குடியரசுத் தலைவர் செயலகம்

இந்திய குடியரசுத் தலைவர் சுகோய் 30 எம்கேஐ ரக போர் விமானத்தில் வரலாற்று சிறப்புமிக்க பயணம்

Posted On: 08 APR 2023 1:04PM by PIB Chennai

இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஏப்ரல் 8, 2023) அசாமில் உள்ள தேஜ்பூர் விமானப்படை நிலையத்தில் சுகோய் 30 எம்கேஐ ரக போர் விமானத்தில் வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை மேற்கொண்டார். பிரம்மபுத்திரா மற்றும் தேஜ்பூர் பள்ளத்தாக்குகளில் சுமார் 30 நிமிடங்கள் பறந்து இமயமலையை பார்வையிட்டு விமானப்படை நிலையத்திற்கு திரும்பினார்.

 

இந்த விமானத்தை 106 படைப்பிரிவின் கமாண்டிங் அதிகாரி குரூப் கேப்டன் நவீன் குமார் ஓட்டினார். விமானம் கடல் மட்டத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் உயரத்திலும், மணிக்கு சுமார் 800 கிலோமீட்டர் வேகத்திலும் பறந்தது. குடியரசுத் தலைவர் முர்மு இது போன்ற ஒரு முயற்சியை மேற்கொண்ட மூன்றாவது குடியரசுத் தலைவர் மற்றும் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் ஆவார்.

பின்னர் பார்வையாளர் புத்தகத்தில், குடியரசுத் தலைவர் தனது உணர்வுகளை ஒரு சுருக்கமான குறிப்பாக எழுதினார். அதில் அவர் "இந்திய விமானப்படையின் வலிமைமிக்க சுகோய்-30 எம்கேஐ ரக போர் விமானத்தில் பறப்பது எனக்கு ஒரு உற்சாகமான அனுபவம். இந்தியாவின் பாதுகாப்புத் திறன் நிலம், வான் மற்றும் கடல் ஆகிய அனைத்து எல்லைகளையும் உள்ளடக்கும் வகையில் அபரிமிதமாக விரிவடைந்துள்ளது என்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்திய விமானப்படை மற்றும் விமானப்படை நிலையமான தேஜ்பூரின் முழு குழுவையும் இந்த ஏற்பாட்டுக்காக நான் வாழ்த்துகிறேன்.

 

விமானம் மற்றும் இந்திய விமானப்படையின் (IAF) செயல்பாட்டு திறன்கள் குறித்தும் குடியரசுத் தலைவருக்கு விளக்கப்பட்டது. இந்திய விமானப்படையின் செயல்பாட்டுத் தயார்நிலை குறித்து அவர் திருப்தி தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் சுகோய் 30 எம்கேஐ ரக போர் விமானத்தில் மேற்கொண்ட இந்த பயணம், ஆயுதப் படைகளுடன் இணைந்து செயல்படும் அவரது முயற்சிகளின் ஒரு பகுதியாகும். 2023 மார்ச் மாதம்குடியரசுத் தலைவர் ஐஎன்எஸ் விக்ராந்தைப் பார்வையிட்டதோடு அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

***

CR/SM/DL



(Release ID: 1914877) Visitor Counter : 152