்கு வகிக்கிறது"

"நாங்கள் ஆயிரக்கணக்கான பழமையான சட்டங்களை ரத்து செய்தோம் இணக்கங்களைக் குறைத்தோம்"

"அரசாக இருந்தாலும் சரி, நீதித்துறையாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு அமைப்பின் பங்கும் அதன் அரசியலமைப்பு கடமையும் சாமானிய குடிமக்களின் வாழ்க்கை வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளது"

"நாட்டில் நீதி வழங்கும் முறையை நவீனமயமாக்க தொழில்நுட்பத்திற்கு வரம்பற்ற வாய்ப்பு உள்ளது"

"செயற்கை நுண்ணறிவு மூலம் சாதாரண குடிமகனின் நீதியை எளிதாக்குவதற்கான முயற்சிகளை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும்"

Posted On: 14 APR 2023 4:09PM by PIB Chennai

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஸ்ரீமந்தா சங்கர்தேவ் கலாக்ஷேத்ராவில் இன்று கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். நிகழ்ச்சியின் போது, ​​அசாம் காவல்துறையால் வடிவமைக்கப்பட்ட ‘அசாம் காப்’ என்ற மொபைல் செயலியை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த செயலி குற்றத்தின் தரவுத்தளத்திலிருந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் வாகனத் தேடல்களை எளிதாக்கும்.

 

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டைக் கொண்டாடும் நேரத்தில் கவுகாத்தி உயர்நீதிமன்றம் 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிப்பிட்ட பிரதமர், அனுபவத்தைப் பாதுகாத்து, புதிய இலக்குகளை அடைவதற்கான பொறுப்பான மாற்றங்களோடு அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டிய தருணம் இது என்றார். "கவுகாத்தி உயர்நீதிமன்றம் அதன் சொந்த பாரம்பரியத்தையும் அடையாளத்தையும் கொண்டுள்ளது." அருணாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்து ஆகிய அண்டை மாநிலங்களை உள்ளடக்கிய குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பு மிகப்பெரியது என்று பிரதமர் குறிப்பிட்டார். 2013 ஆம் ஆண்டு வரை கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பில் ஏழு மாநிலங்கள் இருந்ததை சுட்டிக்காட்டிய பிரதமர், அதனுடன் தொடர்புடைய முழு வடகிழக்கின் வளமான வரலாறு மற்றும் ஜனநாயக பாரம்பரியத்தை எடுத்துரைத்தார். இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில், முழு வடகிழக்கு மாநிலங்களுடனும், குறிப்பாக சட்ட சகோதரத்துவத்துடன் அஸ்ஸாம் மாநிலத்திற்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். இன்று பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் ஜெயந்தியின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு, டாக்டர் அம்பேத்கருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார். சமத்துவம் மற்றும் ஒற்றுமை ஆகிய அரசியலமைப்பு மதிப்பீடுகளே நவீன இந்தியாவின் அடித்தளம் என்று அவர் கூறினார்.

       பிரதமர், கடந்த சுதந்திர தினத்தன்று செங்கோட்டையிலிருந்து எடுத்துரைத்த இந்தியாவின் லட்சிய சமுதாயத்தைப் பற்றிய விரிவான விளக்கத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார். 21ஆம் நூற்றாண்டில் இந்திய மக்களின் விருப்பங்கள் எல்லையற்றவை என்றும், ஜனநாயகத்தின் தூணாக நீதித்துறை இந்த விருப்பங்களை நிறைவேற்றுவதில் வலுவான முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். வலுவான, துடிப்பான மற்றும் நவீன சட்ட அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அரசியலமைப்பு எதிர்பார்க்கிறது. சட்டமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த பொறுப்பை சுட்டிக் காட்டிய பிரதமர், காலாவதியான சட்டங்களை ஒழிப்பதற்கான உதாரணத்தைக் கூறினார். "நாங்கள் ஆயிரக்கணக்கான பழமையான சட்டங்களை ரத்து செய்தோம், இணக்கங்களைக் குறைத்தோம்" என்று அவர் கூறினார். இதுபோன்ற சுமார் 2000 சட்டங்கள் மற்றும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணக்கங்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இதனால் குற்ற நீக்கம் நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளது.

              அது அரசாங்கமாக இருந்தாலும் சரி, நீதித்துறையாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு அமைப்பின் பங்கும் அதன் அரசியலமைப்புக் கடமையும் சாமானிய குடிமக்களின் வாழ்க்கை வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளது” என்று பிரதமர் குறிப்பிட்டார். எளிமையாக வாழ்வதற்கு தொழில்நுட்பம் ஒரு சக்திவாய்ந்த கருவியாக உருவெடுத்துள்ளது என்பதை எடுத்துரைத்த பிரதமர், சாத்தியமான ஒவ்வொரு துறையிலும் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவதை அரசு உறுதி செய்து வருவதாகக் கூறினார்.  ஆதார் மற்றும் டிஜிட்டல் இந்தியா மிஷன் ஆகியவற்றின் உதாரணங்களை அளித்த பிரதமர், ஒவ்வொரு திட்டமும் ஏழைகளின் உரிமைகளை உறுதி செய்யும் ஊடகமாக மாறியுள்ளது என்றார். பிரதமர் ஸ்வாமித்வா யோஜனாவைப் பற்றிப் பேசிய பிரதமர், சொத்துரிமைப் பிரச்சினையைக் கையாளுவதில் இந்தியா பெரும் முன்னிலை வகித்துள்ளது. இதனால் சட்டஅமைப்பு சுமைகளை ஏற்றுக்கொண்டுள்ளது என்றார். வளர்ந்த நாடுகள் கூட சொத்துரிமை பிரச்சினையை கையாள்வதில் தெளிவற்ற தண்மையைக் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். நாட்டில் உள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களின் ட்ரோன் மேப்பிங் மற்றும் லட்சக்கணக்கான குடிமக்களுக்கு சொத்து அட்டை விநியோகம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சொத்து தொடர்பான வழக்குகள் குறைந்து குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் நீதி வழங்கும் முறையை நவீனமாக்க தொழில்நுட்பத்திற்கு வரம்பற்ற வாய்ப்பு இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். உச்சநீதிமன்ற இ-கமிட்டியின் பணிகளைப் பாராட்டிய பிரதமர், இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இ-நீதிமன்ற பணியின் 3-ம் கட்டம் பற்றி கூட்டத்தில்  கூறினார். "நீதித்துறை அமைப்பில் திறமையைக் கொண்டுவர  செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகள் பற்றியும் அவர் குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவு மூலம் சாமானிய மக்களுக்கு நீதி கிடைப்பதை எளிதாக்கும் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும்” என்று பிரதமர் கூறினார்.

வழக்குக்கான மாற்றுத் தீர்வு முறை பற்றிப் பேசிய பிரதமர், வடகிழக்கின் வளமான பாரம்பரிய உள்ளூர் மாற்றுத் தீர்வு முறையைத் சுட்டிக்காட்டினார். வழக்காறு சட்டங்கள் குறித்த 6 புத்தகங்களை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளதையும் அவர் பாராட்டினார். இந்த மரபுகளை சட்டக் கல்லூரிகளில் கற்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நாட்டின் சட்டங்களைப் பற்றிய சரியான அறிவும் புரிதலும்தான் நீதியை எளிதாக்குவதற்கான முக்கியமான பகுதியாகும் என்றும் இதுவே நாட்டின் மீதும் அதன் அமைப்புகளின் மீதும் மக்களின்  நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்றும் பிரதமர் கூறினார். அனைத்து சட்டங்களின் எளிமையான பதிப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் குறித்த தகவலைத் திரு மோடி தெரிவித்தார். "எளிய மொழியில் சட்டங்களை உருவாக்கும் முயற்சி இருக்கிறது என்றும், இந்த அணுகுமுறை நம் நாட்டின் நீதிமன்றங்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்" என்றும் அவர் கூறினார். ஒவ்வொரு குடிமகனும் தங்கள் சொந்த மொழியில் இணையத்தை அணுக உதவுவதை நோக்கமாகக் கொண்ட பாஷிணி இணையப்பக்கம் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இதனால் நீதிமன்றங்களும் பயனடைகின்றன என்றார்.

சிறு குற்றங்களுக்காகப் பல ஆண்டுகள் சிறையில் வாடும், வளமோ, பணமோ இல்லாதவர்களிடம் அரசும், நீதித்துறையும் அக்கறையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர் வலியுறுத்தினார். சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிந்த பிறகும் அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத குடும்பங்கள் குறித்தும் அவர் கவனப்படுத்தினார். இத்தகைய கைதிகளுக்கு நிதியுதவி அளிக்க இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் விடுதலைக்கு உதவும் வகையில் மத்திய அரசால் மாநிலங்களுக்கு  நிதி உதவி வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

“தர்மத்தைப் பாதுகாப்பவர்களை தர்மம் பாதுகாக்கிறது”, என்ற ஒரு ஸ்லோகத்தை மேற்கோள் காட்டிய பிரதமர், அது நமது ‘தர்மம்’ என்பதையும், தேசத்திற்கான பணி முதன்மையாக இருப்பது ஒரு நிறுவனமாக நமது பொறுப்பு என்பதையும் கோடிட்டுக் காட்டினார். இந்த நம்பிக்கைதான் நாட்டை ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும் என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவுசெய்தார்.

அசாம் ஆளுநர் திரு  குலாப் சந்த் கட்டாரியா, அசாம் முதலமைச்சர், திரு  ஹிமந்த பிஸ்வா சர்மா, அருணாச்சலப்  பிரதேச முதலமைச்சர், திரு பேமா கண்டு, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர்  திரு கிரண் ரிஜிஜு, உச்ச நீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய், குவாஹத்தி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்தீப் மேத்தா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பின்னணி

குவாஹத்தி உயர் நீதிமன்றம் 1948 இல் நிறுவப்பட்டது. 2013 மார்ச் மாதத்தில் மணிப்பூர், மேகாலயா, திரிபுரா  மாநிலங்களுக்குத் தனி உயர் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் வரை இது அசாம், நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய ஏழு வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொது நீதிமன்றமாக செயல்பட்டது.   குவஹாத்தி உயர் நீதிமன்றம் இப்போது அசாம், நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. இதன் முதன்மை இருக்கை குவாஹத்தியிலும், மூன்று நிரந்தர பெஞ்சுகள் கோஹிமா (நாகாலாந்து), ஐஸ்வால் (மிசோரம்) இட்டாநகர் (அருணாச்சலப் பிரதேசம்) ஆகியவற்றிலும் உள்ளன.

***

AD/CJL/SMB/DL



(Release ID: 1916661) Visitor Counter : 168